பிக் பாஸ் சர்ச்சைகள்
‘பிக் பாஸ்’. தமிழ் தொலைக்காட்சியை, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை, உலகில் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழரை ஆட்டி வைக்கும் சொல்லாகி விட்டது பிக் பாஸ். யூ டுயூபில் கிளிக் செய்யும் லிங்க்கில் எல்லாம் சுத்தமாகச் சவரஞ்செய்து கண்ணாடி போட்ட கமல் மேதாவித்தனம் காட்டி முறைக்கிறார். ஜூலியானா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சினேகன், காயத்ரி, ஓவியா எனப் பலரது பெயரைக் கேட்டு, படித்துக் காதுகளும், கண்களும் சிவந்து விட்டன. ஜி.எஸ்.டி. புண்ணியத்தால் புதுத் தமிழ்ப்படம் ஏதும் வராமல் போய்விட, சினிமா விமர்சனம் என்ற பெயரில் இயக்குனர்களுக்குப் பாடம் எடுத்தவர்கள் டச் விட்டுப் போகாமல் இருக்க, ‘வாசகர்கள் கேட்டுக் கொண்டதால்’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு நைசாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விமரிசிக்கத் துவங்கிவிட்டனர்.
‘ஊடக விபச்சாரம்’, ‘வக்கிரம் புடிச்சவனுங்க’, ‘அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்க்கிறதா?’, ‘கமல் சோரம் போய்விட்டார்’, ‘பண்பாடு, கலாச்சாரம் கெட்டுவிட்டது’, ‘ஜல்லிக்கட்டுப் பெண்ணை வைத்து டி.ஆர்.பி. ஏற்றுகிறார்கள்’, ‘தமிழர் மானம், வீரம், பெண்ணியம் எல்லாம் டேமேஜ் ஆயிடுச்சி’, ‘இதெல்லாம் வெறும் நடிப்புப்பா .. டிராமா..’ என்று கலந்து கட்டி பொங்குகிறார்கள் பலர். இருக்கிற எல்லா வார்த்தையையும் யூஸ் பண்ணிட்டானுங்களே என்று பொத்தாம் பொதுவாக ‘இந்து’ மதம் போற்றுகிறேன் பேர்வழி என்று சிலர் கொடி தூக்கியுள்ளனர். வழக்கம் போல மீம்ஸ், ட்ரோல் போட்டுச் சம்பாதித்துக் கொண்டே கண்டிக்கின்றனர் பலர்.
இவர்கள் அனைவரும் 1898ல் நிகோலா டெஸ்லா கண்டுபிடித்த சக்திவாய்ந்த பொருளை மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. என்ன கருவின்னு யோசிக்கறீங்க தானே? அட அடிக்கடி வீட்டு சோஃபா இடுக்கில ஒழிந்து கொள்ளுமே, அதே ரிமோட் கண்ட்ரோல் தான்.
சரி பாஸ்.. பிக் பாஸை விட்ருவோம்.. இந்தச் சந்தடி சாக்கில ஒரு விஷயம் உள்ளாற வர்றதைப்பார்த்து பக்குன்னு போச்சு. ‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – I will be watching’. இந்த ஒத்த வரியும், அந்த ஒத்தக் கண்ணும் தான் மொத்த வில்லங்கத்துக்கும் காரணம்.
உலகத்தில நடக்கிற எல்லா விஷயங்களையும், பதிமூணு பணக்காரக் குடும்பங்கள் சேர்ந்த க்ரூப் தான் ஆட்டுவிக்குது என்ற ஒரு கருத்து சில வருடங்களுக்கு முன் மேலை நாடுகளில் பரவியது. ‘இலுமினாட்டி’ன்னு சொல்லப்படற இந்த க்ரூப்ல, அந்த 13 குடும்பங்களோட வம்சாவளியில வந்த 6௦௦௦ பேர் இருக்காங்களாம். இந்தக் க்ரூப் முடிவு பண்ணித்தான் தங்கம் வெலை ஏறுதாம்; கச்சா எண்ணெய் வெலை கொறையுதாம். என்னது இது, ‘கோவாலு தனியா பெயிண்ட் அடிக்கிற’ கதை மாதிரி இருக்குமோன்னு நினைச்சித் தேடிப் பாத்தீங்கன்னா நெசமாவே அந்த மாதிரி ஒரு க்ரூப்பு இருக்குதுன்னு சொல்லும் கூகுள். ஆனா கூகுளே இலுமினாட்டிங்க விரிக்கும் வலை தான்னு அடிச்சுச் சொல்றாரு நம்ப ஹீலர் பாஸ்கர். சரி கொஞ்சம் சீரியஸாப் பார்ப்போம்.
இலுமினாட்டி:
‘வெளிச்சமூட்டு’ (illuminate) எனும் லத்தினிய வேர்ச்சொல்லிருந்து பிறந்த ‘இலுமினாட்டி’ எனும் பெயர் கொண்ட இக்குழுவிற்கு உலகத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்று பொருளாம். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 நபர்கள் ‘ஓர் உலகம்; ஓர் அரசு’ என்ற கொள்கையால் உந்தப்பட்டு 1776ஆம் ஆண்டு உருவாக்கிய இயக்கத்தின் பெயர் இலுமினாட்டி.
இலுமினாட்டி குழுவினர் சாத்தானை வணங்குபவர்கள் என்று சொல்லப்படுகிறது. சாத்தானின் எண் என்று சொல்லப்படும் 666 இவர்களின் ஒரு குறியீடு. பிரமிடு ஒன்றின் முனைப் பகுதியில் ஒற்றைக் கண் அமைந்துள்ளதும் இவர்களது அடையாளக் குறி. அமெரிக்க ஒரு டாலர் நோட்டில் இக்குறியீடு அமைந்துள்ளது உண்மையில் ஆச்சரியம் தான்.
இலுமினாட்டி உருவாகக் காரணமாகயிருந்தவர் ஆடம் வெஷாப்ட் (Adam Weishaupt). இந்தக் குழுவில் ராக்கஃபெல்லர், கென்னடி, டூபாண்ட், ரெய்னால்டு, காலின்ஸ், ராத்ஸ்சீல்டு போன்ற பதின்மூன்று செல்வந்தர் குடும்பத்தினர் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இலுமினாட்டியின் ‘ரத்தநாளங்கள்’ (Blood lines) எனப்படுகின்றனர். இவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு உலக வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் ஆள்கின்றனர் ; இவர்களது திட்டப்படி தான் உலக அரசியல் இயங்குகிறது. தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முனையும் இவர்கள், பல துறைகளில் செயற்கை முறையில் சிலரைப் பிரபலமடையச் செய்து தங்களது எண்ணங்கள் ஈடேறப் பயன்படுத்திக் கொள்வர். தாங்கள் வளர்ப்பவர்களை, அவர்களது செல்வாக்கு மற்றும் புகழைத் தங்கள் திட்டத்திற்கு உபயோகப்படுத்துவார்கள். இல்லுமினாட்டிகளின் திட்டங்களைத் தெரிந்தோ, தெரியாமலோ ஆதரிக்கும் இவர்களை ‘ஃப்ரீ மேசன்ஸ்’ (Free Masons) என்கிறார்கள். அதே சமயம் தங்களுக்குத் தடையாகத் தோன்றும் எதையும் இலுமினாட்டிகள் அழித்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மைக்கேல் ஜாக்சன், ஜான் கென்னடி, ராபர்ட் கென்னடி, ப்ரூஸ் லீ, மர்லின் மன்றோ, ஆப்ரஹாம் லிங்கன், ஜான் ஆஸ்வால்ட், இளவரசி டயானா, எல்விஸ் பிரஸ்லி போன்றவர்கள் இவர்களால் கொல்லப்பட்ட (உயிர் தியாகம் செய்யப்பட்டவர்கள்) ஃப்ரீ மேசன்ஸ் என்கிறார்கள். இந்த வரிசையில் அண்மையில் விபத்தில் இறந்த அஷ்வின் சுந்தரின் பெயரும் இதில் அடிபடுகிறது. இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில், ஏதோ ஒரு வகையில் இலுமினாட்டி கோட்பாடுகளைப் பரப்பினார்கள் என்ற ஆதாரங்களும்(!) இணையத்தில் பரவிக் கிடக்கின்றன. பல நாடுகளின் வளர்ச்சி, வீழ்ச்சியை இவர்கள் ‘ஃப்ரீ மேசன்ஸ்’ மூலமாகச் சாதித்துக் கொள்கிறார்கள் என்கிறார்கள். பல நாடுகளில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை / ஸ்திரமின்மை, அரசியல் போராட்டங்களெல்லாம் இவர்களது கைங்கர்யம் தானாம்.
இவர்களது ஆளுமையை யாரும் அறியாத வகையில் இயற்கையாக நடப்பது போல் செய்வதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இவர்களது சூழ்ச்சி நிரம்பிய செயல்பாட்டை விளக்க சில உதாரணங்கள் எனக் கீழ்க்கண்டவை விரிவாகச் சொல்லப்படுகின்றன.
· வேப்பங்குச்சி, உப்பு, கரித்தூள் கொண்டு பல்துலக்கி வந்தவர்களை, ‘ஈறுகெட்டுப் போகும்’ என்று அச்சுறுத்தி பேஸ்ட் பயன்படுத்தச்செய்து தற்போது ‘உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா?” என்று கேட்கிறார்கள்.
· கத்தாழை நாரால், மஞ்சள் தேய்த்துக் குளிப்பது பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்லி அழித்து விட்டு, இப்போது சோப்பில் ஆலுவேறா, டர்மரிக் சேர்ந்தது என்று விற்கிறார்கள்.
· இயற்கை வளங்கள் நிரம்பிய சோமாலியாவை வளர்த்து, பின்னர் சுரண்டி எடுத்துவிட்டு இப்போது பஞ்ச பூமி ஆக்கிவிட்டார்கள். இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் இன்னும் ஏகப்பட்ட நாடுகள் இவர்களது சூழ்ச்சிக்கு இரையானவை.
இவர்களது பார்வை இப்போது ஆசிய நாடுகள் மீது, குறிப்பாக சீனா, இந்தியா, ஜப்பான் மீது விழுந்துள்ளன எனப்படுகிறது. இந்திய அரசின் தற்போதைய செயல்பாடுகளுக்கு இவர்கள் தான் காரணமாம்.
சரி, இதற்கும் சாதாரணப் பொழுது போக்கு நிகழ்ச்சியான ‘பிக் பாஸுக்கும்’ என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு வலுவான காரணங்களை அடுக்குகிறார்கள் ‘ஆண்டி-இலுமினாட்டி’ எனும் சமூகப் பாதுகாவலர் சிலர்.
இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்
· மனதை மாற்றி அடிமைப்படுத்தும் நிகழ்ச்சியான இதை நடத்துவது, ஊடகத் துறையைக் கட்டியாளும் ராபர்ட் மூடாக்கின் (இவரும் ஃப்ரீ மேசனாம்) ஸ்டார் தொலைகாட்சி;
· இந்நிகழ்ச்சியின் அடையாளக் குறியீடான ஒற்றைக் கண் ( இது இலுமினாட்டியின் அடையாளம் ).
· செயற்கைப் பரபரப்புகளை ஏற்படுத்தி, பார்வையாளர்களை வசீகரித்து, மக்களின் எண்ணங்களைத் திசை திருப்புவது. (இத்தகைய தந்திரங்களால் தேவை-வழங்கலைக் (demand & supply) கட்டுப்படுத்தி உலகப் பொருளாதாரத்தை ஆள்கிறது இலுமினாட்டி)
· இந்நிகழ்ச்சியை நடத்திய, நடத்தும் அமிதாப் பச்சன், சல்மான் கான், கமல்ஹாசன் ஆகியோர் இலுமினாட்டி அனுதாபிகள், ஃப்ரீ மேசன்கள் (அமிதாப்பின் வளர்ச்சி / வீழ்ச்சி, சல்மான், கமல் ஆகியோரின் இறைமறுப்பு போன்றவற்றை உதாரணமாகக் காட்டுகின்றனர்).
குறிப்பாக, கமல்ஹாசனுக்கு ஃப்ரீ மேசன் முத்திரை குத்த இவர்கள் சொல்லும் காரணங்களைக் கேட்டால் நமக்கும் ‘ஒரு வேளை உண்மையாக இருக்குமோ?’ எனச் சந்தேகம் வரும் வகையில் அடுக்கிறார்கள். கமல்ஹாசனின் படங்களில் காலத்துக்கு முந்தைய சிந்தனைகள் வருவதை இதற்கு உதாரணம் காட்டுகிறார்கள்.
தசாவதாரம் படத்தில் ‘இபோலா’ கிருமியைப் பற்றிச் சொன்னது; ஹே ராம் படத்தில் இந்து முஸ்லிம் கலவரம் பற்றிப் பேசிய ஒரே ஆண்டில் குஜராத்தில் இச்சம்பவம் அரங்கேறியது ; விஸ்வரூபத்தில் பின் லேடன் இறப்பதாக, உண்மையில் அவர் இறக்கும் முன்பே, பதிவு செய்தது; அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றிச் சொன்னது; ஆளவந்தான் படத்தில் நந்து கதாபாத்திரத்தின் கனவு மூலம் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது போன்ற கருத்துகள் அவருக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக அன்பே சிவம் படத்தில் ஒரு காட்சியில் மாதவன் பணமில்லாமல் கிரெடிட் கார்டு மட்டும் வைத்துக் கொண்டு அலைவதைச் சுட்டிக்காட்டி இன்றைய இந்தியாவின் ‘கேஷ்லெஸ் எகானமி’ பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது எனச் சாதிக்கிறார்கள். அதே போல் இன்னொரு காட்சியில் மாதவன் ஒரு சிறுவனுக்குக் கிரெடிட் கார்டு கொடுத்து பந்து ஒன்றை வாங்கிக் கொடுப்பார். அந்தப் பந்தில் உலகப்படம் இருக்கும். கிரெடிட் கார்டு கொடுத்தால் உலகத்தையே வாங்கி விடலாம் என்பதை இதன் மூலம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல் அப்படத்தில் நாசர், சந்தானபாரதி இருவரும் இன்றைய மோடி, அமித் ஷா வை மனதில் வைத்து உருவாக்கினார் என்கிறார்கள். (ஒப்பனை கச்சிதமாகப் பொருந்துகிறது) ஏற்கனவே கமல் ஏதாவது கருத்துச் சொன்னால் அதற்குப் பல்லாயிரம் எதிர்ப்புகள் எழும். இப்போது கேட்கவே வேண்டாம்.
இருநூறு வருடங்களுக்கு முன்பு ‘ஓர் உலகம்; ஓர் ஆட்சி’ கோட்பாடு சாத்தியப்படுமென்று சிலருக்குத் தோன்றியிருக்கக் கூடும். அந்தக் கருத்தின் தாக்கம் இன்று வரை தொடர்வதும், இயற்கையாக நடைபெறும் உலக மாற்றங்களுக்கு இலுமினாட்டிகள் தான் காரணமென இன்றும் சிலர் நம்புவதும் வியப்பாகவுள்ளது. பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழ் மக்களிடையே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வழியே ‘இலுமினாட்டி’ கருத்துகள் நுழைந்து வலுப்பெறுவது வருத்தமளிக்கிறது.
– ரவிக்குமார்