\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பைக் குறைக்குமா?

சென்ற சில வருடங்களாகக் கணனித் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியில் முன்னணியை அடைந்துள்ளமை நாம் அறிந்த விடயம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் கணனிகள் தாமாகத் தகவல் ஆராயும் வல்லமையில் பல மடங்குகள் வளர்ந்துள்ளன என்று ஒப்பீட்டளவில் நாம் அவதானிக்கலாம்.

இந்த வளர்ச்சி கைத்தொலைபேசிக் கமெரா படமெடுப்பதற்கு நமக்கு உபயோகமாகும் போது யாவருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் மனிதன் பகுத்து அறியும், மிகுந்த சம்பளத் தொழில் முறைகளாகிய மனித உரையாடல்களை வர்த்தக, நீதிமன்ற சட்டத்தரணி விவாதத்தில் உடன் கிரகித்து தொழிற்படல், உடன் அனுமானித்து வெற்றி / பரிகாரம் தேடல், நோய்களை நோயாளிகள் ஆய்வு கூட, சிகிச்சைத் தரவுத் தகவல்களில் இருந்து துரிதமாகக் கண்டுபிடித்தல், வர்த்தக ஒப்பந்தங்களின் உட்பொருட்களைத் தமது கட்சிக்காரருக்கு ஆதாயமாக உள்ளனவா என்று துரிதமாக வாசித்துத் தெரிந்து கொள்ளல், புதிய இயந்திர தொழில் நுட்பப் பாகங்களை முழுதாகத் தாதுப் பொருட்களில் இருந்து தயாரித்துக் கொள்ளல், மேலும் கிடைக்கும் தரவு தகவல்களைக் கொண்டு பிரத்யேகப் புதுச் சிந்தனைகளை, விஞ்ஞான ஆய்வுக் குறிக்கோள்களை கணனிகள் சுயமாகவே எற்படுத்திக் கொள்ளுதல் ஆகிய யாவுமே மனித நிபுணர் ஒத்தாசை இன்றி நடை பெறலாம். இது வயிற்றுப் பிழைப்பு வருமானத்தில் கை வைக்குமாயின் நம்மிடையே ஆட்சேபணை வருவது இயல்பு.

கணனி மூலச் செயற்கைச் சிந்தனைச் செயற்பாடு (Artificial Intelligence):

கணனி மூலச் செயற்கைச் சிந்தனைச் செயற்பாடு என்பது இயந்திரப் புரிந்துணர்வு (machine learning) எனப்படும் தொழிநுட்ப முறையினால் சாத்தியமாகிறது. இது தரவுத் தகவல்கள் (data), புள்ளிவிபரவியல் (statistics), மற்றும் துரிதப் பன்முகக் கணக்கீடுகள் (multivariate analysis) போன்ற முறைகளை உள்ளிட்ட அனுமானிப்புச் செயல்முறையாகும் (computational processes). இந்த ரக அனுமானங்கள் மனித நிபுணர்கள், விஞ்ஞானிகள், ஆய்வலர்கள் ஆகியோர் தமது பல்லாண்டு கால அனுபவங்களைக் கொண்டு போதிய காலம் செலவளித்து எடுக்கும் முடிவுகள். ஆயினும் இன்றோ இவற்றைச் சில நிமிடங்களில் இயந்திரப் புரிந்துணர்வுச் சாதனங்கள் தருகின்றன.

இப்பேர்பட்ட மென்பொருட்கள் இன்று, தொழிற்சாலை இயந்திரங்கள், தாமாகவே வழிசெலுத்தும் ஊர்திகள், விவாசாயப் பாரிய அறுவடை இயந்திரங்கள், பண்டம் பரிமாறும் வான் பறக்கும் இயந்திரங்கள் (delivery drones) மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பிற்காகப் பறக்கும் டிரோன் போன்றவற்றில் பொருத்தப்பட்டுள்ளன, இந்த வகைத் தொழில் நுட்பமானது அதைப் படைத்தவர்கள் எவ்வாறு தமது படைப்புக்கள் தொழிற்படும் என்று நினைத்ததற்கும் மேலாக துரிதமாக அவற்றின் உபயோகங்களில் வளர்ந்தவாறேயுள்ளன. ஒரு காலத்தில் கணனி செயற்கைப் புரிந்துணர்வு மென்பொருள் ஆக்குதல் முயற்சி வேடிக்கை விளையாட்டாகவே இருந்து வந்தது.

ஆயினும் 19ம் ஆண்டு பிரித்தானியக் கணனி விஞ்ஞானி அலென் டர்னிங்க் (Alan Turing) இயக்கிய கணனி மனித மயம் பரிசோதனையைத் தற்போதைய கணனிகள் முறியடித்துள்ளன. இன்று டீப் மைன்ட் (Deep Mind) எனப்படும் செயற்கைப் புரிந்துணர்வுக் கணனி, அனுபவமுள்ள மனிதர்க்கே கடினமான கோ (Go) , மற்றும் சதுரங்க விளையாட்டுக்களில் எல்லாம் மனிதர்களைத் திரும்பத் திரும்ப வென்றுள்ளது. இது நிச்சயமாக மனித அனுபவம் என்ற மனத்திடகாத்திரத்திற்கு, சிந்திக்கும் கணனிகள் சிறிது சிறிதாக உலை வைக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டும் என்ற அச்சம் சிலர் மத்தியில் எழும்பியுள்ளது.

விஞ்ஞானக் கற்பனைக் கட்டுக்கதை வாசிப்பது என்பது ஒன்று, ஆனால் கணனிகளின் வல்லமை மனித சிந்தனை ஆற்றலிற்கு அப்பால் முன்னேறும் தறுவாயில் இருப்பது பல அசெளகரியச் சிந்தனைகளுக்குத் தள்ளியுள்ளது.

இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து 2015ம் ஆண்டு வந்த கார்ல் ஃபிரே மற்றும் மைக்கேல் ஆஸ்போர்ன் ஆய்வு அறிக்கை ஏறத்தாழ 47% சதவிகித அமெரிக்கத் தொழில் வாய்ப்புக்கள் செயற்கைக் கணனிப் புரிந்துணர்வு சார்ந்த தொழில் நுட்பத்தினால் பாதிப்புற்றும், மறைந்தும் போகலாம் என்கின்றது. பல காரியாலய மனித பரிபாலனை வேலைகள் படிப்படியாக கணனித்துவத்திற்கு மாறிவிடும் என்பது நாம் வரலாற்று ரீதியில் அறிந்ததே. மேலும் சுயமாகச் செல்லும் வாகனங்கள் (drones) பண்டங்களைத் தினமும் ஏற்றிவரும் 3.5 மில்லியன் பேருந்து வாகனங்களில் ஓட்டுனர்களை வேலையை விட்டு அகற்றலாம் என்கிறது இந்த அறிக்கை.

இவையாவும் புள்ளிவிபரவியல் அனுமானிப்புக்களே. மக்கள் உடன் மிரட்சியடைய வேண்டியது இல்லை. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இந்த அறிக்கை விலக்கப்படும் தொழில் வாய்ப்புக்களை மாத்திரம் நோக்கியது, ஆயினும் தொழில் வாய்ப்பு உருவாக்கம் பற்றித் தெரிவிக்கவில்லை.

3.5 மில்லியன் தொழில் வாய்ப்புத் துண்டிப்பு என்ற கணித எண்ணிக்கையில் நிச்சயம் அச்சுறுத்தத்தான் செய்யும். ஆயினும் பெரிய அளவிலான அமெரிக்கப் பொருளாதாரத்தில் இது இரண்டு மாதத்தில் துண்டிக்கப்பட்ட தொழில்களுக்குச் சமன் ஆகும். ஆனால் ஒப்பீட்டளவில் அதே அவகாசத்தில் சுமார் 6 மில்லியன் மக்கள் ஓய்வு பெறுவதன் மூலமாகவோ அல்லது தாமாகவே வேலை நீங்குவதாகவோ, சராசரியாக வேலையிலிருந்து அகன்றவாறேயுள்ளனர்.

அமெரிக்கப் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இன்றும் மிகவும் துரிதமாக இயங்கும் வல்லமை உடையது. ஒருபுறம் பழமை வாய்ந்த தொழில்கள் துண்டிக்கப்பட மறுபுறம் புதிய தொழில் வாய்ப்புக்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வாறு உள்ளன. அமெரிக்க மண்ணில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறாத விடயம்.

நாம் அண்மைக்காலப் பொருளாதாரத் தரவுத் தகவல்களை எடுத்துப் பார்த்தால் தொழில் நுட்பம் முன்னேறும் அதே நிலையில், பழமை வாய்ந்தவை எனப்படும் உற்பத்தித் தொழில் வாய்ப்புக்களும் வளர்ந்தவாறேயுள்ளன. செயற்கைப் புரிந்துணர்வு (Artificial Intelligence) கணனித் தொழில் நுட்பங்கள் முன்னேறியவாறே உள்ளன அதே சமயம் 2008 ஆம் ஆண்டு பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் அமெரிக்கத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து வளர்ந்தவாறே உள்ளது.

தொழிலாளர் செலவிடும் உற்பத்தி நாழிகைகள், மணித்தியாலங்கள் அதன் உச்ச கட்டத்தில் உள்ளன. பாரிய பொருளாதாரத் தாழ்வின் பின்னர் தொழிலாளர் உற்பத்தி 14.5 சதவீதம் உயர்ந்துள்ளமையும், அமெரிக்கத் தொழில் வாய்ப்பின்மை 4.3 சதவீதத்தில் இருப்பதும் இவ்விடம் உற்சாகத்திற்கு உரிய விடயமே.

இந்த நற்செய்திகள் ஒருபுறம் இருப்பினும் நாம் வேறு ஒன்றையுமே சிந்திக்க வேண்டியது இல்லை என்றும் இருந்து விடமுடியாது. ஒவ்வொரு புதிய மாற்றங்களும் பக்கவிளைவுகளையும் உண்டு பண்ணவே செய்கின்றன.

தற்போது நாம் அமெரிக்கத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை நோக்கினால் இரண்டு பிரதான அம்சங்களை அவதானிக்கலாம்.

1. தொழில் வாய்ப்பு உருவாக்கல் உந்துதல் குறை

– தொழில் வாய்ப்பு உருவாக்கல் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகினும், அதன் உந்துதல் பலன் முன்னைப் போல இல்லை. முன்பு பொருளாதாரம் எனும் தொழில் வாய்ப்பு உற்பத்தி இயந்திரமானது கை நிறையச் சம்பளம் தரும். உழைத்து, வாழ்வில் உயர்வு பெறத் தரமான நடுத்தர வர்க்கத் தொழிலாளிகளிற்கு வாய்ப்பைத் தந்து வந்துள்ளது. ஆயினும் இன்றோ உழைத்துச் சம்பளத்தில் உயர்வு பெற முடியாத இரண்டாம் ரக வாழ்க்கையே நடுத்தர வர்க்கத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர். இது அடிப்படையில் தொழிலாளர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்ட சூழல் அல்ல என்று பொருளாதார வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக விளக்குகின்றன.

மேலும் அமெரிக்க நடுத்தரத் தொழிலாளர்கள் சிந்தித்தல், பகுத்து அறிதல், ஊதியத்தை நிர்வகிப்பது, வருமான வரிக் கணக்கெடுப்புக்கள் மற்றும் எழுத்தர் போன்ற தொழிலேயே பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பேர்ப்பட்ட தொழில்கள் படிப்படியாகக் கணனி மயமாகி விட்டன.

புதிய தொழில்களோ பிரதானமாகக் குறைந்த சம்பளம் கொண்ட, உடலுழைப்பைச் சார்ந்த தொழில்கள், சுகாதாரச் சேவைத் தாதிகள், வயோதிகர் பரிபாலனை மற்றும் சிற்றுண்டிச் சமையல்காரர் போன்றவற்றிலேயே வளர்கிறது. இப்பேர்ப்பட்ட வேலைகள் தற்போதைக்கு இயந்திரங்களால் சுயேட்சையாகச் செய்ய முடியாத தொழில்கள். அதே சமயம் அவை தரும் சம்பளமோ வாழ்விற்குப் போதாது.

2. புறக்கணிக்கப்பட்ட சமூகத்தில் தொழில் வாய்ப்பு இன்மை

– அரசுத் தொழில் இலாக்காவின் புள்ளி விபரங்கள் தொழில் வாய்ப்பு இன்மை குறைவாகவே உள்ளது என்று குறிப்பிடினும் இது சமூகத்தின் பொதுவான அனுபவம் அல்ல.

இந்தத் தொழில் வாய்ப்பு இன்மை பொதுவாகத் தொழில் தேடிக் களைத்துக் கை விட்ட தொழிலாளி மக்களைக் கணக்கெடுப்பது இல்லை. இது பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு வெறுப்பைத் தரும் விடயம். ஆயினும் செய்தித்தாளில், அரசியல்வாதிகள் தமது பொருளாதாரம் முன்னோக்கி நகர்கிறது என்ற பேச்சுகளில் உள்ளெடுக்கப்படுவதும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தாம் கண்டும் காணப்படாத மக்கள் என்று எடுத்துக் கொள்வர். முக்கியமான சிக்கல் இந்த அருகதைக்கு உள்ளான மக்களில் பலர் கடின உழைப்பில் ஈடுபட்டிருந்த மக்கள் ஆயினும் இலத்திரனியல் புதிய தொழில் பாடு அனுபவத்தில் பின்தங்கியவர்கள்.

2016 இல் தொகுக்கப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கையின் படி அமெரிக்கத் தொழிலாளர்களில் 16 சதவீதமான 23 வயதிற்கும் 54 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கூடமோ அதை விடக் குறைந்த கல்வியறிவுடனோ இருந்ததால் நிரந்தரத் தொழில் வாய்ப்பு இன்மைக்குத் தள்ளப்பட்டனர் என்கிறது. கணனியல் காலத்திற்கு முதல் இந்த மக்கள் தமது தொழில் ரீதியில் தமது குடும்பங்களை உழைத்துப் பராமரிக்கும் ஆற்றலைக் கொண்டு இருந்தனர்.

இவர்கள் தொழில் வாய்ப்பு மறைந்ததற்குப் பல காரணிகள் உண்டு, எனினும் இந்த மக்கள் தமது வயதில் தொழில் உற்பத்தித் திறனில் திடகாத்திரமாக இருப்பினும் அவர்கள் பயின்ற வேலை வாய்ப்புக்கள் மீள முடியாமல் அகன்று விட்டன. அவர்கள் தற்போது தேடும் வாய்ப்புக்களும் படிப்படியாகக் கணனி, இயந்திர மயமாக்கப்பட்டுள்ளன.

எனவே அமெரிக்கப் பொருளாதாரத்தின் கீழ்ப்பாதி ஐம்பது சதவீதத் தொழிலாளர்கள் ஊதியம் பல தசாப்தங்களாக உயரவே இல்லை, அதே சமயம் படித்தவர், கணனியியல் துறைகளில் மக்கள் கை நிறையச் சம்பாதிக்கின்றனர். இது ஊதியச் சமமின்மையை மேலும் தீவிரமாக்கியது. இன்று பாலம் கட்டுவதற்கும், சாலை போடுவதற்கும் பழைய காலம்போன்று ஆள் பலம் தேவை இல்லை. எனவே உடல் பலத்தை நம்பியிருக்கும் அனுபவம் மிக்க பல தொழிலாளிகள் பாடு துயரமே. வளரும் பொருளாதாரத்தில் இந்த மக்கள் பலவிதத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களேயாவர்.

நற்செய்தி இவ்விடம் என்னவென்றால் வெள்ளை மாளிகை சூழல் மாசு நிவற்று சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணிக்க விரும்பினும், அமெரிக்க வர்த்தகங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ( Renewable energy sources ) துறைகளில் பெருமளவு
அக்கறை காட்டுகின்றன. இது ஒரு திடகாத்திரமான, எதிர்காலத்திற்கும் புதிய தொழில் வாய்ப்பிற்கும், சூழல் மேம்பாட்டிற்கும், அடிப்படைப் பொருளாதாரத்திற்கும் அத்திவாரம் போடும் செயல்களாகும்.

எதிர்காலத் தொழில் வாய்ப்பு:

எரிபொருள் எண்ணெய் , நிலக்கரி அகழ்வுகள், புதிய சூரிய ஒளிக்கதிர், காற்றாடி மின்னிலைய உருவாக்கங்கள் ஆகியவை எதிர்காலத் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குகின்றன. மேலும் இந்த மின்சத்தி உண்டு பண்ணும் இயந்திரங்களை உருவாக்க, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க தொழிலாளர்கள் பலர் தேவை. இன்று பண்டைய நிலக்கரி அகழ்வுத் தொழிலாளர் எண்ணிக்கையைக் காட்டிலும் அமெரிக்காவில் சூரிய சக்தி உற்பத்தித் தொழிலாளர்களே அதிகமானவர்கள். ஏற்கனவே காற்றாடி மின்சக்தி உற்பத்தித் தொழிலாளர்கள், நிலக்கரி அகழ்வு தொழிலாளர்களைக் காட்டிலும் இரு மடங்கு ஆகி விட்டனர். இந்தத் தொழில்களே நடுத்தர மக்களின் தகுதியான எதிர்காலச் சம்பளம்.

நாட்டின் தொழில் வாய்ப்பு உயிர் நாடி சிறுதொழில் வர்த்தகங்கள்:

அமெரிக்கப் பொருளாதாரத்தின் பிரிவினைக் காரணிகளில் நாம் எடுத்துப் பார்க்க வேண்டியதொன்று பாரிய வர்த்தகத்தாபனங்கள் இன்னும் பெரிதாகத் தொழிலாளிகள் குறைத்து வருமானத்தை உயர்த்திக் கொள்ளும் அதே சமயத்தில், நாட்டின் உயிர் நாடி ஆகிய சிறுவர்த்தக அமைப்புக்கள் உருவாகுதல் சென்ற சில தசாப்தங்களாகக் குறைந்த வண்ணம்இருப்பதே.

நாட்டின் பிரதானத் தொழில் வாய்ப்பு உருவாக்கிகள் சிறுவர்த்தக வியாபாரத் தாபனங்களே. அமெரிக்கப் பொருளாதாரத்தில் 25 மில்லியன்களுக்கு மேற்பட்ட அளவில் நிதியை சமுதாய மேம்பாட்டுக்குத் தருவது சிறிய வர்த்தகங்களே. அவற்றின் உரிமையாளர் அவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர்உழைத்துச் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் மறைத்து வைத்திருக்கும் போதும், அவைகளே நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்கள்.

சிறுதொழில் வர்த்தகங்கள் பிரதானமாக வாடிக்கையாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து வியாபாரம் செய்யும் அமைப்புக்கள். இங்கு நேரடி வர்த்தகர் வாடிக்கையாளர் உறவுகளே முக்கியமானவை. இவை ஒட்டு மொத்தமாக இயந்திரம் அல்லது சுயேட்சைக் கணனி மென்பொருள் ஆகியவற்றைக் கொண்டு அமைத்துக் கொள்ள முடியாத தொடர்புகள்.

இந்தச் சிறுதொழில் வர்த்தகங்கள் நேரடியாகப் பெரும் கணனித் துறை உதவி கொண்டமைந்தவையல்ல. இவை உருவாக்கும் தொழில்களில் நவீனக் கணனிக் கருவிகள் காணப்படினும் அன்றாடத் தொழிற்பாடு மனிதத் தொழிலாளர்களை நம்பியே அமைகின்றன.

அமெரிக்க நாட்டுத் தொழில் வாய்ப்பு எதிர்காலம்:

அமெரிக்காவில் தொழிலாளர் மேம்பாட்டைத் தரும் சிறுதொழில் வர்த்தகங்களை வளர்க்கவே முழுமூச்சாக சமூக, உள்ளுர் அரசுச் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் நடைபெற வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை மாத்திரம் நாம் தொழில் வாய்ப்பு இன்மைகளுக்குச் சாடுதல் யதார்த்தம் இல்லாத செயலாகும்.

கணனி இயந்திரச் சுயேட்சச் சிந்தனை இன்னும் வளரவேயுள்ளது. அதன் ஆற்றலை நாம் ஆவலுடனும், வியப்புடனும் பார்க்கலாம், இல்லை அச்சத்துடனும் அணுகலாம். ஆனால் இன்றைய தொழில் வாய்ப்புப் பரிணாம வளர்ச்சிக் கணனித்துவம், செயற்கை ரோபாட் இயந்திரங்களால் மாத்திரம் கைப்பற்றப்படப் போகின்றன என்பது சாத்தியமற்ற சிந்தனை.

அமெரிக்க நாட்டுத் தொழில் வாய்ப்பு உற்பத்தி இயந்திரமாகிய சிறுதொழில் வர்த்தங்கள் உருவாக்கல் ஏன் குறைந்தது? அவற்றை எவ்வாறு பாரிய வர்த்தகங்கள், அரசியல் கட்டுமான யாப்புக்களில் இருந்து பாதுகாக்கலாம் என்பதைப் பார்த்துக் கொள்வதில் தான் முழுமூச்சான கரிசனை குடிமக்களாகிய நமக்கு அவசியம்.

தொழிலாளர்களை மேம்படுத்தும் சிறுதொழில் வர்த்தகங்கள் வாடிக்கையாளர், மற்றும் தொழிலாளர் ஆகியோரின் வாழ்க்கை மேம்பட அடிப்படை கணனி, இயந்திர தொழில் நுட்ப முன்னேற்றம் அவசியம். அமெரிக்கர்கள் இவற்றைப் பேணி, பிரகாசமான எதிர்காலத்தை நோக்குவது சாலவும் சிறந்தது.

தொகுப்பு – யோகி அருமைநாயகம்

    உச்சாந்துணை நூல்கள் :

  • -Alan Turing: one of The Great Philosophers by Andrew Hodges
  • -On computable numbers, with an application to the ENTSCHEIDUNGSPROBLEM, A.M. Turing , 1936
  • -The future of employment: How susceptible are jobs to computation?, Carl Benedikt Frey and Michael A, Osborne, Sept 17, 2013
  • -FRED Graph 2000-12-01 2017-04-01, U.S. Bureau of Labor Statistics
  • -FRED Nonfarm Business Sector: Hours of All Persons Graph 1947-01-01 to 2017-01-01
  • -FRED Civilian Unemployment Rate Graph 1948-01-01 to 2017-05-01
  • -Obama’s Final Jobs Report Marks 75 Consecutive Months of Growth, Bourree Lam, The Atlantic, Jan 6, 2017
  • -The long-term decline in prime-age male labour force participation, Whitehouse June, 2016
  • -Today’s energy jobs are in solar, not coal by Nadja Popovich, The New York Times April 25,2017
  • -Top ten signs of declining business dynamism and entrepreneurship in the US, By John Haliwanger, University of Martland and NBER, August 2015

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad