சிரத்தை
”ஆச்சு.. இன்னையோட சரியா ஏழு வருஷம் முடிஞ்சுது…. இப்போதான் நடந்ததுபோல இருக்கு…” படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே நினைவு கூர்ந்தான் கணேஷ்… “ஆமாம்… நேக்கும் அதே நெனப்புத்தான்…” அவன் முழுதாக விளக்கியிருக்காவிடினும், எதைப்பற்றிச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட லக்ஷ்மி, அவனுக்கு விடையளித்துக் கொண்டிருந்தாள்.
படுக்கையில் அருகருகே அமர்ந்துகொண்டு ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்த அவர்களின் மௌனத்தைக் கலைத்தது அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்து படுக்கையில் ஏறிக் குதித்த சிறியவளின் ஆர்ப்பாட்டம். பெற்றோர் இருவரும் பேசாமல் எதையோ நினைத்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், தனது உலகத்தில் சந்தோஷமாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அவள், “அப்பா, கம் அண்ட் ஜாய்ன் மி இன் ஜம்பிங்க்” என்று தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து பெற்றோர் அறைக்குள் வந்த பெரியவள் நிலைமையைப் புரிந்து கொண்டு, “ஹேய்…. அப்பா அண்ட் அம்மா ஆர் திங்கிங்க் ஆஃப் சம்திங்க், கேன் யூ பீ கொயட்?” என உதவ எத்தனித்துக் கொண்டிருந்தாள்.
சில மணித்துளிகள் பெற்றோர் அமைதி காக்க, சிறியவள் ஆடிக் கொண்டிருக்க அவர்களிருவருக்கும் பாலமாய்ப் பதினோரே வயது நிரம்பிய பெறியவள் முயன்று கொண்டிருந்தாள். “அப்பா, ஐ நோ வாட் யூ ஆர் கோயிங்க் த்ரூ…… ஐ நோ அப்பா” என்ற மகளின் கனிவான பார்வையைக் கண்ட கணேஷின் கண்களில் ஒரு துளி நீர் மெலிதாக எட்டிப் பார்த்தது.
“சரி, ஓ.கே… என்ன பண்றது.. எல்லாருக்கும் ஒரு நாள் இதே கதிதான்…. எனிவே… யுவர் ப்ரதர் ஆஸ்க்ட் அஸ் டு பி ரெடி பை எய்ட்… நாம ரெடி ஆகலாம்.. இந்தியால, அதுவும் ராகவேந்திரா மடத்துல, இந்த வருஷம் பண்றது நியூ எக்ஸ்பீரியன்ஸ்… எல்லாம் நல்லபடியா முடியும்… எழுந்திருங்கோ… எழுந்து தலை குளியுங்கோ… “ சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து, போர்வையை மடிக்கத் தொடங்கினாள் லக்ஷ்மி. நேரமாகிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்த கணேஷ், எழுந்து குளியலறையை நோக்கி நடந்தான்.
”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற்சார்வார் தமக்கு”
விநாயகரின் புகழைப் பாடிக்கொண்டே, ஊதுபத்தி தீபம் காட்டிக் கொண்டு வீடு முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்த அப்பாவைச் சற்றுப் பொறுமையிழந்து பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ். கல்லூரி முடித்து, சில மாதத் தேடல்களுக்குப் பின்னால் ஒரு வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. இவர் எப்பொழுது முடிப்பார், எப்பொழுது கிளம்புவார் என்ற நினைப்பிலிருந்த அவன் அவசரத்தை அவர் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் தயார் ஆனதும், அவரை ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த ராகவேந்திரா மடத்திற்குக் கொண்டு சென்று விட்டுவிட்டுத் தான் அலுவலகம் செல்ல வேண்டும், கிட்டத்தட்ட மாலை வரை அங்கேயே தன் நேரத்தைச் செலவிடும் அப்பாவை, அவனது பக்கத்து வீட்டு ஆசிரியர் மாலையில் பள்ளியிலிருந்து திரும்பும்போது அழைத்துக் கொண்டு வீடு கொண்டு வந்து சேர்ப்பார். சில காலங்களாகப் போய்க்கொண்டிருந்த வழக்கம் இது.
“கணேசா, நேக்கு ஒண்ணும், வண்டி கிண்டி எல்லாம் வேணாண்டா.. நான் நடந்தே போய்ப்பேன்.. நீ கெளம்புடா” என்று சொன்ன அப்பாவைச் சற்றும் மரியாதை இல்லாமல், “அது சரி, நீங்க சொல்லிட்டேள்…. ஆத்துக்குள்ள நடக்குறதுக்கே தடுமாற்றமா இருக்கு…. ரோட்ல எங்கயாவது விழுந்து கிழுந்து வச்சேள்னா… இந்த வயசுல…. யாரு பாத்துப்பா… சீக்கிரம் முடிங்கோ… நான் கொண்டுபோய் விட்டுட்டுப் போறேன்… இன்னக்கும் எப்பவும்போல அந்த மேனேஜரண்ட பாட்டுத்தான், உங்களால….” புலம்பினான் கணேஷ். பைக் சாவியால் டீப்பாயில் தாளம் போட்டுக் கொண்டே தனது பொறுமையின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஷவரில் வெந்நீரில் நின்று கொண்டிருந்த கணேஷிற்குத் திடீரென மிக அதிகச் சூடாக வந்த நீர் உணர்வைத் திரும்பக் கொண்டு வந்தது. “ஓ காட்…. வாட் அ ஸ்டூபிட் ஷவர் திஸ் இஸ்” மனதில் நினைத்துக் கொண்ட கணேஷிற்கு, இருபது வருடத்திற்கு முன் நடந்த நினைவுகள் நிழலாடிக் கொண்டிருந்தன. பெரிய அளவு தவறுகள் இழைக்காவிடினும், தந்தையின் வயோதிக காலத்தில், தான் சற்றும் பொறுமையில்லாமல் நடந்து கொண்ட நினைவுகளெல்லாம் உள் மனதிற்குள் எழுந்து, அவனைக் குத்திக் காட்டிக் கொண்டிருந்தன. “சே…. வாட் அ மெக்னானிமஸ் மேன் ஹி வாஸ்… நாம இன்னும் கொஞ்சம் அமிகபிளா நடந்துட்டிருக்கணும்….” மனதுக்குள்ளிருந்த உறுத்தலுக்குப் பதிலளித்துக் கொண்டே, அந்த எட்டுமுழம் வேஷ்டியைச் சுற்றிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். அதிலும் அப்பாவின் நினைவே… நாலு முழத்தை இடுப்பைச் சுத்தி ஒரு சுத்து சுத்தி டைட்டா கட்டினார்னா, நாள்பூரா இடுப்புலயே நிக்குமே, அது என்ன வித்தையோ… நமக்கு பெல்ட் கட்டாட்டா மானம் போயிடும்…. மனதுக்குள் நினைத்துக் கொண்டே இடுப்பில் சுற்றிய வேஷ்டியின் மேல் பெல்ட்டைச் சுற்றி டைட் செய்து கொண்டிருந்தான்….
“கோத்ரம் சொல்லுங்கோ…. அப்பா, தாத்தா, முத்தாத்தா பேரு சொல்லுங்கோ” கேட்ட ஆச்சாரியாரிடம், “ஜமதக்னி கோத்ரம்…” என்று தொடங்கி, பெயர்களைத் தொடர்ந்து சொன்னான். “வசுரத்திர, ஆதித்ய… “ என்று மந்திரங்களில் தொடங்கிய ஆச்சாரியாரின் பின்னாலேயே அரைகுறையாய் அவர் சொல்வதைத் திரும்பச் சொன்னான். அனைத்துக் கடவளர்களுக்கும், பித்ருக்களுக்கும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தொடங்கினான் ஈர வேஷ்டியும், வெற்றுடம்புமாய்ச் சம்மணம் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த கணேஷ்.
ஆச்சாரியார் வாயு வேகத்தில் மந்திரங்களைச் சொல்லி, சடங்குகள் ஒவ்வொன்றாகச் செய்ய வைக்க, அவற்றில் பாதிக்கு அர்த்தம் என்னவென்று தெரியாவிட்டாலும், ஒரு நம்பிக்கையுடன் செய்யத் தொடங்கியிருந்தான் கணேஷ். இடையிடையில், முக்கியமான மந்திரங்களை இவன் திரும்பச் சரியாகச் சொல்லும் வரை திருத்திக்கொண்டிருந்த ஆச்சாரியார், “இதெல்லாம் எப்படிப் படிச்சுப் பாஸ் பண்ணி, அமெரிக்கா வரைப் போய்டுத்தோ” என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சமஸ்கிருதம் அவ்வளவு எளிதில்லை என்பதை, வருடத்தில் இரண்டு நாட்களில் முழுவதுமாய் உணர்வான் கணேஷ். தவிர, அந்த இரண்டு மணிநேர சடங்குகளில்தான் எத்தனை விதமான செயல்கள், மந்திரங்கள், வழக்கங்கள்… இவையெல்லாவற்றிற்கும் அர்த்தம் புரிந்து முழுவதுமாய்ச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், நினைத்துப் பார்த்துக் கொண்டான். ஆனால், எனக்கு அர்த்தம் புரியாததற்கு இதை என் மொழியின்றி வேறு மொழியில் செய்தவர்கள் காரணமா, இல்லை இதை ஊன்றிப் படித்துப் புரிந்து கொள்ளாத எனது சோம்பேறித்தனம் காரணமா… என்று கேட்டுக் கொண்டான். உடனடியாக, “அப்பா இருந்திருந்தார்னா உன் சிரத்தைக் குறைவு, சோம்பேறித்தனம் இதுவே காரணம்னு சொல்லியிருப்பார்” என்று தோன்றியது.
“சிரத்தை” – எவ்வளவு அருமையான வார்த்தை. ஆங்கிலத்தில் ”டிலிஜன்ஸ்” என்ற வார்த்தையால் குறிப்பிடப்படும் இதன் பொருள் என்ன? கவனம்? ஈடுபாடு? மனம் முழுவதும் ஒருநிலைப் படுதல்? சரியான தமிழ் வார்த்தையென்னவென்று தெரியவில்லை… ஆனால் பொருள் நன்றாகப் புரிகிறது. டெலிஜன்ஸ், இட் இஸ்… மனதிற்குள் சொல்லிக் கொண்ட அவனுக்கு, எங்கோ கேட்ட ஆன்மிக அறிவுரை தோன்றியது, “சிரத்தையுடன் செய்யப் படுவதால், சிரார்த்தம்” என்பதே அந்த அறிவுரை… யெஸ், டுடே இஸ் கணேஷ்’ஸ் டாட்ஸ் சிரார்த்தம், அதைச் சிரத்தையுடன் செய்ய முயன்று கொண்டிருக்கிறான். அப்பா தினம் தவறாமல் வந்து போய்க்கொண்டிருந்த அதே ராகவேந்திரா மடத்தில், அவர் வந்து பலரின் சிரார்த்தத்தில் கலந்து கொண்டு அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அதே ஹாலில்…”
அமர்ந்து மந்திரங்கள் சொன்ன இரண்டு மணிநேரங்களிலும் சரி, அதன் பின்னர் அனைவருடனும் அமர்ந்து அப்பா பூஜையின் நைவேத்தியமாகப் பரிமாறப்பட்ட உணவை அருந்தும் பொழுதிலும் சரி, அவன் உணர்ந்தது அங்கிருந்த காற்று முழுவதும் அப்பாவின் மூச்சுக் காற்று நிறைந்திருப்பதாய்….
”இந்த வருஷ சிரார்த்தத்தை நிஜமாவே ரொம்பவும் சிரத்தையோட பண்ணியிருக்கேள்” சொன்ன லக்ஷ்மியை நோக்கித் திரும்பி அவளின் கண்களை உற்று நோக்கும் கணேஷின் கண்களிலிருந்து கண்ணீர் கசியத் தொடங்கியிருந்தது.
வெ. மதுசூதனன்.