வொண்டர் வுமன் – திரை விமர்சனம்
மேற்கத்தியத் திரைப்படங்களில் அதிசய சக்தி வாய்ந்த ஹீரோக்களைப் படைப்பதில் மார்வெல் மற்றும் டீசி காமிக்ஸ் மிகப் பிரபலமான நிறுவனங்கள். டீசி காமிக்ஸின் படைப்பு தான் வொண்டர் வுமன். இந்தப் படத்தைப் பட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். மிஸ் இஸ்ரேல் பட்டம் வாங்கிய கால் கடாட் வொண்டர் வுமனாக நடித்துள்ளார். கதாபாத்திரத்துக்குப் பொருந்தும் வகையில் இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி கண்டுள்ளது.
ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த அதிசய மனிதர்களில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளார் வொண்டர் வுமன். சிலந்தி கடித்து உருவாகிய சிலந்தி மனிதன், இயந்திரங்கள் துணையுடன் செயல்படும் வவ்வால் மனிதன், இரும்பு மனிதன் எனப் பலர் இருக்க, கிரேக்க தேவன் ஸ்யூசுக்கும் இராணி ஹிப்போளிடாவுக்கும் பிறந்தவர் டயானா. இவருக்குப் பிறந்தது முதற்கொண்டே சண்டை பயிலுவதில் ஆர்வம் அதிகம். இதை நன்றாகப் படத்தில் காட்டியிருக்கிறார்.
தான் அமேசான் தீவில் இருந்தால் மக்களைப் போரில் இருந்து காப்பாற்ற முடியாது என அறிந்து அவர் தப்பிக்கும் முறையை நன்கு காட்டியிருக்கிறார்கள். அந்தத் தீவின் அழகையும், கோட்டையின் பிரம்மாண்டத்தையும் காட்டியுள்ள விதம் அருமை. அமேசான் தீவுகள், கதைக்கு ஒரு துவக்கப்புள்ளி மட்டுமே. முக்கியக் கதை வெளியுலகில் நடக்கிறது. ஆனாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது பலரது பாராட்டைப் பெற்றது.
வொண்டர் வுமன் டயானா சக்தியை அவர் அறிவதும், அதை எப்படிப் பிரயோகம் செய்கிறார் என்பதையும் நன்றாகச் சித்தரித்துள்ளார். அது மட்டுமின்றி, டயானாவின் வெகுளித்தனத்தையும் நகைச்சுவையுடன் காட்டியுள்ளார். காதல், பழிவாங்குவது, சண்டைக் காட்சி, படம் (ஆம், ஒரு பாடலுடன் ஆடலும் இருக்கிறது), மோசமான வில்லன் எனத் தமிழ் படத்தில் காணும் எல்லா அம்சங்களும் இதில் உள்ளன.
மொத்தத்தில் நல்ல கதை, சித்தரித்த விதம் அருமை, சண்டைகள் காட்டிய விதம் அருமையோ அருமை. இந்தப் படம் வியாபார ரீதியாக நல்ல வசூல் வாங்கியது ஆச்சரியமில்லை.
-பிரபு