மினசோட்டா
கனடாவின் எல்லைக் கோடாய்
அதன் உறவுப் பாலமாய்
கனடாவுடன் இணைத்தும் பிரித்தும்
அழகான அமைவிடத்தில் மினசோட்டா
இது கவிதைக்கான வெறும்
கற்பனைச் சிதறல்கள் அல்ல
உண்மை ஊற்றுக்களின் பிரவாகம்
ஒவ்வொரு பருவ மாற்றத்திலும்
வெவ்வேறு அழகு காட்டி
மிரள வைக்கும் பெண்ணைப் போல்
குளிர், மழை , கோடை இலையுதிர் என
அள்ளி வீசப் படும் அழகுக் கோலங்கள்!
மினசோட்டாவுக்கு நான்
விரும்பி வரவில்லை என்பது நிஜம்
இப்போது இங்கிருந்து
போக விரும்பவில்லை என்பது
அதைவிட நிஜம்!
நிறம் மதம் மொழி நாடு என்ற
பேதங்களுக்கு அப்பால்
மனிதத்தை நேசிக்கும் மக்கள்!
முந்தி பிந்தி என்ற
வில்லங்கத்தை விலக்கி விட்டு
எல்லோரும் வந்தவர்தான் என்ற
யதார்த்தத்தில் ஒன்றினையும் இந்த
மக்களின் தெளிவு!
ஆர்ப்பாட்டங்கள் இல்லாத தேர்தல்கள்
வீட்டுக்காரனின் அனுமதி பெற்று
விளம்பரம் ஓட்டும் நாகரிகம்!
நடுச்சாமம் கடந்த நேரத்திலும்
ஆளரவமற்ற சூழலிலும்
பச்சை விளக்கை எதிர்பார்த்து
சிவப்பு விளக்கில் தரித்து நிற்கும் சாரதி!
ஓ ! கடைசிக் குடிமகனும் சட்டத்தின் காவலனாய்
ஓடும் பஸ்ஸில் ஒருபக்கத்தில் விளம்பரம்
“அமெரிக்காவில் எயிட்ஸ் நோயாளிகள்
நான்கு லட்சம்
வைத்தியத்தில் குனமானோர்
யாருமில்லை!”
ஒழுக்கமாய் வாழ் அல்லது
ஒழிந்து போ இதை நாகரிகமாய் சொன்ன விதம்!
கையில் இருக்கும் அடையாள அட்டையை
வாங்கிப் பார்க்கும் தேவையில்லாமல்
எல்லோரின் சரித்திரத்தையும்
விரல் நுனியில் வைத்திருக்கும்
புலனாய்வு நுணுக்கம்!
இரவிரவாய் பனிகொட்டும்
விடிந்து பார்த்தால்
ஒன்றரை அடி பனிப் பொழிவில்
முற்றம் ஒழித்துக் கொள்ளும்! ஆனால்
குச்சொழுங்கை தொட்டு
பெருந் தெருக்கள் வரை
வாரிக் கொட்டி உப்படித்து
மறுநாள் இயக்கத்துக்கு
பளிச்சென்று வைத்திருக்கும்
நகர நிர்வாகம்!
கைவிட்டு எகிறி
மேலெழுந்து செல்லும் எரிபொருள் விலை
மீண்டும் கைக்குள் வந்து
அடங்கி விடும் உலக அதிசயம்!
வருமானத்தை விட
வாடிக்கையாளரை மதிக்கும்
பல்தொழில் நிறுவனங்கள்!
பனிப் பொழிவின் வெண்மையிலும்
பசும் புல்லின் பச்சையிலும்
இலையுதிர் கால மஞ்சளிலும்
அடிக்கடி உடை மாற்றிக் கொள்ளும்
மினசோட்டாவின் அழகுக் கோலங்கள்!
அமெரிக்காவின் வெள்ளை வானத்தில்
ஒரு கருப்பு நட்சத்திரத்துக்கு
மீண்டும் மீண்டும் முடிசூட்டி
ஆபிரகாம் லிங்கனுக்கும்
மாட்டின் லூதர்கிங்கிட்கும்
மலர்வளையத்தை தூக்கி எறிந்து விட்டு
மாலை சூட்டுவதில் இணைந்து கொண்ட
மினசோட்டாவே
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்!
கோடிக் கணக்கான
வாக்கு மலர்களின் அர்ச்சனையில்
அமெரிக்காவில் மனிதம் வென்று
மகுடம் சூட்டிய போது
என் கையில் இருந்தும் ஓர்
ஒற்றை இதழ் விழுந்தது!
புல்லரிக்கும் நினைவுகளில்
நான் இன்னும் மூழ்கிப் போகிறேன்!
இவையெல்லாம்
நான் மினசோட்டாவை
நேசிப்பதற்கான விபரங்கள் அல்ல
சிறுகுறிப்பு மாத்திரமே !
– முல்லை சதா