பெண்
விடியலின் கதிராய், வெள்ளியின் குளிராய்
விளக்கின் ஒளியாய், வெண்சங்கின் ஒலியாய்
விருட்சத்தின் விதையாய் வேள்வியின் பயனாய்
வினையிருக்கும் அவளிடத்தில் வீச்சிருக்கும்!
மழையின் முகிலாய், மலையின் பனியாய்
மயிலின் இறகாய் மாவிலைத் தளிராய்
முகையின் இதழாய் முல்லையின் முகிழாய்
மென்மையிருக்கும் அவளிடத்தில் மேன்மையிருக்கும்!
கவிதையின் கருவாய் கவிஞரின் மடந்தையாய்
காதலரின் கன்னியாய் கணவனின் மனைவியாய்
களியுறவில் குழவியாய் குழவியின் தாயாய்
காலப்பரிணாமமிருக்கும் அவளிடத்தில் சாலப்பரிமாணமிருக்கும்!
கண்ணில் மணியாய் கைவிரல் நகமாய்
கனியிதழ்ச் சுவையாய் கூர்நாசிக் காற்றாய்
நற்செவி ஒலியாய் நரம்பினில் குருதியாய்
நிறைந்திருக்கும் அவளிடத்தில் நிறைவிருக்கும்!
அகழ்வின் சிலையாய் ஆழ்கடலின் அலையாய்
அருகின் நுனியாய் ஆலின் விழுதாய்
அன்னத்தின் முகமாய் ஆனையின் மதமாய்
அழகிருக்கும் அவளிடத்தில் ஆற்றலிருக்கும்!
அகிலத்தின் அற்புதமாய் அண்டத்தின் அச்சாணியாய்
அனைவரின் அன்னையாய் அமைதியின் அருமையாய்
அறிவோரின் அடைக்கலமாய் அறியாரின் அதிசயமாய்
அன்பிருக்கும் அவளிடத்தில் அறனிருக்கும்!
– ரவிக்குமார்.