\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஃபெட்னா பேரவைத் தமிழ் விழா 2017

ஃபெட்னாவின் 2017 பேரவைத் தமிழ் விழா, மினியாபொலிஸில் எம்சிசி (MCC) என்றழைக்கப்படும் பிரமாண்ட கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) ஜூலை 1, 2 மற்றும் 3 ஆம் தினங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அமெரிக்கா, இந்தியா, கனடா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக, 31 ஆம் தேதி வெள்ளியன்று மாலை, வந்திருந்த விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்சத்திர இரவு’ நிகழ்ச்சி செயிண்ட் பாலில் உள்ள வெல்ஸ்டோன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கயானா பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, ஒரிசா பாலு, பொன்ராஜ், மிஷ்கின், கார்த்திகேய சிவசேனாதிபதி, சுகிர்தராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கேழ்வரகு அடை, பரோட்டா, தலப்பாக்கட்டி கோழிக்கறி, ஆம்பூர் பிரியாணி, தேங்காய்ப் போளி, கருப்பட்டி மைசூர்பாகு எனத் தமிழ்நாட்டுச் சிறப்பு உணவுப் பதார்த்தங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது.

அடுத்த நாளான சனிக்கிழமை, ஜூலை 1ஆம் தேதி, விழா நிகழ்ச்சிகள் காலை பத்து மணியிலிருந்து துவங்கின. மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் இருக்கும் மெயின் ஆடிட்டோரியம் இவ்விழாவிற்காகத் தயாராகி இருந்தது. தமிழர் மரபு என்ற கருப்பொருள் கொண்ட விழா என்பதால், நிகழ்ச்சி தயாரிப்புகள் அனைத்தும் அதைச் சார்ந்தே இருந்தன.

அரங்கு நுழைவாயில் இருபுறமும், உருவாக்கபட்ட வாழை மரங்கள், அரங்கின் உள்ளே தமிழர் கலைகளைக் காட்சிப்படுத்தும் வண்ண ஒவியங்கள், மேடையின் பின்னணியில் டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாகக் காட்டப்பட்ட காட்சிகள், இவ்விழாவுக்கெனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட முரசு, நாதஸ்வர, தவிலுடன் கூடிய மங்கல இசை, பறை முழக்கம், மக்களிசை, தமிழர் வரலாற்றைக் காட்டும் காலக்கோடு என எங்கும் தமிழர் மரபு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

Fetna 2017

கயானா பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களால் முரசு கொட்டி தொடங்கப்பட்ட இந்த விழாவில் இயல், இசை, நாடகம் என ஒவ்வொரு கலை பரிணாமத்திற்கும் இடமிருந்தது. இந்தியாவிலிருந்து வந்த நாதஸ்வர, தவில் கலைஞர்களான மாம்பலம் ராமசந்திரன் மற்றும் அடையார் சிலம்பரசனுடன், இங்கு அவர்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து மங்கல இசை நிகழ்ச்சியை இரு தினங்களும் முதல் நிகழ்ச்சியாகக் காலையில் நடத்தினர். இதன் பின்னர் இளந் தலைமுறையினரால் திருக்குறள் மறை பாடப்பட்டது. பல்வேறு தமிழ் படைப்பாளிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட விழா மலர் மேடையில் எழுத்தாளர் சுகுமாரனால் வெளியிடப்பட்டது. சுகிர்தராணி தலைமையில் கவியரங்கம், ரோகிணி தலைமையில் கருத்துக்களம் ஆகியவை நடத்தப்பட்டன. சின்னி ஜெயந்த் நகைச்சுவையாகப் பல குரல்களில் பேசி, பாடல்களும் பாடினார். மினசோட்டா, சிகாகோ மற்றும் கேன்சஸ் தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புடன் நாடகங்கள், நாட்டியங்கள் அரங்கேற்றப்பட்டன. முதல்முறையாக அமெரிக்க தேசிய கீதம் தமிழில் இந்த மேடையில் பாடப்பட்டது. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கிளாரன்ஸ் ஜெய், பழனி குமணன் ஆகியோருக்கு அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருதுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகள், சக்தியும் அவரது மாணவர்க்குழுவும் நடத்திய அதிரடியான அதிகாரப் பறை முழக்கம், தமிழ்த் தேனீ, குறள் தேனீ எனச் சிறுவர்களுக்கானப் போட்டிகள், இலக்கிய ஆர்வலர்களுக்கான வினாடி வினா, அனைத்துச் சங்கங்களும் பங்குபெற்ற சங்கங்களின் சங்கமம் என விழா மேடையில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாகப் பாடகர் ஜெயமூர்த்தியுடன் பிற இசை, நடனக்குழுக்கள் இணைந்து நடத்திய மக்களிசையும், பேராசிரியர் ராஜூவின் இயக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்திருந்த நாடக கலைஞர்களுடன் உள்ளுர் கலைஞர்களும் இணைந்து நடத்திய மருதநாயகம் நாடகமும் சனிக்கிழமை இரவு பொழுதை மேலும் இனிமையாக்கின. இது போல், ஞாயிறன்று மாலையில் கனடாவில் இருந்து வந்த அக்னி இசைக்குழுவினருடன் இணைந்து ஜெயமூர்த்தி, அருண்ராஜா காமராஜ், ராஜகணபதி, ஸ்ரதா, நிரஞ்சனா ஆகிய பாடகர்களும், பிற இசைக் கலைஞர்களும் கலந்துகொண்ட இசை கச்சேரியும் வந்திருந்தோரை ஆட்டம் போடச் செய்தது.

மக்களிசை நிகழ்ச்சியில் நேரடி தமிழ்ப் பண்பாட்டு இசைக்கு ஜெயமூர்த்தி அவர்கள் பாட, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆகிய தமிழகப் பாரம்பரிய நடனங்களை அந்தப் பாடலுக்கு ஏற்ப, மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினரும் பிற தமிழ்ச் சங்கத்தினரும் மேடையில் ஆடியது, பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது. மருதநாயகம் நாடகம் உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தது. மரபார்ந்த நாடகக் கலைஞர்களுடன் உள்ளூர் கலைஞர்களின் நடிப்பு, நேரடி இசை, காட்சிக்கேற்ற ஒளியமைப்பு, ஒளியின் மூலம் கதை கூறல் என அனைவரையும் நாடகத்துடன் ஒன்றிவிடச் செய்தது.

இப்படிப் பார்வையாளர்களைக் கவர்ந்த மேடைக் கலை நிகழ்ச்சிகள் பல இருந்தன. அத்தனை நிகழ்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டுமென்றால் ஒரு புத்தகமோ, தொடரோ எழுத வேண்டி வரும். இவையெல்லாம் ஒரு மேடையில் நடைபெற்ற நிகழ்வுகள். இவை தவிர, பிற தளங்களிலும் வேறு பல நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

முதல் தளத்தில் இருக்கும் மெயின் ஆடிட்டோரியத்தில், பிரதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த அரங்கின் வெளியே வரிசையாகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆச்சி மசாலா, மணிமேகலை பிரசுரம், ஜீ தமிழ், லைகா மொபைல், ஐ-பாட்டி போன்ற நிறுவனங்கள் இங்குக் கடைகள் அமைத்திருந்தன. இதன் பக்கத்திலேயே தமிழர் சார்ந்த நிகழ்வுகளைப் பிற உலக நிகழ்வுகளுடன் இணைத்துக் காட்டும் தமிழர் காலக்கோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முதல் நாளன்று, தரைத்தளத்தில் இருக்கும் அரங்கில் தமிழ் தொழில் முனைவோர் கலந்து கொண்ட TEFCON கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேரிலேண்ட் மாகாணப் போக்குவரத்து ஆணையர் ராஜன் நடராஜன், ஆச்சி நிறுவனத் தலைவர் பத்மசிங் ஐசக், கிட்டி என்றழைக்கப்படும் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். சக தொழில் முனைவோருக்கும், தொழில் தொடங்க ஆர்வம் கொண்டிருப்போருக்கும் இந்த நிகழ்வு கண்டிப்பாகப் பயனளித்திருக்கும். அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதி ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இறுதியில் சிறப்புரை ஆற்றினார்.

இரண்டாம் தளத்திலிருக்கும் அறைகளில், இரு தினங்களும் இணையரங்க நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த அறைகள் அனைத்தும் பக்கத்திலேயே இருந்ததால், ஒன்றன் பின் அடுத்து என்று சென்று வர சுலபமாக இருந்தது. கல்வி, மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, இசை, ஆராய்ச்சி, குடியுரிமை, பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம், ஹார்வர்ட் தமிழ் இருக்கை எனப் பலதரப்பட்ட தலைப்புகளில் இந்த நிகழ்வுகள் அமைந்திருந்தன. பொன்ராஜ், சிவகார்த்திகேய சேனாதிபதி, ஒரிசா பாலு, நல்லசிவம், மிஷ்கின், நியாண்டர் செல்வன் ஆகியோரது கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எதில் கலந்து கொள்வது, எதை விடுவது என்று குழப்பம் வரும் அளவுக்கு அத்தனை நிகழ்வுகள். அத்தனையும் நல்ல பயனுள்ள நிகழ்வுகள்.

இரண்டாம் தளத்தில் மற்றொரு பக்கம் இருக்கும் ஒரு பெரிய அறையில் காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேளைகளிலும் சிறப்பு உணவு பரிமாறப்பட்டது. பஃபே முறையில் பரிமாறப்பட்ட உணவு, வந்திருந்த விருந்தினர் அனைவராலும் பாராட்டப்பட்டது. பெரும் உற்சாகத்துடன் இளம் சிறார்களும் உணவு பரிமாறலில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிகளுக்கு நடுவே ஒரு மணி நேரம் உணவுக்கென ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திற்குள் அனைவருக்கும் உணவு அளித்திடும் வகையில் நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வந்திருந்த மொத்த ஜனத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடியதாக அமைந்தது, இந்த உணவு அறை தான். எந்தத் தடங்கலும் இல்லாமல், குழப்பமும் இல்லாமல், நல்ல திட்டமிடலுடன் உணவு பரிமாறப்பட்டது. கருப்பட்டி பொங்கல், தேங்காய் சோறு, அதிரசம், கீரை வடை, ஊத்தப்பம், ஆட்டுக்கறி சுக்கா வறுவல், நாட்டுக்கோழி வறுவல், செட்டிநாட்டு கோழிக்கறி எனப் பலதரப்பட்ட உணவு வகைகள் இவ்விருந்தில் இருந்தன.

இது தவிர, காபி, டீ, சமோசா, பஜ்ஜி, பப்ஸ், கேக் போன்ற சிற்றுண்டிகள் அனைத்தும் நேரங்களிலும் அங்கேயே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு வந்திருந்த பெரும்பாலோர் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி, புடவைகளில் வந்திருந்தனர். மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரிலும், வெளியே டவுண்டவுன் சாலைகளிலும் தமிழ் மக்கள் வேட்டி, சேலையுடன் நடமாடியதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதே தினங்களில் இந்தக் கன்வென்ஷன் சென்டர் வளாகத்தில் அமெரிக்க தேசிய மகளிர் கைப்பந்துப் போட்டியும் நடைபெற்றதால், அந்தப் பகுதியே திருவிழா கோலத்தில் இருந்தது.

அடுத்த நாள் திங்கள் காலையில் இங்கிருக்கும் ஒரு அரங்கில் எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி, இயக்குனர்-நடிகை ரோகிணி, பொன்ராஜ், மு.இளங்கோவன், கார்த்திகேய சிவசேனாதிபதி, நல்லசிவம், ஜெயமூர்த்தி, ராஜு ஆகியோர் கலந்துக்கொண்ட இலக்கியக் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. சுவையான, அர்த்தம் பொதிந்த பல அருமையான உரைகளை இந்த நிகழ்வில் கேட்க முடிந்தது. பேச்சாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்களும் பெறப்பட்டன. வெளியூர்களில் இருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் இதிலும் கலந்துக்கொண்ட பிறகு ஊர் திரும்பினர்.

மினியாபொலிஸில் ஒரு மொழியைச் சார்ந்து நடத்தப்பட்ட முதல் விழா இது. அது தமிழ் மொழி சார்ந்து நடத்தப்பட்டிருப்பது, மினசோட்டா தமிழர்கள் அனைவரும் பெருமைக் கொள்ளத்தக்க அம்சம். இதில் கலந்து கொண்ட உள்ளூர் தமிழர்கள் அனைவருக்கும் இது மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்திருக்கும். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களிடம் கலந்துரையாடக் கிடைத்த வாய்ப்பு மட்டுமின்றி, பிற ஊர்களில் இருந்து வந்த தமிழர்களிடம் அறிமுகம் கொண்டு அளவளாவவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இனி ஒவ்வொரு முறையும் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் எண்ணத்தையும் இவ்விழா அளித்திருக்கும். தமிழர் மரபு மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்ட விழா இதுதான் என மினசோட்டாத் தமிழர்கள் மார்தட்டிக் கொள்ளும் வகையில் இந்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

அடுத்த ஃபெட்னா தமிழ் விழா 2018இல் டெக்சாஸ் மாகாணத்தில் டாலஸ் நகரத்தில் நடைபெற உள்ளதாம். விழாக் குழு தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டது. பங்குகொள்வோரும் திட்டமிடலைத் தொடங்கிவிடலாம்.

-சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad