ப்ரோக்கலி பைட்ஸ்
ப்ரோக்கலி (Broccoli) என்றாலே அது ஒரு நல்ல காய்கறி என்ற மனப் பிம்பம் வந்துவிடும். வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல், பச்சை நிறக் காய்கறிகள் எல்லாம் நல்லதே என்று ஒரு நம்பிக்கை. அது பெரும்பாலும் உண்மையும் கூட. ப்ரோக்கலி விஷயத்தில் முற்றிலும் உண்மை.
ப்ரோக்கலி, முதன் முதலில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் கரைப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 1920களின் வாக்கில் தான் நுழைந்தது. தற்சமயம் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. முட்டைக்கோசு, காலிஃப்ளவர் குடும்ப வகைக் காய்கறியான இது, அவற்றுடன் இணைந்து உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது சீனாவிலும், இந்தியாவிலும் தான். இதன் தமிழ் பெயர், பச்சைப் பூக்கோசு.
இதைத் தண்ணீரில் வேக வைத்துச் சாப்பிட்டால், இதில் இருக்கும் சத்துகள் அழிந்துவிடும். அதனால், ஆவியில் வேக வைத்தோ அல்லது லைட்டாக வதக்கியோ, முடிந்தால் அப்படியே கழுவியோ சாப்பிடுவது உசிதம்.
இனி இதை ஒரு சுவையான சிற்றுண்டியாகச் சாப்பிடுவது எப்படி எனக் காணலாம்.
-
தேவையான பொருட்கள்
ப்ரோக்கலி – 1 கிளை
இஞ்சிப் பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
பாதாம் பொடி – 3 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கருவேப்பிலை & கொத்தமல்லி இலை – சிறிதளவு நறுக்கியது
தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ப்ரோக்கலியைக் கழுவி சிறு சிறு பூக்களாக நறுக்கவும்.
நறுக்கிய பூக்களுடன், மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கிளறவும்.
பிறகு, கிளறிய கலவையை ஊறுவதற்கு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
ஒரு தட்டையான வாணலியில் (Frying pan) தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு மிதமான சூட்டில் வைக்கவும்.
பிறகு, கலந்து வைத்த ப்ரோக்கலியை இந்த வாணலியில் பரப்பி வைக்கவும்.
சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, மறு பக்கமாகத் திருப்பிப் போடவும்.
பொன்னிறமாக மாறியவுடன் எடுத்து விடலாம்.
புதினா கொத்தமல்லிச் சட்னியுடன் மாலை சிற்றுண்டியாகச் சாப்பிட அருமையாக இருக்கும். பேலியோக்காரர்கள் ஒரு வேளை சாப்பாடாகத் தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்றவர்கள், சாப்பாட்டுக்குச் சைட் டிஷ்ஷாகச் சாப்பிடலாம்.
சங்கீதா சரவணகுமரன்