பகுத்தறிவு
பகலிரவு கண்விழித்துப் பலகாலம் தவமிருந்தேன்
சகம்முழுதும் காத்தருளும் சர்வேசன் வரவுநோக்கி!!
தகதகக்கும் பிரகாசமாய்த் தன்னிகரிலாக் கருணையுடன்
அகமுவந்து முன்னுதித்து அன்புடனே வினவிட்டான்
சிந்தை குளிர்வித்தாய் மானுடா உந்தன்
தந்தை முடிவுற்ற வம்சம் கண்டிராத
விந்தை உனக்களித்தேன் நேரினில் நான்வந்தே
எந்தை வரம்வேண்டும் செப்பிடுவாய் எம்மிடமே!!
கோர்க்கும் ஊசி செல்லும் திசையெல்லாம்
தோர்ப்பின்றி நூல்பின் செல்ல வரமளிப்பாய்
சோர்ப்பின்றி நானுழைக்க, வரமளிக்க நீயாரென்று
ஆர்ப்பரித்த என்தாத்தன் எனக்களித்த பகுத்தறிவு
சர்வேசன் தன்முன்னே தலைதூக்கி நான்நின்று
வரமெதுவும் வேண்டாமென்று வலிமையுடன் மறுதலிக்க
மரவுரி தரித்துவந்த மகேசனும் மாயமானான்
சிரந்தூக்கி சிலிர்த்தெழ, சொற்பனமென் றுணர்ந்தேன்!
அற்புதம் நிகழ்த்த ஆண்டவன் வருவானோ
கற்பதும் கேட்பதுமான அறிவியல் பிழைதானோ
பொற்பதம் பற்றினால் நற்கதி பெறலாமோ
சொற்பனம் நிகழ்வாமோ பாவம்பல புரிவார்க்கும்?
கேட்கும் கதையனைத்தும் கண்மூடித் தனமாய்
ஏற்கும் தன்மையதே ஆத்திகம் எனுமுணர்வோ?
பார்க்கும் விந்தைபல காரணங்கள் விளங்காவிடினும்
யார்க்கும் எதற்கும் இல்லையென்பதே நாத்திகமோ?
இவ்விரண்டு முறைகளுக்கு மத்தியிலே இன்னுமொரு
செவ்வியம் போலந்த சிறப்பான வழியொன்றுண்டு
பவ்வியமாய் ஒவ்வொரு பயன்தரு ஆக்கத்தையும்
ஔவியம் பேசாமல் உள்ளதறிவது பகுத்தறிவு!!!
கடவுள் என்பது கையாலாகாதவன் கண்டறிந்த
கருணை உருவமன்று, கருத்தெனும் எல்லைமீறி
கடந்து உள்செல்வதே கடவுளாம் – தன்னிலையாராயும்
கடைக்கோடி உயிரினமும் கடவுளென்பது பகுத்தறிவு!!
இறைவன் என்பவன் இம்மையில் அமர்ந்து
இம்சிக்கும் மன்னனன்று, இகம் முழுதும்
இறைந்து கிடக்கும் இன்பக்காற்று, இயைந்து
இன்புறும் இயற்கை யென்பதே பகுத்தறிவு!!
கடலினைத் தாவிய குரங்கும், செந்தணலிற்
கன்னி பிறந்ததும் வெறும் பொய்யெனக்
கரைவது நாத்திகம், இல்லையில்லை அவை
கணக்காக நடந்தவை யென்பது ஆத்திகம்
கடலினைத் தாவுவது சாத்தியமோ – உருவகத்தில்
கவியவன் பெரிதாக்கிய உன்னத சாதனையோ
கதை பெரிதோ, சொல்ல வந்த
கருத்து முக்கியமோ கண்டறிவதே பகுத்தறிவு!!!
சகம்முழுதும் வாழ்ந்த சீர்நிறைப் பெரியவர்கள்
அகமுணரப் படைத்திட்ட அருள்நிறை நூல்படித்து
பகலிரவு கண்விழித்துப் பலகாலம் காத்திருப்பேன்
சகலரும் இந்தச் சன்மார்க்க நெறியுணர!!!
– மது வெங்கடராஜன்