மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 2
(பாகம் 1)
கேள்வி (சிலம்பரசன்): உங்களுக்குப் பல கருவிகள் வாசிக்கத் தெரியும் என்று கூறினீர்கள். ஒரு கருவி கற்றுக் கொண்டால் மற்ற கருவிகள் வாசிக்க கற்றுக்கொள்வது சுலபமா?
சிலம்பரசன்: சொல்கட்டு எடுத்து கொண்டால், லயம் சம்பந்தப்பட்ட எல்லாக் கருவிகளுக்கும் “தா தீ தம் நம் தகிட” போன்று சொல்கட்டுகள் அமைந்திருக்கும். ட்ரம்ஸ் போன்ற கருவிகள் மேற்கத்தியக் கருவிகள். அதன் வாசிப்பு முறையே வேறு. அதற்கும் வாத்தியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ட்ரம்ஸ் கருவிக்கு வெஸ்டர்ன் நோட்ஸ், நான் பயன்படுத்துவது கிளாசிக்கல் நோட்ஸ்.
தவில், மிருதங்கம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் அதற்கு பாடங்கள் எல்லாம் ஒன்று. வாசிக்கக் கூடிய விதங்கள் வேறு. மிருதங்கம் வாசிக்கும் பொழுது தவில் ஞாபகம் வரக்கூடாது. அதேபோல் தவில் வாசிக்கும் பொழுது மிருதங்கம் ஞாபகம் வரக்கூடாது.
கேள்வி(ராமச்சந்திரன்): நாதஸ்வரம் வாசிக்க சுவாஸப் பயிற்சி ஏதேனும் உண்டா?
ராமச்சந்திரன்: நாங்கள் பாட்டுப் பயிற்சியும் சுவாஸப் பயிற்சியும் தருகிறோம். அதுமட்டும் இல்லாமல் நாதஸ்வரம் வாசிக்க வாசிக்க ஸ்வாஸப் பயிற்சியும் வந்துவிடும். நான் இப்பொழுது இங்கே சில மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். அப்பொழுது இந்த விரல் எட்டாது. மத்யமம் வாசிக்க விரல் ஒரு குறிப்பிட்ட இடத்தை எட்டவேண்டும். ஏழு ஸ்வரங்கள் வரவேண்டும் என்றால், இந்த நாதஸ்வர த்வாரத்தை சரியாக மூடவேண்டும். இல்லை என்றால் அபஸ்வரமாக கேட்கும்.
அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சட்ஜமம் ஆரம்பித்துக் கற்றுக்கொடுக்கிறோம். சீவாளி முறை கற்றுக்கொடுத்தலில் கீழ் சட்ஜமம், மேல் சட்ஜமம் எப்படி சுவாசத்தைப் பயன்படுத்துவது, உதட்டை எங்கு வைப்பது, எவ்வளவு சுவாசத்தை வெளியிடுவது என பயிற்சி அளிக்கிறோம்.
கேள்வி (ராமச்சந்திரன்): எல்லோர் மனத்திலும் இருக்கும் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். நாதஸ்வரம் வாசிப்பவர்கள் நிறைய சீவாளி கொத்தாக வைத்திருப்பார்கள். அது எதற்காக?
ராமச்சந்திரன்: அது எதற்க்காக என்றால், ஒரு சீவாளியை வைத்து ஒரு கீர்த்தனை அல்லது இரண்டு கீர்த்தனைகளை வாசிக்கலாம். ஒவ்வொரு சீவாளிக்கும் ஒவ்வொரு பதம் இருக்கும். சீவாளி மெலிதாக இருந்தால் மிகுந்த நேரம் வாசிக்க முடியாது. சீவாளி நமது வாசிப்பினால் நிறைய நேரம் ஊறிவிட்டால் மேல் ஸ்தாயி வாசிக்கும் பொழுது பிசிறு ஏற்படும். அப்படி ஏற்படும் பொழுது வேறு சீவாளியை மாற்றுவார்கள்.
வாசிக்கும் பொழுது எச்சில் ஊறுவதினால், அது சீவாளியை அடைக்கும். அதை எடுப்பதற்குக் குச்சியும் இருக்கும். அந்தக் காலத்தில் அது யானை தந்தத்தினால் செய்யப்பட்டிருக்கும். இப்பொழுது மரத்தினால் அல்லது எலும்பினால் ஆன சீவாளி கிடைக்கிறது. நான் எப்பொழுதும் தந்தக்குச்சியைத் தான் பயன்படுத்துவேன். எங்கள் தாத்தா காலத்தில் கொடுத்தது. அந்தச் சீவாளியின் கண்டப்பகுதியில் தான் குச்சியைப் போடவேண்டும்.
கேள்வி: புல்லாங்குழல் போன்ற கருவிகளில் துளைகளுக்குப் பதிலாக பட்டன்கள் என மாறி வருகிறது. அதே போல் நாதஸ்வரம் எப்படி மாறிவருகிறது?
பதில்: அந்தக் காலத்தில் ஐந்து கட்டை ஸ்ருதி கொண்ட நாதஸ்வரம் இருந்தது. இது நீளம் குறைவாக இருக்கும். அதை திமினி நாதஸ்வரம் என பயன்படுத்தி வந்தனர். இது 1946 க்கு முன்பாக உபயோகத்தில் இருந்தது. அதன் பிறகு ராஜரத்தினம் பிள்ளை அவர்கள், இடைபாரி என்று இரண்டரை கட்டை, பிறகு மூன்று ஸ்ருதி கொண்டவை என கொண்டுவந்தார். இப்பொழுது எல்லாக் கலைஞர்களும் எடுத்துச்செல்ல வசதியாக அனசு மற்றும் ஏழு ஸ்ருதி கொண்ட உளவு பகுதியாக பிரிக்கும் வசதிகள் இருக்கின்றன.
Musicians Interview
கேள்வி (சக்தி): நீங்கள் இணையத்தளம் பற்றி படித்தவர். உங்கள் பறை இசையை மேம்படுத்த கணினி ஏதேனும் பயன்படுதியடுண்டா?
பதில்: நான் கணினி கற்றது வீட்டில் கூறிய அறிவுரைக்காக. ஆனால் கலை மீது தான் எங்களுக்கு நாட்டம். கல்லூரியில் படிக்கையில் “நிமிர்வு கலையகம்” என்று ஒரு குழு வைத்திருந்தேன். இதை 2011 இல் கலைக்குழுவாக உருவாக்கினோம். அழிந்து வரக்கூடிய கருவிகளை மீட்டு எடுப்பதற்கு என்ன பண்ணலாம் என யோசித்தோம். தமிழ்நாட்டில் உள்ள இதரக் கலைஞர்களைத் தொடர்பு கொண்டு நொடேஷன்ஸ் வாங்கினோம். மற்ற இசைக்கருவிகளுக்கு நோட்ஸ் இருக்கு. அனால் பறை, துடும்பு போன்ற கருவிகளுக்கு நோட்ஸ் இல்லை. மற்றவர்கள் இதற்கு என்ன பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்தோம். மதுரையில் ஒரு நொடேஷன்ஸ் நாகர்கோவிலில் ஒரு நொடேஷன்ஸ் என பயன்படுத்துகிறார்கள். வட தமிழகம், தென் தமிழகம் என பல்வேறு நொடேஷன்ஸ் இருந்தன. எங்களுக்கு தொடர்பு உடைய அனைவரிடமும் பேசி ஒரு பொதுமுறை கொண்டு வரவேண்டும். இந்த நொடேஷன்ஸ் அனைத்தையும் வரைமுறைபடுத்தலாம் என முயற்சி எடுத்தோம்.
அது மட்டும் இன்றி, பறையை ஒரு பாடம் அமைத்து வரையறை கொண்டுவரலாம் என எண்ணினோம். அதற்காக, இணையத்தளம் வழி கற்றுக்கொடுக்க துவங்கினோம். தமிழ்நாட்டில் இருந்து உலகில் எல்லா இடத்திலும் பறை குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அமெரிக்காவிலும் சிகாகோ, நியூ ஜெர்சி, மிஸிசிப்பி, கனெக்டிகட் போன்று பல இடத்தில் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுது அங்கு பாடம் கற்றுதருகிறோம். ஆஸ்திரேலியாவில் அடிலைட் நகரிலும், சுவீடன், லண்டன் போன்ற நகரகங்களிலும் குழுக்கள் இருக்கின்றன. இவர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட பாடங்களை உருவாக்கித் தருகிறோம்..
கேள்வி: பறைக்கும் மிருதங்கம் மாதிரியே நோட்ஸ் இருக்கா? தகிட போன்று அமைந்து இருக்குமா?
பதில்: ஆம், தகிட, தக என்ற நோட்ஸ் இதிலும் இருக்கும். பெரிய அளவில் நோட்ஸ் யாரும் வைக்கவில்லை. தா, கூ இருக்கு. அது மட்டுமன்றி, இன்னொரு முறை ஒன்று இருக்கிறது. களறி பண்பாட்டு மையம் “+” “-” முறையில் ட வகை முறையைப் பயன்படுத்தினார்கள். அது ஒரு புது முயற்சி. பிறகு வாய்ச்சொல் ஆடல்கள் இருக்கின்றன. “ஜெங்கி கிடா ஜெங்கி கிடா ஜெங்கி கிடா டா டா” போன்று வாய்ச்சொல்லாடல்கள் இருக்கின்றன.
இதையெல்லாம் எடுத்து வகைப்படுத்தினோம். பியானோவுக்கு ட்ரினிடி காலேஜ் எப்படி உலகம் முழுவதும் ஒரே பாடத்தை கற்று தருகிறார்களோ, அதே போல், நாங்களும் நிலைப்படுத்தி எந்த பீட்ஸ் முதல் கற்றுத்தரவேண்டும் எந்த பீட்ஸ் இரண்டாவதாக கற்றுதரவேண்டும் என்று பிரித்தோம். இப்பொழுது பறை ஆட்டக்கலையில் பட்டயம் வழங்கும் வகையில் (Diploma in Parai Attakkalai) பாரதியார் பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவு துவங்கி உள்ளோம். அதை தமிழ்நாடு முழுவதும் சொல்லிக்கொடுத்து வருகிறோம். அது மட்டும் இன்றி சென்னையிலும் கோயம்புத்தூரிலும் பள்ளி வைத்து கற்றுத் தருகிறோம்.
ஒரு வருடம் பள்ளிக்கு வரவேண்டும், பிறகு பயிற்சிப் பட்டறை வைத்து கற்றுத்தருகிறோம். அது மட்டும் இன்றி நிமிர்வு கலையகம், மூலமும் கற்று தருகிறோம்.
தொகுப்பு – பிரபு.