கர்மா….
”ஏன்னா, நம்ம ஷாலு சொல்றதக் கேட்டேளா?”
சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் காஃபியைக் கையில் கொடுத்துக் கொண்டே, கேட்டாள் சாரதா.
“எதப்பத்தி சொல்றே?” அவளின் கேள்வியில் பெருமளவு ஆர்வம் காட்டாமல், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேம்.
“அதான்னா… நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை… நான் சொன்னாக்கா, கேக்க மாட்டான்னு தோண்றது.. நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்கோளேன்.”`
“என்னம்மா பிரச்சனை? நம்மதான் அவ்வளவு பேசினோமே, இன்னுமென்ன… நீயுந்தான் அவளோட சாய்ஸ்க்கு ஓ.கே. சொல்லிட்டியே….”
“அதான்னா… எனக்குக் காதல் மேலயெல்லாம் ஒண்ணும் வெறுப்பில்லை.. நம்ம கல்யாணமே அப்டித்தானே.. அதுவும் இருபத்தெட்டு வருஷத்துக்கு முன்னால”… சாரதா தொடர, ஒரு நிமிடம் அந்தக் கால நினைவுகள் வந்து போனது பிரேமுக்கு.
எவ்வளவு வேலைகளைத் திருட்டுத்தனமாகச் செய்திருப்பான் அவன். நண்பர்களின் உதவியுடன், சுவரேறிக் குதித்து, மொட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்று…..
நினைத்துப் பார்க்கையிலே ஒரு விதமான சந்தோஷமும் வெட்கமும் சேர்ந்து கொண்டது. இரண்டு வருடங்களுக்கு மேல் காதலித்தனர் இருவரும். வெவ்வேறு சாதி, வெவ்வேறு பழக்க வழக்கங்கள். பிரேமின் அப்பா அந்தக் கிராமத்து ஜமீந்தாரர். திரைப்படங்களில் வருவதுபோல் இல்லாவிட்டாலும், கிராமப் பஞ்சாயத்து நடப்பது என்பது நிஜமே.. பிரேமின் தந்தை சொல்வதே தீர்ப்பு. தனக்கு அதிகாரமிருக்கிறது என்பதால் மனம்போன போக்கிலெல்லாம் செய்து விடமாட்டார். ஒரு நீதிபதிக்கிருக்க வேண்டிய நேர்மையுடன் செயல்படுவார். வேண்டுமளவுக்கு விசாரணைகள் செய்து முடித்து, கிராமத்தில் இருக்கும் இன்னும் சில பெரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கடைசியில் தனக்குச் சரி என்று முழுவதுமாய்த் தெரிந்தவற்றை மட்டுமே தீர்ப்பாக வழங்குவார்.
அவர், சாதிவிட்டுச் சாதி திருமணம் செய்து கொள்வதைச் சற்றும் ஏற்காதவர். தனது மகன் தன் சாதிவிட்டு அக்கிரகாரத்துப் பெண்ணைக் காதலிக்கிறான் என்றவுடன் முழுவதுமாய்க் கொதித்துப் போய்விட்டார் அவர். உறுதியாய் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டார் அவர். சாரதாவின் பெற்றோருக்குப் பெருமளவுக்கு எதிர்ப்பு இல்லையெனினும், ஜமீந்தாருக்குப் பிடிக்காததைச் செய்வதில்லை என்ற நிலையில், அவர்களும் இந்தத் திருமணத்தை எதிர்த்தனர்.
அவ்வளவு எதிர்ப்பையும் மீறி, சாரதாவைத் தூக்கிக் கொண்டுபோய், பக்கத்து டௌனிலுள்ள ரெஜிஸ்ட்ரார் ஆஃபிசில் வைத்துத் தாலி கட்டினான் பிரேம். நேற்று நடந்தது போலிருந்த இந்த நிகழ்வு நடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
மனதுக்குள் அமைதியாய்ச் சிரித்துக் கொண்ட பிரேமை, “ஏன்னா, நாம்பாட்டுக்குப் பேசிண்டே இருக்கேன், என்ன பெரிய யோஜனைல மூழ்கிட்டேள்?” என்ற சாரதாவின் குரல் எழுப்பியது.
”என்னதான் பிரச்சனை இப்போ? சொல்லும்மா….” என்றிழுத்தான்.
”ஷாலு சொல்றா, அவ லவர் டெல்லிக்கு மாத்தலாயிட்டாராம்… அவளும் ஆஃபிஸில டெல்லிக்கு மாத்தல் கேட்டுண்டு போப்போறளாம்”……
இதனைக் கேட்டவுடன் தனது உடலுக்குள் கைவிட்டு, உயிரினைப் பிடித்து யாரோ உருவி எடுத்துக் கொண்டு செல்வதுபோல் உணர்ந்தான் பிரேம். “வாட்…. வாட் ஆர் யூ டாக்கிங்க் அபவுட்? என்ன… அவள விட்டுட்டு நாம எப்படி? கம் ஆன்……”
என்று சொன்ன கணவனை ஒரு கணம் பார்த்த சாரதாவின் மனதிலும் ஃப்ளாஷ் பேக் ஓடத் தொடங்கியது…
“சாரதா… அம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கோடி… நீ காதலிக்குறதுகூட எங்களுக்குப் பெரிசுல்ல… அந்த ஜமீந்தாருக்காப் பயந்து கண்காணாத தேசத்துக்குப் போக வேண்டியிருக்கும்மா… யோசிச்சுப் பாரு… அப்பா உன் மேல எத்தன பாசம் வச்சிருக்கார்னு… அவரால உன்னப் பாக்கமா ஒரு நாள் இருக்க முடியுமா… பிராணம் போயிடுண்டி….”
அழுதுகொண்டே புலம்பிய அம்மாவின் முகமும், அந்த அழுகையிலாவது தன் மனதை மாற்றிக் கொண்டுவிட மாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் அப்பாவியாய்த் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் முகமும் மனதுக்குள் வந்துபோனது. தன் அப்பாவின் அந்த முகத்திற்கும், தன் கண்ணெதிரே கலங்கி வீற்றிருக்கும் கணவனின் முகத்திற்கும் எள்ளளவு வித்தியாசமும் தெரியவில்லை சாரதாவிற்கு.
– வெ. மதுசூதனன்.