அன்புள்ள அம்மாவுக்கு
சிறையிலிருக்கும் என் அன்புள்ள அம்மாவுக்கு
பாசமுடன் உன் இளைய மகன்
நான் எழுதிக் கொள்வது
நலம், நலமறிய ஆவல்.
அம்மா நான் இப்போது
ஆசிரமத்தில் நன்றாகப் படிக்கிறேன்
ஆனாலும்…
உங்களை நினைத்தால்தான்
கவலையாக உள்ளது அம்மா.
அப்பா மிதிவெடியில் காலை இழந்த போதும்
அப்பப்ப சுற்றிவளைப்பில் பிடிபட்டு வதைபட்ட போதும்
காணாமல் போனோர் பட்டியலில் கலந்து
காணாமலே போனபோதும்
காடையர் கூட்டத்தால் உன் கற்பு பறிபோன போதும்
சிறைப் பிடித்து உன்னை வதை முகாமில் அடைத்த போதும்
எதுவுமே செய்யாத என் சுற்றமும் சொந்தமும்
இப்போது மட்டும் உன்னை பற்றி
தப்பாக கதைப்பதைக் கேட்டு
என் மனசு வலிக்கிறது அம்மா.
எப்போதாவது விடுமுறைக்கு ஒருகால்
குருகுலம் விட்டு வீடு போகும் நான்
அனாதை என்ற சொல் கேட்டு
ஆடிப் போகிறேன் அம்மா.
என்னை அவர்கள் கோபத்தில் திட்டும் போதுகூட
உன்னையும் ஓரிரு கெட்ட சொற்களால்
திட்டுவது கேட்டு என் மனம் கொதிக்கிறது அம்மா.
எனக்கு என் வீடு பிடிக்கவில்லை
என் உறவுகள் பிடிக்கவில்லை
என் அன்புள்ள அம்மாவே
எப்போதும் போலவே உன் வரவை மட்டும்
எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன் அம்மா
மறுபடியும் என்னை பதில் கடிதம் போட்டு
ஏமாற்றி விடாதே அம்மா.
– தியா – (காண்டீபன்)
மனதை வலிக்க வைத்து விட்டது வரிகள்…
உங்களின் கருத்துரை மூலம் தான் உங்கள் தளமே தெரியும்… நன்றி…
நீங்கள் எங்கள் இணைய இதழில் கருத்துச் சொன்னதற்கு நன்றி DD தொடர்ந்து வாருங்கள் உங்கள் மேலான கருத்துகளை சொல்லுங்கள்.
-தியா – (காண்டீபன்)