தந்தையெனும் உறவு
செல்வமெனக் குழந்தை ஜனித்த பொழுதில்
சொல்ல வார்த்தையின்றி உருகிய உள்ளம்!
செல்லச்சேய் கரங்களில் தவழ்ந்த பொழுதில்
மெல்லப் பூத்திட்ட விழிநீரில் பெருமிதம்!
தந்தை எனும் பொறுப்புயர்வு அடைந்ததும்
சிந்தை எலாம் குழந்தை நினைந்து
நிந்தை எலாம் புறந்தள்ளி உழலும்
விந்தை பலபுரிந்து நிற்கும் நற்சொந்தம்!
தான் காணப் பெறாத உலகத்தை
வான் ஏறித் தொடாத உச்சத்தை
சான்றோனாய்த் தன் பிள்ளை அடைந்து
மாண்புற வேண்டி ஏங்கும் நெஞ்சம்.
நடை பயின்ற தளிர் பருவத்தில்
கடை விரல்பிடித்துப் பழக்கிய பக்குவம்
தடையற்று ஓடும் இளமை வெள்ளமதை
மடையிட்டுச் சீராற்றல் ஆக்கும் அனுபவம்!
தோள்மீது தூங்கும் சேய்க்கு இன்னலெனில்
வாள் தூக்கிப் போரிடும் வீரம்
தோல்வி விளிம்பில் துவளும் மக்களைக்
கோல் கொடுத்துக் காக்கும் நெஞ்சுரம்!
இத்தனை அருங் குணங்கள் மட்டுமின்றி
அத்தனை அருளும் வழங்கும் இரட்சகன்.
எத்துணை உறவுகள் உடன் வந்தாலும்
சித்துருவென நெஞ்சில் நிலைத்திட்ட முதலுருவம்.
– அருகன்