மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 1
மினசோட்டா தமிழ்ச்சங்கத்தினர், தமிழ் மரபு கலைகளைப் போற்றும் விதத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழர் இசையான நாதஸ்வரம், தவில் மற்றும் பறையிசையை இங்குள்ளவர்கள் பயிலும் வண்ணம் தமிழகத்திலிருந்து இவ்விசைக் கலைஞர்களை வரவழைத்துள்ளனர்.
திரு. ராமச்சந்திரன், நாதஸ்வர இசையிலும், திரு. சிலம்பரசன் தவில் இசைப்பதிலும், திரு. சக்தி பறையிசையிலும் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர்கள்.
கடந்த சில வாரங்களாக இவர்கள், மினசோட்டாவில் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகின்றனர். பனிப்பூக்கள் சார்பில் இக்கலைஞர்களுடன் ஒரு நேர்முக உரையாடலுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் ஒரு பகுதி இதோ உங்களுக்காக.
கேள்வி : உங்களுக்கு பறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது.
சக்தி: நான் கோவைல இருக்கேன். MCA முடிச்சிட்டு கணினித் துறையில் பணியாற்றுகிறேன். ஆறு வருடமாக பறை வாசித்துக்கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் திருவிழாக்களுக்குச் போகும் பொழுது பறையிசை கேட்டு அது பிடித்துப் போய்விட்டது. பள்ளியில் படிக்கையில் ஒரு இசைக்குழு வைத்திருந்தேன். பறை மாதிரி துடும்பு என்ற ஒரு இசைக்கருவி உள்ளது. அதை வாசிக்கத் துவங்கினேன். காலேஜ் படிக்கும் பொழுது அழிந்து வரக்கூடிய கலைகள் என்னென்ன என்று பார்க்கும்பொழுது எனக்குப் பறை கற்றுக்கொள்ள ஆவல் ஏற்பட்டது.
கேள்வி : நீங்கள் MCA படித்திருக்கிறீர்கள், நீங்கள் இப்படிக் கலைப் பாதையில் செல்வது குறித்து உங்கள் வீட்டில் வரவேற்பு எப்படி இருந்தது?
சக்தி: நான் சிறு வயதிலிருந்தே கச்சேரிகளுக்குச் சென்று ரசித்தவன். அப்பாவுக்குக் கும்மி பாட்டு என்றால் பிடிக்கும். அதனால், நான் சிறியவனாக இருக்கும் பொழுது, எங்கு நிகழ்ச்சி நடந்தாலும் அழைத்து செல்வார்கள். நூறு இருநூறு பேர் துடும்பு வாசிப்பது கண்டு வியந்து ரசித்திருக்கிறேன். அப்பா அம்மாவிடமும் கலை ஆர்வம் உள்ளதால் என் இசைக்கு ஆதரவு தருகிறார்கள்.
ஆனால் படித்த படிப்புக்கு ஏதாவது வேலை செய்யவேண்டும் என்பதால், இணையத்தள வடிவமைப்பு ( web designing) வேலை செய்கிறேன்.
கேள்வி : மாம்பலம் ராமச்சந்திரன், நீங்கள் நாதஸ்வரம் எப்படி கற்றுக்கொண்டீர்கள்?
ராமச்சந்திரன்: நான் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தேன். என் அம்மாவின் தந்தை மாம்பலம் A.K. ஜெயராமன் ஒரு பெரிய நாதஸ்வர வித்வான். என் தந்தையும் நாதஸ்வரம் வாசிப்பார். என்னுடைய சிறுவயதிலேயே என் தந்தை இறந்துவிட்டார். அதனால் நாங்கள் மாம்பலம் வந்துவிட்டோம். நான் பனிரெண்டு வயதிலிருந்து என் தாத்தாவிடம் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பிறகு அடையார் இசை கல்லூரியில் சேர்ந்தேன்.அதை முடித்தபின்பு தமிழ் இசைக் கல்லூரியில் தேவார கீர்த்தனைகள் எல்லாம் கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு தமிழ்நாடு இயல் இசை நாடகம் பற்றி ஒரு வருடம் கல்லூரியில் கற்றுக்கொண்டேன். பிறகு B.A. (இசை) படித்தேன். சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் B-கிரேட் பணியில் இருக்கிறேன்.
இப்பொழுது சென்னையில் சில மாணவர்களுக்கு வீட்டில் குருகுலம் வைத்து பாடம் கற்றுத்தருகிறேன்.
கேள்வி (ராமச்சந்திரன்): உங்கள் குருகுலத்தைப் பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்களேன்.
ராமச்சந்திரன்: என் வீட்டிலேயே சில மாணவர்கள் தங்கி நாதஸ்வரம் கற்றுக்கொள்கிறார்கள். சிலர் பள்ளி விடுமுறையில் வந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். நன்றாக கற்றுக்கொள்ள இரண்டு வருடம் ஆகும். விரலை வைத்து வாசிப்பது பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், நாபியிலிருந்து அந்த ஓசை வருவதற்கு நல்ல பயிற்சி தேவை.
நாதஸ்வரம் அசுர வாத்தியம் என்று சொல்வார்கள். எங்கள் வீடு சொந்த வீடு என்பதாலும் அக்கம்பக்கம் வீட்டார்க்கு எங்கள் வீடு பற்றி தெரியும் என்பதாலும் எங்களுக்கு எந்த இடையூறும்இல்லை. நான் கற்றுக்கொடுப்பது இருப்பத்தைந்து சதவிதம். நிறைய கச்சேரிகள் கேட்டு சாதகம் செய்தால் தான் மற்றவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு நாங்கள் கோவில்களிலும் மகா பெரியவர் சங்கர மடத்திலும் வாசிப்போம். மாணவர்களும் மாலை நேரத்தில் கோவிலில் வாசிப்பார்கள். காலையில் ஐந்து மணிக்குச் சாதகம் துவங்கும். முதலில் வாய்ப்பாட்டு சொல்லிவிட்டு பிறகு நாதஸ்வரம் கற்றுக்கொள்வார்கள். வாய்ப்பாட்டு பாடினால் தான் அந்த ராகபாவம் வரும்.
ஸ்வரங்கள் சரிகமபதநி தான். ஆனால் பாடும்பொழுது தான் எந்த ஸ்வரம், அதற்கு எப்படி குரலோசை கொடுக்கவேண்டும் என்று தெரியும்.
கேள்வி : சிலம்பரசன், உங்களுக்கு தவில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது?
சிலம்பரசன்: நான் பள்ளியில் இருக்கையில் இசைக்குழுவில் ட்ரம்மராகச் (drummer) சேர்ந்தேன். பதினேழு வயது வரை ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தேன். பிறகு அடையாறு இசைக் கல்லூரியில் சேர்ந்து தவில் கற்றுக்கொண்டேன். திருகன்னபுரம் S. ஜெயச்சந்திரன் தான் எனக்கு குரு. அவரிடம் கற்று தங்கப் பதக்கம் வாங்கியுள்ளேன்.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பல கச்சேரிகளில் வாசித்துள்ளேன். மறுபடியும் மிருதங்கம் படிக்கலாம் என்று அரசு கல்லூரியில் சேர்ந்தேன். அதைப் படித்து, அதிலும் தங்கப் பதக்கம் வாங்கினேன்.
கேள்வி : ஆச்சரியமாக உள்ளது சிலம்பரசன். உங்களுக்கு எத்தனை கருவிகள் வாசிக்கத் தெரியும்?
சிலம்பரசன்: எனக்கு ட்ரம்ஸ், தவில், மிருதங்கம், கஞ்சீரா, டிரிபுல் காங்கோ (Triple Congo), பாங்கோஸ் (Banjos) போன்ற கருவிகள் வாசிக்க தெரியும். என் குடும்பத்தில் யாரும் இசைத் துறையில் இல்லை. அவர்கள் IT போன்ற துறைகளில் பணியாற்றுகிறார்கள். என் குடும்பத்தில் நான் தான் முதலில் இசைத் துறைக்கு வந்துள்ளேன். முதலில், என் குடும்பத்தில் சற்று தயங்கினார்கள். இப்பொழுது அவர்கள் என் வளர்ச்சியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கேள்வி : உங்களுக்கு பல கருவிகள் வாசிக்க தெரியும் என்று கூறினீர்கள். ஒரு கருவி கற்றுக் கொண்டால் மற்ற கருவிகள் வாசிக்க கற்றுக்கொள்வது சுலபமா?
சிலம்பரசன்: சொல்கட்டு என்பது, நாம் வாசிப்பதை வாயில் சொல்வது. அந்தச் சொல்கட்டு எல்லா கருவிகளுக்கும் ஒன்று தான். அனால், வாசிப்பது முழுக்க முழுக்க வேறுபடும். எல்லா லய கருவிகளுக்கும் சொல்கட்டு ஒன்றாக இருந்தாலும் வாசிப்பது, கருவியைப் பிடிக்கும் விதம் எல்லாம் வேறுபடும்.
(தொடரும்)
Musicians Interview
(பாகம் 2)
- தொகுப்பு : பிரபு.
Tags: கஞ்சீரா, டிரிபுல் காங்கோ (Triple Congo), ட்ரம்ஸ், தவில், திருகன்னபுரம் S. ஜெயச்சந்திரன், துடும்பு, நாதஸ்வரம், பறை, பாங்கோஸ் (Banjos), மாம்பலம் A.K. ஜெயராமன், மிருதங்கம்