\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தவத்தில் எழுந்த தேவாலயம் – Grotto of the redemption

ஜெர்மனியில் 1872 ஆம் ஆண்டு பிறந்த பால் டோபர்ஸ்டேன் (Paul Dobberstein) தனது இருபதாவது வயதில் கல்லூரி கல்விக்காக அமெரிக்கா வந்தார். மில்வாக்கியில் ‘செயிண்ட் பிரான்சிஸ் தே செல்ஸ்’ (Saint Francis de Sales) கல்லூரியில் மதகுருக்களுக்கான படிப்பைப் படித்தார். படித்து முடித்து, தனது பொறுப்பை ஏற்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஜன்னி காய்ச்சலில் படுத்தார். அச்சமயம் கன்னிமாதாவிடம், தான் உயிர் பிழைத்து வந்தால், அவருக்குத் தேவாலயம் கட்டுவதாக வேண்டினார். அவரது வேண்டுதல் பலித்தது. மீட்சிக்கான மண்டபத்தை (Grotto of Redemption) எழுப்புவதற்கான எண்ணம் அப்போது பிறந்தது.

படிக்கும் காலத்திலேயே, மாதாவிற்கு ‘கிரட்டோ’ என்றழைக்கப்படும் வழிப்பாட்டு குகையைக் கல்லூரியில் அமைத்திருந்தார் பாதிரியார் பால். வழிப்பாட்டுக் குகைகள், ஐரோப்பியாவில் உருவான கட்டிட வடிவங்கள். அதை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியர் பால். அன்று அவருடன் படித்தவர்களில் பலர், அவர் எழுப்பிய அந்தச் சிறு வழிப்பாட்டுக் குகையால் ஈர்க்கப்பட்டு, வேறு பல இடங்களில் அது போன்று வழிப்பாட்டுக் குகைகளைக் கட்டினார்கள். அவ்வகையில் அமெரிக்காவில் இதற்கு முன்னோடி என்று பாதிரியார் பால் டோபர்ஸ்டேனைக் கூறலாம்.

படிப்பிற்குப் பிறகு, அவருக்கான பாதிரியார் பொறுப்பு ஐயோவா (Iowa) மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பெண்ட் (West Bend) என்னும் சிற்றூரில் கொடுக்கப்பட்டது. சுமார் 500 பேர் மக்கட்தொகை கொண்டிருந்த ஊர் அது. தனது வேண்டுதலின் படி, அங்கு ஒரு பிரமாண்ட வழிப்பாட்டுத் தலத்தை, முழுக்க தன் கையாலேயே கட்ட முடிவெடுத்தார். அவர் எடுத்த முடிவு தான், அவரது கனவுத் தலத்தை மேலும் சிறப்பாக்கியது. சாதாரணக் கற்கள் இல்லாமல், உலகின் சிறந்த, மதிப்பு வாய்ந்த கற்களால், அந்தக் குகையைக் கட்ட எண்ணினார்.

இதற்கெனப் பல ஊர்களுக்குப் பயணம் சென்று பலவித கற்களைச் சேகரித்தார். சுமார் 14 வருடங்கள் அவருடைய கற்களுக்கான தேடுதல் தொடர்ந்தது. படிகம், ஜகடம், புஷ்பராகம், சுண்ணாம்பு கல், மரத்திலான கல் எனப் பலவித கற்கள் சேர்ந்தது. அவரிருந்த ஐயோவாவில் இப்படிப் பல ரகக் கற்கள் கிடைப்பதில்லை. அதற்காக சவுத் டகோடா, அர்கான்சஸ் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று வந்தார். 1912இல், தான் சேகரித்த கற்கள் கொண்டு கட்டுமானத்தைத் தொடங்கினார்.

Grotto of Redemption

இந்தப் பணியில் தன்னுடன் மேட் (Matt) என்பவரை மட்டும் இணைத்துக்கொண்டார். பெரிதாக எந்த ப்ளானும் இல்லை. கணக்கு வழக்குகள் இல்லை. இஞ்சினியர்கள் இல்லை. ஆர்கிடெக்ட் இல்லை. எல்லாம் பாதிரியார் பால் தான். பெரிய கருவிகள் ஏதும் இல்லை. மின்விளக்கு கூட இல்லை. அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. 1954இல் அவர் இறக்கும் வரை, அவருடைய எண்ணம் எல்லாம் இதிலேயே இருந்தது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, இதன் உருவாக்கத்திலேயே செலவழித்தார். அவருக்குப் பின்னால் மேட்டும் பாதிரியார் க்ரெவிங் (Greving) இணைந்து, இந்தப் பணியை முடித்தார்கள். பாதிரியார் க்ரெவிங், அங்கேயே தங்கியிருந்து இந்த ஆலயத்தைப் பார்த்துக்கொண்டார். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, பாதிரியார் பாலின் கனவு ஆலயத்தைக் கவனமாகப் பராமரித்தவர், 2002 இல் இவ்வுலகை விட்டு நீங்கினார்.

இங்கு, தற்சமயம் வருடத்திற்குப் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இது மினசோட்டா தலைநகர் செயிண்ட் பாலில் இருந்து சுமார் 200 மைல்கள் தொலைவிலும், ஐயோவா தலைநகர் டெ மாயின்ஸில் இருந்து சுமார் 140 மைல்கள் தொலைவிலும் உள்ளது. செல்லும் வழியெங்கும் விவசாய நிலங்கள் தான். பொதுவாக, சாலை வழி சென்றால். ஐயோவா மாநிலம் எங்கும் விவசாய நிலங்களைத் தான் காண முடிகிறது. பெரும்பாலும் சோளமும், பீன்ஸும். விவசாயம் என்றால் இது கார்ப்பரெட் விவசாயம். நிலத்தைச் சுற்றிலும், நிறுவனத்தின் பெயர் கொண்ட தட்டிகள். ராட்சத கருவிகள் ஆங்காங்கே நின்று கொண்டு இருக்கின்றன. ஹெலிகாப்டரில் மருந்து தெளிக்கிறார்கள். ஒரு எளிய மனிதனின் பெரிய கனவுலகத்தைத் தரிசித்த மயக்கத்தில் வெளியே வந்தால், நமக்கும் மருந்தடித்து நிகழ்வுலகத்திற்குப் பழையபடி கொண்டு வருகிறார்கள்.

ஒரு கட்டிடமாக, வடிவமைப்போ, கட்டுமானமோ தூரத்தில் இருந்து பார்ப்போரைக் கவர்வதில்லை. இதன் வரலாறும், அந்த வரலாற்றுடனான நெருங்கியப் பார்வையும் நம்மைக் கண்டிப்பாக நெகிழ வைக்கும். இங்கிருக்கும் விதவிதமான கற்களும், அவை காலத்தைக் கடந்து வந்த பாதையும் நம்மை ஆச்சரியப்படுத்தும். அங்கிருக்கும் பணியாளர் ஒருவர், ஒவ்வொரு மணி நேரமும் இது குறித்த தகவல்களை அளித்தவாறு டூர் அழைத்துச் செல்கிறார். பக்கத்தில் இருக்கும் மியூசியத்தில் பாதிரியாரின் உடமைகளும், அவர் குறித்த தகவல்களும் காண கிடைக்கின்றன். அருகே இருக்கும் ராக் ஸ்டூடியோவில், இங்குப் பயன்படுத்தியிருக்கும் கற்கள் குறித்த குறிப்புகளை வைத்திருக்கிறார்கள். தவிர, ஒரு டாக்குமெண்டரி படமும் ஒளிப்பரப்புகிறார்கள். இது எதற்கும் கட்டணம் இல்லை. விருப்பமிருந்தால், நன்கொடை அளிக்கலாம்.

வரலாற்றுச் சின்னங்களைக் காண ஆர்வமிருப்போரும், நிலவியலில் ஈடுபாடு இருப்போரும் இங்குக் கண்டிப்பாக ஒருமுறை சென்று வரலாம். ஆன்மிக அன்பர்களுக்கும் பிடிக்கும். பக்கத்திலேயே வழிபாட்டிற்கு ‘செயிண்ட் பீட்டர் அண்ட் பால்’ என்னும் தேவாலயம் உள்ளது. அருகே ஒரே ஒரு உள்ளூர் உணவகம் உள்ளது. சாலட், பர்கர், மால்ட், ஸ்மூத்தி, ஐஸ்கீரிம் போன்றவை கிடைக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கு, சறுக்கு, ஊஞ்சல் போன்றவை இந்த ஆலயத்திற்கு எதிரே இருக்கும் பூங்காவில் உள்ளன.

வெகு சில மனிதர்களின் கடும் உழைப்பில் மட்டுமே உருவான இந்தத் தேவாலயம், இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி, பாதிப்புகள் ஏதும் இன்றி இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இன்றைய தேதிக்கு இங்கு இருக்கும் கற்களின் மதிப்பு எக்கச்சக்கம். நூறாண்டுகளைக் கடந்து இருக்கும் இத்தலத்தை எந்நாளும் எந்நேரமும் சென்று கண்டு வரலாம். வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். மீட்சிக்கான ஆலயத்திற்குக் கதவெதற்கு?

சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad