காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூலை 2017)
முந்தைய பகுதிகளைக் காண,
சொற்பக் காலம் இருந்த திரையுலக வேலை நிறுத்தமா அல்லது வேறென்னமோ தெரியவில்லை. கடந்த இரு மாதங்களில் சூப்பர் ஹிட் பாடல்களின் எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல்தான். இந்தக் காலக்கட்டத்தில் இளையராஜா சில கோரமான படங்களுக்கு இசையமைத்திருந்தார். ரஹ்மான் இசையமைத்த நேரடி தமிழ் படங்கள் ஏதுமில்லை. ஹாரிஸும், சந்தோஷும் தலா ஒரு படத்துக்கு இசையமைத்திருந்தனர். யுவன், மூன்று படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும், ஒன்றும் தேறவில்லை. வரிசையாகப் பாடல்கள் வெளியிடுவது இமான் தான். டெம்ப்ளேட் இசையென்றாலும், கேட்க வைக்கும் இசையைக் கொடுக்கிறார்.
சரவணன் இருக்கப் பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை
பவர் பாண்டிக்குப் பிறகு, ஷான் ரோல்டனின் பாடல்களுக்கு நல்ல கவனிப்பு ஏற்பட்டு உள்ளது. இது இமான் பாடல். பாடியது ஷான். உதயநிதி ஹாரிஸை கைவிட்டு விட்டு, இமானை கைப் பிடித்திருக்கிறார். இயக்குனர் எழிலுக்கு ஒரு படத்தில் காமெடி க்ளிக் ஆகிறதென்றால், இன்னொன்றில் மொக்கை ஆகிவிடும். இது இரண்டாம் ரகம். இமானின் பாடல்களும், ரெஜினா தரிசனமும் மட்டும் படத்திற்குக் கொஞ்சம் மரியாதை சேர்த்தது.
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
பாகுபலி 2 – பலே பலே பலே பாகுபலி
இந்திய சினிமாவைப் புரட்டிப் போட்ட படம். தமிழ்நாட்டிலும் பெரிய ஹிட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாகுபலி, பாகுபலி என்று தான் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இந்தியப் புராணக் கதையை, லேட்டஸ்ட் டெக்னாலஜி துணைக் கொண்டு பிரமாண்டமாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், பாடல்களிலோ, இசையிலோ அந்த நவீனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கீரவாணியின் மெல்லிசை பாடல்கள், படத்துடன் பார்க்க நன்றாக இருந்தது.
போர்க்களத்தில் தீயாவான்
தாய் மடியில் பூவாவான்
ஆண்டவனே ஆணையிட்டும்
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்
அதாகப்பட்டது மகாஜனங்களே – ஏனடி நீ என்ன இப்படி
நாம் சில மாதங்களுக்கு முன்னர் இப்பாடல் குறித்த அறிமுகம் கொடுத்திருந்தோம். கடந்த மாதம் படம் வெளியாகி, எவ்வித வரவேற்பும் இன்றிச் சென்று விட்டது. தம்பி ராமையாவின் பையனுக்கு முதல் படம் என்ற வகையில் ஓகே ரகம். இமான் இசையில் கார்த்திக், ஸ்ரேயா கோஷல் பாடிய இந்தப் பாடல் ஓஹோ ரகம்.
நித்தமும் கோயில் சென்று
வரும் பக்தர்கள் செய்வது யாகம்
இத்தனை பேரும் ஏங்க
வரம் என்னிடம் வந்தது யோகம்
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – அம்முக்குட்டியே
அதர்வா ஜெமினிகணேசனாகவும், சூரி சுருளிராஜனாகவும் நடித்த படம். இமான் பெரிய படம், சின்னப் படம், பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. எல்லாப் படங்களுக்கும் ஒரே தரத்தில் போட்டுக்கொடுக்கிறார். அதில் ஒன்றிரண்டு கன்சிஸ்டெண்டாக ஹிட் ஆகிவிடுகிறது. இந்தப் படத்தில் ‘அம்முக்குட்டியே’ அப்படி ஒரு பாடல். யுகபாரதியின் பாடல் வரிகளை, பிரதீப் குமார் கலக்கலாகப் பாடியிருக்கிறார். சீரியஸான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த பிரதீப், இப்போது விதம் விதமாகப் பாடி வருகிறார்.
ஒட்டுமொத்த ஊரும்
அண்ணாந்து பார்க்க சிட்டாகுற
முத்தம் ஒண்ணு கேட்டா
மின்சாரம் போலக் கட்டாகுற
விக்ரம் வேதா – டசக்கு டசக்கு
திரைக்கதை ரொம்ப பர்ஃபெக்டா இருப்பதைக் குறையாகக் கூறப்பட்ட படம் இதுவாகத் தான் இருக்கும். ஜிஎஸ்டியைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம். விக்ரம் என்னும் விக்ரமாதித்தனாக மாதவனும், வேதா என்னும் வேதாளமாக விஜய் சேதுபதி என்று அட்டகாச காம்போ அமைத்திருக்கிறார்கள். சி. எஸ். சாம் பாடலும், இசையும் செம ப்ரெஷ். அதிலும் டசக்கு பாட்டு ரகளை. பாடியவர்கள் – முகேஷ், எம்.எல்.ஆர்.கார்த்திகேயன், குணா.
கெத்தா அன்ப கொடுத்தா
நட்ப கொடுப்போம்
கண்ணுக்கு கண்ணா
கையி பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கு நீயும் வந்தா
அனிருத்தின் ‘விவேகம்’, சந்தோஷின் ‘சர்வர் சுந்தரம்’, ஜி.வி. பிரகாஷின் ‘செம’, ஷானின் ‘விஐபி 2’, இமானின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படப் பாடல்களும் வெளியாகியுள்ளன. அவற்றை அடுத்தப் பகுதியில் காணலாம்.
சரவணகுமரன்