\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒரே ஒரு சந்திரன் ..

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத,  ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி  பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் இவரை மிக நல்ல மனிதர் என்றே போற்றியுள்ளனர். இளமைக் காலங்களில் வறுமையில் துவண்டபோதும், பின்னர் செல்வத்தில் புரண்ட போதும் இவரை எளியோரின் நண்பன் எனப் பாராட்டினர். நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தமக்கென ஒரு பாணியை, பாதையை வகுத்துக் கொண்டு வெற்றி பெற்றவர். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், இதயக்கனி எனப் பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். எனும் பெயர் இவரை உலகமறியச் செய்தது.

2017 ஜனவரி 17ஆம் நாளோடு, எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டுகள் நிறைவுற்றுவிட்டன. தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான, வெற்றிடச் சூழலும் எம்.ஜி.ஆர். இன் நூற்றாண்டினை மழுங்கச் செய்துவிட்டன என்றால் மிகையில்லை.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, அரசியல் எனப் பல துறைகளில் பரிணமித்து, பரிமளித்திருந்தாலும் திரைத்துறையில் அவரது பயணத்தை நோக்கினால், அப்போதைக்குப் பிரபலமாயிருந்த  ஒரே வெகுஜன ஊடகத்தை, மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் எம். ஜி. ஆர் என்று புரியும்.

ஒரு நடிகராக வாழ்க்கையைத் துவங்கி, பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்த போதிலும் அந்த அனுபவங்களை அடித்தளமாக அமைத்துக் கொண்டு, தனது ரசிகர்களது நாடித் துடிப்பைக் கச்சிதமாகப் படித்தறிந்து வெற்றிக்கான  சூத்திரத்தை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். தொண்டையில் குண்டடிப்பட்டு குரல் சேதமடைந்த பின்னர், பின்னணி பேச வசதிகள் இருந்த போதிலும், தனது சொந்தக் குரலில் பேசி, உடைந்து போன உச்சரிப்பையும் மீறி ரசிகர்களைச் சென்றடைந்தார்.

நடிகர் திலகம் என்ற இமயம் எதிரே இருந்த போது, அதனுடன் முட்டி மோதாமல் அதைச் சுற்றிலும் நதியாக ஓடி, பலரது இதயங்களில் இடம் பிடிக்கும் லாவகத்தைப் புரிந்து வைத்திருந்தவர். ஏறக்குறைய 135 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். ஒவ்வொரு காலகட்டத்திலும், தனது போட்டியாளர்களைப் புரிந்து கொண்டு தனது பாதையை மாற்றிக் கொண்டார் என்றால் அது மிகையில்லை.

உதாரணமாக, ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்க எம்.ஜி.ஆரைத்தான் அணுகினார்களாம். நிஜ வாழ்க்கையில் பலருக்கும் உதவி வந்த அவரைக் கர்ணனாக நடிக்க வைத்தால் படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று எண்ணப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் விக்கிரமாதித்தன், அரசிளங்குமரி, ராணி சம்யுக்தா போன்ற வரலாற்றுப் படங்கள் சரியாகப் போகாத நிலையில் மற்றொரு சரித்திரப் படம் வேண்டாம் என்று நினைத்த எம்.ஜி.ஆர். அதைத் தவிர்த்தார். பின்னர் சிவாஜி கணேசன் அப்படத்தில் நடிக்கிறார் என்று அறிந்ததும், அதற்கு வலுவான போட்டியாக வேட்டைக்காரன், என் கடமை, பணக்காரக் குடும்பம், தெய்வத் தாய், தொழிலாளி, படகோட்டி  போன்ற  ஜனரஞ்சக, எளிய மக்களைக் கவரும் சமூகப்படங்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.  

மிகப் பெரிய தொழிலதிபராக வரும் அன்பே வா படமானாலும், துப்பறிவாளராக வரும் தெய்வத்தாய் படமானாலும், போலீஸ்காரராக வரும்  என் கடமை  படமானாலும் ஏழை மக்களுக்கு உதவுபவராகத் தனது கதாபாத்திரம் அமையுமாறு பார்த்துக் கொண்டார்.

சாமான்ய மக்கள் இவரைப் போல் ஒரு தலைவர் வேண்டுமென நினைத்தனர் ; தாய்மார்கள் இவரைப் போலொரு பிள்ளை வேண்டுமென நினைத்தனர் ; இளம் பெண்கள் இவரைப் போல் காதலனோ, கணவனோ கிடைக்க வேண்டுமென நினைத்தனர்; இளைஞர்கள் இவரைப் போல் உடல் பெற வேண்டும், உடையணிய வேண்டுமென நினைத்தனர்; முதியோர், இவரைப் போல ஒரு ஊன்றுகோல் நமக்கு கிடைக்குமாவென ஏங்கினார்கள். சிறு பிள்ளைகள் இவரைப் போலொரு அண்ணன் வேண்டுமென எண்ணினர்.

இப்படியொரு அன்பை, ஆதரவைப் பெற இவரால் மட்டும் எப்படி முடிந்தது. மூன்று மணி நேர சினிமா மூலம் மட்டுமே இவை சாத்தியமானதா?

இந்த அபிமானத்தை, தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்குப் பலம் சேர்ப்பதற்காக மட்டுமே அவர் பயன்படுத்திக் கொண்டாரா?

வரப்போகும் பகுதிகளில் காணலாம். உங்களது கருத்துகள் என்ன என்பதையும் எங்களுக்கு எழுதுங்கள்.

– ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad