ஜெகத்காரணி
அகம் குளிர்ந்திடவே “ஜெகத்காரணி” எனும் தெய்வீக ஆடற் கதை, அழகுறு சக்தி வடிவங்களாய் , ‘நிருத்திய கலாசேக்ஷ்தினரால்’ சித்தரிக்கப்பட்டு, 2017 ஆனி மாதம் 17ஆம் நாள் சனிக்கிழமையன்று, வண்ணமுற வழங்கப்பட்டது.
மினசோட்டாவில் அமைந்திருக்கும் மகிமைமிகு இந்து ஆலயத்தில், ‘நவ சந்தி’ எனும் மாபெரும் ஹோமம் நிகழ்ந்து , 11ஆவது வருட விழாவாகிக் கனிந்திடவே, ஜெகம் புகழுறு “ஜெகத்காரணி”யின் அருட்பிரசாதமாய், இக்கலை நிகழ்ச்சி, இனிதாய் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடற்கதையினை வடிவமைத்து நெறிப்படுத்தியவர் , “நிருத்திய கலாசேஷ்திர மன்றத்தின்” இயக்குநரான, ஶ்ரீமதி சிவானுஜா பாலாஜி அவர்களாவார். முதற்கண், இவ் ஆடற்கதையின் இசைப்பதங்களைத் தந்து உதவியர் “ஶ்ரீதேவி நிருத்தியாலய நிறுவனத்தின்” இயக்குநரான ஶ்ரீமதி ஷீலா உன்னி. ஆடற் கதையில் பிரசவித்த “சாமுண்டி, மகிடாசுரமர்த்தினி, காளிதேவி” போன்ற அனைத்து கதாபாத்திரங்கட்கும் இந்து ஆலயத்தினார் உதவினார்கள். ‘நிருத்திய கலாசேஷ்திர மன்றத்தின்’ நேரிய இலட்சியமானது, நம் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டினை ஆடல்வடிவம் ஊடாகப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, எம் ஆடற் கலைக் கோலங்கள் , திக்கெட்டும் திவ்யமலர்களாய்க் கமழ்ந்து , நீடுவாழ வேண்டுமென்றதொரு பேராவலே ஆகும்.
“வாழ்கவெம் தெய்வீக ஆடற்கலை!!”
அன்றைய நிகழ்வில் எமது பிரதம படப்பிடிப்பாளர் திரு. ராஜேஷ் கோவிந்தராஜன் எடுத்த புகைப்படங்கள் சில, உங்கள் பார்வைக்கு இங்கு.