நாங்கெல்லாம் அப்பவே அப்படி …
“ஏங்க, வித்யா ஹஸ்பெண்ட் டெபுடேஷன்ல சிகாகோ போறாராம். அவர் கிட்ட ‘திவான் அவென்யுலேர்ந்து’ ரெண்டு கிலோ உளுந்தும், கார அரிசியும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அவரா சொமந்துகிட்டு வரப் போறார்.. கார் தானே சொமக்கப்போது”.
“சொன்ன ஒடனே திரும்பிப் பாக்காதீங்கோ.. பின்னாடி ப்ளு கலர் டி-ஷர்ட் போட்டுண்டு வராரே .. பாக்க நம்மவா மாதிரி தெரியறது .. பேச்சுக் கொடுத்துப் பாருங்கோ.”
“அவன்
‘Straight from Bangladesh’ ன்னு டி-ஷர்ட் போட்டுருக்கானேடி”
“இருந்துட்டு போறது … பக்கத்துத் தேசம் தானே பேச்சுக் கொடுங்கோ”
“தர்ட் ஃப்ளோர் நரசிம்மனும் வரானாம்… மொத்தம் எட்டுப் பேரு ..அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.. உன் டொயோட்டா கரோலாக்கு இன்னிக்கு க்வாலிட்டி டெஸ்ட் .. 76மைல் தானாம் … நேத்தே ‘ட்ரிபிள் ஏ’ (AAA) போயி மேப் பிரிண்ட் பண்ணி வாங்கிட்டேன்.. நாப்பது கொயர் நோட்புக் மாதிரி கொடுத்திருக்கான் .. நேராப் போறோம், இந்தியன் ரெஸ்டாரண்டல தோசையை ஒரு கட்டு கட்றோம்.. திரும்பி வரோம்.. இந்த வீக் எண்டு செமையா இருக்கப் போது.”
இதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னர் மினசோட்டாவில் இருந்தவர்கள் கண்டிப்பாகப் பேசி, கேட்டிருக்கக் கூடிய வசனங்கள். தமிழரைப் போல, அல்லது இந்தியரைப் போல அல்லது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வந்த முகங்களைப் பார்க்கும்பொழுது, பெற்றவர்களைப் பார்ப்பது போல சந்தோஷம் பிறந்த காலமது.
அதிர்ஷ்டவசமாக எங்கோ கடை கண்ணியில் வழக்கமான இந்தியர் போல் ‘இவனும் அமெரிக்காவுக்கு வந்துட்டானா களை புடுங்க’ என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளாமல், சிநேகமாகப் புன்னகைக்கும் இந்தியரைக் கண்டால் அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். அதிலும் அவன் அருகே வந்து கைகுலுக்கி “டூ ஐ நோ யூ..யூ லுக் ஃபெமிலியர் டு மீ” என்று சிரித்து, “கல்கட்டா நேடிவ் .. என் மாமா சென்னைக்கு ஒரு வாரம் வந்திருக்கார் .. லவ்லி சிட்டின்னு சொல்லுவார் ..
இங்க இண்டெர்நெட் பிசினஸ் பண்றேன்.. பார்ட்னர்ஷிப் தேடிக்கிட்டிருக்கேன்.. உங்களைப் பார்த்ததும் ஏதோ ஒரு ஸ்பார்க்.. ஃபோன்ல பேசலாம் ..”
என்று அட்டையை நீட்டினால், பில் கேட்ஸின் தம்பியாக நினைத்து, பயபக்தியோடு வாங்கி பர்மா பஸார் பர்ஸில் செருகிக்கொண்ட காலம்.
படேல் பிரதர்ஸ் VHS கேசட்டில், கோடுகோடாக வந்து போகும் வீடியோவில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே முகம் தெரியும் மது பாலாவை, ‘உன் உதட்டோர சிவப்ப ..’ என்று பிரபு வர்ணிப்பதை அபார்ட்மெண்டில் இருக்கும் அத்தனை தமிழ்க் குடும்பங்களும் சேர்ந்து பீட்சா சாப்பிட்டுக்கொண்டே சிலிர்த்து ரசித்த காலம்.
நிமிடத்துக்கு எழுபத்தியெட்டு சென்ட் ஃபிரான்டியர் காலிங்கார்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் “யப்பாடி .. நல்லாருக்கியா .. கண்லேயே நிக்கற .. ஒரு எட்டு வந்துட்டுப் போ” எனும் பாட்டியின் குரல் கேட்டு கண்களில் நீர் துளிர்த்த காலம்.
இன்று எல்லாம் மாறி விட்டன.
“சட்டினிக்கு தாளிக்க வெச்சிட்டேன் .. ஃபிரிட்ஜ்லே பொட்டு கறிவேப்பிலை கூட இல்லை.. கொஞ்சம் போயி வாங்கிட்டு வந்துடறீங்களா? நடக்க சோம்பேறித்தனப்பட்டுகிட்டு தெருமுனைலே இருக்க ‘இந்தியன் பஜார்ல’ வாங்காதிங்க .. இன்னும் நாலடி நடந்து ‘லிங்கம் மார்ட்’ல வாங்குங்க … ரெண்டு இனுக்கு கூட தருவான்” என்ற ரீதியில் வந்துவிட்டது.
ஆமாம். ஏறத்தாழ இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இன்னும் சொல்லப் போனால் சென்னை குரோம்பேட்டை, திருச்சி பீமா நகர், மதுரை கே.கே. நகர் போன்று மினியாபொலிஸ் சுற்றுப்புறங்களில் தமிழர், தெலுங்கர் இனக் குழுக்கள் வாழும் குட்டி குட்டி நகரங்கள் உருவாகி வருகின்றன.
பெரும்பான்மையான குழந்தைகள் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை, கிரிக்கெட், கபடி எனத் தமிழர்களுக்கு நெருக்கமான கலை, விளையாட்டுகளைப் பயில்கின்றனர். தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழி பயில்கின்றனர். தமிழ் மொழிக்கான மதிப்பீட்டுப் புள்ளிகள் பெறுகின்றனர். மினசோட்டா மாநிலக் கல்வித் துறை தமிழ் மொழியை அங்கீகரிக்கத் துவங்கிவிட்டது. தமிழ்ச் சங்கங்கள் வாழையிலையில் விருந்து படைக்கின்றன. இந்துக் கோயில், வெங்கடேஸ்வரா கோயில், சின்மயா மிஷன், சாய்பாபா மந்திர், சீக்கியர் கோயில், தமிழர் தேவாலயங்கள் என ஏராளமான ஆன்மிகத் தலங்கள் அமைந்துள்ளன. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், வருடப் பிறப்பு நாட்களில் தமிழ்நாட்டை விட அமோகமான சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சமீப காலமாக பொங்கலுக்குக் கரும்பு கூட கிடைக்கின்றது.
மாதத்துக்கு ஒரு முறையாவது ஏதேனும் தமிழர் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்திலிருந்து பிரபலங்கள் வந்த வண்ணமுள்ளனர். அவர்கள் தமிழகத்தில் கேட்டு, கண்டிராத தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, பறையிசை போன்றவற்றை மினசோட்டாவில் நிகழ்வது கண்டு வியக்கின்றனர். தற்சமயம் சிலர் நாதஸ்வரம், தவில் பயிற்சி பெற்று வருகின்றனர். வருமாண்டுகளில் இங்கு மங்கலயிசை முழங்கும்.
தொழில்நுட்பம் உலகத்தைச் சுருக்கி, உறவுகளை மிக நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மூன்று தெருக்கள் தள்ளியிருக்கும் பெற்றோருடன் தொலைபேசியில் பேச நேரமில்லாது தவிக்கின்ற சிலர் உள்ளபோது, நாம் அன்றாடம், முகம் பார்த்துக் கூட பேச முடிகிறது.
இந்திய மொழி திரைப்படங்களுக்கான பிரத்யேகத் திரையரங்குகள் மட்டுமில்லாது, உள்ளூர்த் திரையரங்குகளிலும் இவை வரத் துவங்கிவிட்டன. தமிழகத்தில் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே மினசோட்டாவில் இருப்பவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகின்றனர்.
பல இந்திய உணவகங்கள் முளைத்த வண்ணமுள்ளன. ஒரு காலத்தில் வெளியில் செல்ல நேர்ந்தால் பீட்ஸா மட்டுமே சாப்பிட்ட தமிழர் பலர், தற்போது ஆந்திரத்துச் சமையல், தமிழகச் சமையல், கர்நாடகச் சமையல், கேரளச் சமையல், வட இந்தியச் சமையல் எனத் தேர்வு செய்து சாப்பிடுமளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. நம்மூரில் இருப்பதைப் போல அம்பிகா அப்பளம், கங்கா ஸ்வீட் ஸ்டால், ஐயங்கார் பேக்கரி, அருண் ஐஸ்கிரீம், தலப்பாக்கட்டு பிரியாணி, வெங்கடேஸ்வரா ஃபில்டர் காபி கடை, மீனாட்சி ஜிகர்தண்டா ஸ்டால் போன்றவையும் விரைவில் வந்துவிடும்.
மினசோட்டா குளிர் உயிரை மாய்த்துவிடாது என இந்தியர்கள் உணரத் துவங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. ஒரு வேளை கலிஃபோர்னியா, நியூ ஜெர்ஸி, அட்லாண்டா, சிகாகோ போன்ற மாநில / நகரங்களில் வேலைவாய்ப்புகள் உச்சவரம்பைத் தொட்டுவிட்டதால் மினசோட்டாவை நோக்கிப் படை எடுக்கின்றனரா என்பதும் தெரியவில்லை.
எது எப்படியோ, மினசோட்டாவில் தமிழ் வாழ்வு முறைகள் பெருகி, இணக்கமான, வலுவானதொரு தமிழ்ச் சமூகம் நிலைத்தால் மகிழ்ச்சியே!!
– அருகன்