மருவிய மாமொழிகள்
பழ மொழிகள் நம் மொழியின் மிகச் சிறந்த பொக்கிஷமென்பது நாமறிந்ததே. பெரிய காப்பியங்களாகவோ அல்லது கவிதைகளாகவோ இயற்றப்பட்டவையல்ல. புகழ் பெற்ற கவிஞர்களால் பாடப்பட்டவையுமல்ல. பல பழமொழிகள் எழுதியவர் யாரென்றே தெரியாதவை. ஆனால் மிகவும் சுவையாகவும், சுருக்கமாகவும், கவித்துவத்துடனும் விளங்கும் பல பழமொழிகளை நாமறிவோம்.
காலத்தைக் கடந்து நிற்கின்றன பல பழமொழிகள். அவற்றில் சில, கால மாற்றத்தாலே மருவி அர்த்தம் மாறியுமுள்ளன. அந்த இடைச்செருகலை நீக்கி, சரியான கருத்தை விளக்கும் ஒரு சிறு முயற்சி இது.
களவும் கற்று மற
வழக்கிலுள்ள பொருள்: களவு போன்ற தீய பழக்கங்களையும் கற்றுக்கொள், ஆனால் பின்னர் மறந்து விடு என்று அறிவுரை கூறுவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதாவது தீய செயல்களையும் செய்யும் திறமை அவசியம் என்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதாகப் பலரும் நினைக்கிறோம். செயல் விளைவுத் தத்துவத்தில் திளைத்த நம் முன்னோர்கள் இப்படி ஒரு அறிவுரை கூறியிருப்பார்களா?
சரியான பொருள்: ”களவும் கத்தும் அற” என்பதே சரியான பழ மொழியாம். களவு மற்றும் பொய் பேசுதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒதுக்கிட வேண்டுமென்பதே இந்த உயரிய பழமொழியூட்டும் உண்மைக் கருத்தாம். நேர்மையாளர்களான நம்முன்னோர்கள் இப்படித்தான் சொல்லியிருப்பார்கள் என்று நம்ப முடிகிறதல்லவா?
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
வழக்கிலுள்ள பொருள்: வன்முறையைப் பயன்படுத்தி, அடித்துப் பயமுறுத்துதல் ஒருவனுக்கு உதவுவது போல அவனுடன் பிறந்த சகோதரர்களால் கூட உதவிட இயலாது என்பதே இதன் பொருளென பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். துப்பாக்கியும், கத்தியும் பிரச்சனைகளுக்குத் தீர்வு என தீர்க்கமாய் நம்பும் இன்றைய சமுதாயத்திற்கு இது சரியெனத் தோன்றினாலும், வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்த நம் முன்னோர்கள் இப்படி வன்முறையைத் தூண்டியிருப்பரோ?
சரியான பொருள்: ஒரு மனிதனின் துன்ப வேளையில் இறைவனின் திருவடி அவனுக்கு உதவுவது போல அவனுடன் பிறந்த சகோதரர்களாலும் உதவிட இயலாது என்பது ஆத்திகம் பேசும் அடியார்கள் பக்தர்களுக்கு போதித்த அற்புதக் கருத்தாகும். கடவுள் என்றொன்று இல்லையென்று திடமாக நம்புபவர்கள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் அடியொற்றி வாழ்வது அண்ணன் தம்பிகளால் செய்ய முடிந்த உதவிகளைக் காட்டிலும் அதிக அளவில் பயன் தருமென்று பொருள் கொள்ளலாம்.
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்
வழக்கிலுள்ள பொருள்: ஆயிரக்கணக்கான பொய்களைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம். அதாவது, திருமணமென்பது மிகவும் புனிதமான ஒரு நிகழ்வு. பலருக்குக் கடினமானதும் கூட. அதனால், ஆயிரக் கணக்கான பொய்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வரினும், அவற்றைக் கூறியாவது கல்யாணத்தை செய்து முடிக்கவேண்டுமென்று கூறுவதாக எடுத்துக் கொண்டோம்.
சரியான பொருள்: ஆயிரம் மனிதர்களிடம் போய்ச் சொல்லிக் கல்யாணம் செய்து வைக்கவும் என்பதே சரியான பொருளாகும். திருமணமென்பது இருமனம் ஒன்றாகும் புனிதமான நிகழ்வு. அதனை அந்த இருவரின்பால் அன்பும் உறவும் உள்ள சுற்றத்தாரனைவரும் வந்திருந்து வாழ்த்தி நடத்தி வைக்க வேண்டுமென்ற காரணத்தால், ஆயிரம் பேரானாலும் போய்ச் சொல்லி அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நடத்துமாறு வலியுறுத்துகிறது இந்தப் பழமொழி.
– மது வெங்கடராஜன்