\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அந்த 158 நாட்கள்

பெரிய அளவில் அரசியல் அனுபவமும், ஆளுமையும் இல்லாது, புகழ் பெற்ற தொழிலதிபர், தொலைகாட்சியில் மெய்மை நிகழ்ச்சிகள் நடத்துபவர், உலக அழகிப் போட்டிகள் நடத்தும் நிறுவனர் போன்ற சிறப்புகளைப் பெற்றிருந்த டானல்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. பத்து மாதங்களுக்கு முன்பு வரை, சூரியன் மேற்கே உதிக்கவும் வாய்ப்புண்டு ஆனால், ட்ரம்ப் அதிபராக வாய்ப்பேயில்லை என்று ஹேஷ்யம் கூறி வந்தன ஊடகங்கள்; தங்களது பாரம்பரியத்துக்கே பெரிய இழுக்கு என்றனர் குடியரசுக் கட்சியினர்; மிக எளிதாக வெற்றி பெறுவோம் என்று கொக்கரித்தனர் ஜனநாயகக் கட்சியினர்; நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்றனர் சிலர். இந்த ஹேஷ்யங்கள், கருத்துகள், சவால்கள் எல்லாவற்றையும் முறியடித்து, பெரும்பாலான (304:227) பிரதிநிதிகளின் வாக்குகளுடன் வெற்றி பெற்றார் டானல்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியினர் சிலர் உட்பட பலரையும் ஆச்சரியப்படுத்திய வெற்றி இது. அரசியல் சாயமின்றி, அதிரடியான திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்ததால் இந்த வெற்றி சாத்தியமானது என்றனர் அரசியல் விற்பன்னர்கள். அதிபர் தேர்தலுடன் அரசின் இரு சபைகளிலும் நிலவிய வெற்றிடங்களுக்கான தேர்தல்களும் நடைபெற்றன. இவற்றிலும் பல குடியரசு வேட்பாளர்கள் வெற்றி பெற்று இரண்டு அவைகளிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்றனர்.

இன்றைய கணக்குப் படி செனட் எனப்படும் ஆட்சியாளர் குழுவில் குடியரசுக் கட்சி சார்பில் 54 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சி சார்பில் 44 உறுப்பினர்களும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்ஸ் எனப்படும் கீழவையில் 240 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், 194 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.

இப்படி இரண்டு அவைகளின் பெரும்பான்மை பலத்துடன், இந்த ஆண்டு, ஃபிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி, அமெரிக்காவின் 45வது அதிபராகப் பதவியேற்றார் டானல்ட் ட்ரம்ப். அமெரிக்கா மட்டுமின்றி உலகநாடுகள் பலவும் உற்று நோக்கிய அரசியல் நிகழ்வு இது. ‘வலுவான அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம்’ என்ற குறிக்கோளை முன்வைத்து ட்ரம்ப் பதவியேற்று இன்றுடன் (07/28/2017) 158 நாட்கள் நிறைவுறுகிறது. ஆறு மாதங்கள் முடிவடைந்த தருவாயில், அமெரிக்காவில் அரசியல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன; வேட்பாளராக டிரம்ப் அளித்த வாக்குறுதிகளை அதிபர் ட்ரம்ப் எந்த அளவு செயல்படுத்தினார் என்பதை அலசலாம்.

    அமெரிக்க – மெக்சிகோ எல்லைச் சுவர்

வேட்பாளராக டானல்ட் டிரம்ப் அளித்த பல வாக்குறுதிகளில் இந்த மதில்சுவர் திட்டத்தை அதிகம் வலியுறுத்தி, தனது முதன்மைப் பணிகளில் ஒன்றாகயிருக்கும் என்றார். அந்நாட்களில் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி, அதற்கான சாத்தியக் கூறுகள், திட்டம், செலவுகள் பற்றிக் கேள்விகள் எழுந்த போது தான் அதற்கொரு திட்டம் வைத்துள்ளதாகவும் அதற்குக் கிட்டத்தட்ட $4 பில்லியன் டாலர் செலவாகும் என்றும் கூறினார். சில மாதங்களில் $6 பில்லியன் என்றவர் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் $4 பில்லியனிலிருந்து $10 பில்லியன் வரை செலவாகும் அந்தச் செலவு மொத்தத்தையும் மெக்சிகோ ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வேன் என்று சொல்லி வந்தார். ஃபிப்ரவரி மாதத் துவக்கத்தில் $21.5 பில்லியன் என்று ஒரு குழு மதிப்பிட, அரசாங்கத் திட்டக் குழு $66.9 பில்லியன் எனக் கணக்கிட்டது. முதலில் மெக்சிகோ கொடுக்கும் பணத்தில் இந்தச் சுவர் கட்டப்படும் என்ற சொல்லி வந்த ட்ரம்ப், சமீபத்தில் என்றாவது ஒரு நாள் இந்தச் செலவுகளைத் திரும்பத் தரும் என்று சொல்லியுள்ளார். கிட்டத்தட்ட 2000 மைல்கள் கொண்ட எல்லையில் மதில்சுவர் கட்டுவதற்கான வேறெந்தத் திட்டமும், ஏற்பாடுகளும் இதுவரையில் தொடங்கப்படவில்லை.

    மலிவான உடல்நலக் காப்பீடுக்கான (Affordable Care Act) மாற்று

ஒபாமா கேர் என்று பிரபலமாகக் குறிப்பிடப்படும் அஃபோர்டபில் கேர் ஆக்ட் 2010ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அனைவருக்கும் உடல்நலக் காப்பீடு என்ற கருத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் அது. உடல் நலக் காப்பீட்டுத் திட்டத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால் பல சிறிய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு அளித்து வந்த காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து விட்டன. இதனால் பலர் காப்பீட்டை இழந்து, தனிப்பட்ட முறையில் காப்பீடு எடுக்க வசதியின்றி, காப்பீடு இல்லாமலே வாழத் துவங்கினர். ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் செல்ல வசதியின்றி நோயுடன் அவதிப்பட்டனர். இதனைத் தீர்க்கக் கொண்டுவரப்பட்டது தான் ACA. நினைத்ததற்கு மாறாக பல காப்பீட்டு நிறுவனங்கள் இதிலிருந்து விலகிவிட ஒட்டுமொத்தமாக அனைவருக்குமே காப்பீட்டு விலை பன்மடங்காக உயர்ந்துவிட்டது.

ACAவை ரத்து செய்வது தான் இதற்குத் தீர்வு; பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக இதனை ரத்து செய்வேன் என்று வேட்பாளர் ட்ரம்ப் வாக்களித்திருந்தார். மாற்றுத் திட்டமின்றி இதனை ரத்து செய்யக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கீழவையில் வெற்றி பெற்றாலும், மேலவையில் ஐந்து முறை தோல்வியுற்றது. மாற்று வழியின்றி இத்திட்டம் ரத்தானால், பல லட்சம் பேர் காப்பீட்டை இழப்பார்கள். ACAவை அவசரப்பட்டு ரத்து செய்யக்கூடாது என்று சில குடியரசுக் கட்சியினர் உட்பட பெரும்பாலோனோர் எதிர்த்ததால் அதிபர் எடுத்த முடிவு இன்றளவும் செயல்படுத்தப்படாமல் தடைபட்டுள்ளது.
‘காப்பீட்டுத் திட்டம் இவ்வளவு சிக்கல் நிறைந்தது என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்று அதிபர் ட்ரம்ப் நொந்து கொள்கிறார்.

    அமெரிக்கப் பொருளாதாரம்

ட்ரம்ப் பதவியேற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியுறும்; வளர்ந்துவிடும் என்று பலரும் பட்டிமன்றம் நடத்திய போதும். கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரிய அளவு வீழ்ச்சியோ , எழுச்சியோ காணப்படவில்லை. வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது; பங்குச் சந்தை எழுச்சி பெற்றுள்ளது. ஆனால் இவை இரண்டும் முன்னாள் அதிபர் ஒபாமாவின் கடைசியாண்டின் நீட்சி எனலாம். உதாரணமாக 2009ல் அடிமட்டத்தைக் கண்டிருந்த பங்குச் சந்தை 870 புள்ளிகளில் இருந்தது. இந்த ஆண்டு ஃபிப்ரவரியில் அது 2119 புள்ளிகளாக உயர்ந்திருந்தது. சென்ற வாரத்தில் இது 2430 புள்ளிகளாக உயந்திருந்தது.

    ஆறு நாட்டினருக்குத் தடை

சிரியா, லிபியா, இரான், சோமாலியா, சூடான், ஏமன், இராக் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் யாரும் அமெரிக்காவுக்கு வரவியலாது என்று தனது தனிப்பட்ட நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடிச் சட்டமியற்றினார் ட்ரம்ப். உயர்நீதி மன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பட்டியலிலிருந்து இராக் நீக்கப்பட்டால் இது சட்டமாக்கப்படலாம் என்றும், ஆறு மாதங்களுக்குள் இந்நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவோர்க்கு விசா வழங்கப்படுவது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பானது. அமெரிக்காவின் தற்காலிக பாதுகாப்புக்கு இச்சட்டம் உதவுமென்றாலும், பல இஸ்லாமிய நாடுகளின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளோம் என்பதும் உண்மை.

    குடியேற்றச் சட்டங்களில் இறுக்கம்

குடியேற்றம் மற்றும் சுங்கச் செயலாக்கத் துறையின் ( Immigration and Customs Enforcement – ICE) நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, முறையற்று அமெரிக்காவில் தங்கியுள்ள அல்லது அகதிகளாக/ ஆவணங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைய முனையும் வெளிநாட்டவர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிபரின் நிர்வாக அதிகாரத்தின் மூலம் சட்டமாகிய இக்கொள்கை, ஆவணங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுபவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களின் கைது 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

    வரிச்சட்டச் சீர்திருத்தம்

வரிச்சட்டங்களில் உள்ள சிக்கல்களைச் சீர்படுத்தி, எளிமைப்படுத்தப்பட்ட வரிப் படிவங்களைக் கொணர்வதைத் தனது வாக்குறுதிகளில் ஒன்றாக வேட்பாளர் ட்ரம்ப் முழங்கி வந்தார். இதன்படி பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது குறைந்த வரியும் விதிக்கப்படும். இத்திட்டம் முந்தைய அதிபர் காலத்திலேயே நடைமுறையில் இருந்தாலும், சீர்த்திருத்தம் அவசியம் என்ற வேட்பாளர் ட்ரம்பின் வாக்குறுதி நிலுவையில் தான் உள்ளது.

    வேலைவாய்ப்பு

பல பெரிய நிறுவனங்கள் அந்நிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் (outsourcing) செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரித்து வந்தன. இதனால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு தடைபட்டது. இதைத் தடுக்க அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான வரி உயர்வும், உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நிறுவனங்களுக்குப் பல சலுகைகளும் வழங்கப்படும் என்பது ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதியாகும். தேர்தல் நேரங்களில் இண்டியானா மாநிலத்தில் உள்ள ‘கேரியர்’ நிறுவனத்தில் பேசிய ட்ரம்ப், இனி இந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்காது; வேலை வாய்ப்பு மெக்சிகோ நாட்டுக்குச் செல்லாது; நான் பதவிக்கு வந்தால் இந்நிறுவனத்துக்கு போதுமான பொருளுதவி அளித்து, ஆட்குறைப்பைத் தடை செய்வேன் என்று அறிவித்தார். ஆனால் கடந்த ஜூலை மாதம் 20ஆம் நாள், புதிய அரசு ஆறு மாதங்களை நிறைவு செய்த அதே நாளில் இந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டு 600 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

எனது அறிவிப்பால் ஃபோர்ட் நிறுவனம் மெக்சிகோவில் தொடங்க இருந்த கார் தொழிற்சாலையை நிறுத்திவிட்டது என்றார் ட்ரம்ப். ஆனால், போர்டு நிறுவனத் தலைவர், நாங்கள் மெக்சிகோவில் தொழிற்சாலைத் திட்டத்தைக் கைவிட்டது எங்களது கம்பெனிக் கொள்கைச் சிக்கல்களால் தானே தவிர அரசுத் திட்டங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, விரைவில் வேறொரு தென்னமெரிக்க நாட்டில் தொழிற்சாலை தொடங்குவோம் என்றார்.

    அந்நிய நாடுகளுடனான உறவு

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது பல உலகநாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வடகொரிய நாடு தங்களது ஏவுகணைச் சோதனைகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மைச் சோதனைகளின் படி வடகொரிய ஏவுகணைகள் மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியைத் தாக்குமளவுக்குச் சக்தி கொண்டது என நிருபிக்கப்பட்டுள்ளது.

‘ஐசிஸ்’ எனப்படும் தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் அதிபர் பகிர்ந்த பாதுகாப்புக் குறித்த இரகசியங்களை ட்ரம்ப் ரஷ்ய அதிபருடன் பகிர்ந்து கொண்டார் என இஸ்ரேல் எரிச்சலடைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு, பல அண்டை நாடுகளைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. தங்களது நாட்டின் மீதான பொருளாதாரத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதும், பயணிகள் தடையும் ஈரான் நாட்டினரைக் கோபமடையச் செய்துள்ளது.

வட அட்லாண்டிக் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தக் கூட்டத்தில், பல நாடுகள் ஆர்வமின்றிச் செயல்படுவதாகத் தெரிவித்த ட்ரம்ப், தங்கள் நாட்டின் பாதுகாப்பைக் கருதி தங்களது முழு ஒத்துழைப்பும், பொருளுதவியும் செய்ய வேண்டுமெனச் சொல்லியது அமெரிக்கர்களால் வரவேற்கப்பட்டாலும் சில நாடுகளைச் சங்கடப்படுத்தியது.

ரஷ்ய நாட்டுடனான ட்ரம்ப் அரசின் உறவு, உள்நாட்டில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முந்தைய அதிபர் காலத்தில், அமெரிக்காவிலிருந்த பல ரஷ்ய அரசு அமைப்புகள் மூடப்பட்டன. ட்ரம்பின் ஆட்சியில் இவை சீரடையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷ்ய நாட்டிலிருந்த அமெரிக்க அரசு அமைப்புகளை அந்நாடு மூடியுள்ளது.

    உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம்

ஏறக்குறைய ஓராண்டு காலியாக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒரு காலியிடத்தை நிரப்பப் பலமுறை முயன்றும் முந்தைய அதிபரின் தேர்வுகள் நிராகரிக்கப்பட்டு வந்தன. அதற்கு மாறாக பதவியேற்ற சில நாட்களிலேயே மேல் முறையீட்டு நிதிபதியாக இருந்த, பழமைவாதியான நீல் காஸ்ரக் என்பவரை உச்சநீதிமன்றத்தின் ஒன்பதாவது நீதிபதியாக முன்மொழிந்தார் ட்ரம்ப். முந்தைய அதிபரின் தெரிவுகளைக் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து எதிர்த்ததால், ட்ரம்ப் யாரை முன்னிறுத்தினாலும் எதிர்ப்போம் என்று ஜனநாயகக் கட்சியினர் பலரும் சொல்லி வந்த நிலையில் நீல் காஸ்ரக்கின் நியமனத்தை இரு அவைகளும் ஏற்றுக் கொண்டு உறுதி செய்தது, ட்ரம்பின் பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. இரு கட்சியினரையும் அணைத்துச் செல்லும் திறன் வாய்ந்தவர் தான் ட்ரம்ப் என்று எல்லோரையும் நினைக்கச் செய்தது
.

    வெள்ளை மாளிகை நிர்வாகம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவு என்பது அதிபரின் ஓவல் அலுவலகம், கேபினட் அறை போன்ற அரசின் முக்கியச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் பிரிவாகும். கடந்த சில நாட்களாக இப்பிரிவில் நடந்து வரும் சில அதிரடி மாற்றங்கள் அரசின் நிர்வாகத்திறனைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமியுடன் ஏற்பட்ட சில உரசல்களினால் அவரை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தார் அதிபர் ட்ரம்ப். தேர்தல் சமயத்தில் ட்ரம்ப் குழுவினருக்கு ரஷ்ய நாட்டினருடன் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விசாரணையில் கோமி ஆர்வம் காட்டியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் வெளியேற்றப்பட்டார். தேர்தலுக்கு முன்னர் இதே ஜேம்ஸ் கோமி இன்னொரு வேட்பாளர் ஹிலரி கிளிண்டனைப் பற்றி விசாரணை ஆய்வு செய்தபோது அவரைப் பாராட்டிய ட்ரம்ப், கோமியை வெளியேற்றியது காழ்ப்புணர்ச்சியாகக் கருதப்பட்டது.

தனது கருத்துகளைத் செய்தியாளர்களுக்கு விளக்குவதில் ஷான் ஸ்பைசர் திறம்படச் செயல்படவில்லை என்று அவரை நீக்கி, செய்தித்துறை இயக்குனராக ஆண்டனி ஸ்காரமூச்சி என்பவரை நியமித்தார் ட்ரம்ப்.

ஸ்காரமூச்சிக்கும் வெள்ளை மாளிகை பணியாளர்த் துறைத் தலைவர் ரயன் பிரிபஸ் க்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் உண்டு. இந்நிலையில் வெள்ளை மாளிகை ரகசியங்கள் வெளியில் செல்வதற்கு பிரிபஸ் தான் காரணம் என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார் ஸ்காரமூச்சி. பல அசிங்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் பிரிபஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அட்டர்னி ஜெனரலான ஜெப் செஷன்ஸ் தேர்தலில் ரஷ்யத் தொடர்புகள் குறித்த விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால் தனிப்பட்ட முறையில் அவர் மீது எரிச்சலடைந்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

நிர்வாக அமைப்பில் இப்படிப் பல குளறுபடிகள், குழப்பங்கள் நடந்தவண்ணமுள்ளன.

    அதிபரின் தனிநபர் செயல்பாடுகள்

முந்தைய அதிபரின் பிறப்புத் தொடங்கி பல வினோத பரபரப்புகளை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்த ட்ரம்ப் அதிபரான பின்னர் தன்னை மாற்றிக்கொண்டாரா?
டிவிட்டர் எனும் ஊடகம் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதை ட்ரம்ப் மேற்கொள்கிறார். பல சமயங்களில் அரசு எடுக்க வேண்டிய முடிவுகளை டிவிட்டரில் வெளிப்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்திக்கொள்கிறார் என்றால் அது மிகையில்லை. கடந்த ஆறு மாதங்களில் 990க்கும் அதிகமான டிவிட்டர் செய்திகளை அனுப்பியுள்ளார் ட்ரம்ப்.

தேர்தல் நாட்களில் ஒரு பெண் நிருபரைப் பற்றி தரக்குறைவாக வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும், சமீபத்தில் ‘மார்னிங் ஜோ’ எனும் தொலைகாட்சி நிகழ்ச்சியின் பெண் நிருபரின் முக அமைப்பைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்து கண்டனத்துக்குள்ளானார்.

ஜேம்ஸ் கோமியுடன் எனது உரையாடல் குறித்த பதிவை வெளியிடட்டுமா? கேட்கத் தயாராக இருக்கிறீர்களா? என்று பரபரப்பைக் கிளப்பி, பின்னர் சில நாட்கள் கழித்து என்னிடம் எந்தவிதப் பதிவும் கிடையாது என்று சொல்லிப் பலரிடம் திட்டு வாங்கினார்.
மெக்சிகோ அமெரிக்க எல்லைச் சுவர் ஊடுருவிப் பார்க்கக் கூடியதாக (Transparent) அமைய வேண்டும்; இல்லையென்றால் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், மெக்சிகோ பக்கமிருந்து மதில் சுவரைத் தாண்டி மூட்டைகளை வீசிஎறிந்தால் நம் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குழந்தைத்தனமாகத் தெரிவித்தார்.

இந்த வாரத் துவக்கத்தில், ‘இனி திருநங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற முடியாது. ராணுவச் செலவுகளில் பெரும் பங்கு இவர்களது மருத்துவத்திற்குச் செலவழிக்கப்படுகிறது. திருநங்கைகள் ராணுவத்தில் இல்லையென்றால் இத்தொகையை மற்ற பாதுகாப்பு விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்’ என்று அவர் தெரிவித்த அதிரடிக் கருத்து அவரது டிவிட்டர் அபத்தங்களுக்கு உச்சமாக இருந்தது. இதில் ராணுவ உயர்நிலைத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தாலும், ராணுவத் தளபதி ஒருவர் இது குறித்து எந்தப் பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என்று பதில் டிவீட் செய்திருந்தது மேலும் அசிங்கப்படுத்தியது.

நலக் காப்பீடு மாற்றம் குறித்த அரசாணை தோற்றுப் போக சில குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் துணை போவதாக வெளிப்படையாகக் குற்றம் சுமத்தி வருகிறார்.

வசமாக முற்றுகையிடப்பட்டு (beleaguered) சிக்கிக் கொண்ட ஜெஃப் செஷன்ஸ், ஹிலரி கிளிண்டன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னையும், என் குடும்பத்தினரையும் மட்டும் ஏன் குறி வைக்கிறார் என்று கேட்டு அமெரிக்க நீதி, சட்டத்துறையைக் கேலிக்குரியதாக்கி வருகிறார்.

காலை வேளைகளில், இப்படிப் பல கருத்துகளைத் தானாக டிவீட் செய்துவிட்டு , மாலையில் அவற்றுக்கு வேறு விளக்கம் அளிப்பதும், நையாண்டியாகச் சொன்னது என்று மறுப்பதும் வாடிக்கையாகிப் போனது. இதனால் பெரிதும் அவதியுற்றவர் செய்தித் தொடர்பாளர் ஷான் ஸ்பைசர்.

மேலும் ஊடகங்களைப் போலி (fake) என்று அவர் முத்திரை குத்தி வைத்திருப்பது பல கண்டனங்களைப் பெற்று சர்ச்சையாகியுள்ளது.

மொத்தத்தில், அதிபர் ட்ரம்பின் ஆறு மாத ஆட்சிக்காலத்தில் பரபரப்புகள், ஆச்சரியங்கள், களேபரங்கள், நகைச்சுவைகள், குற்றச்சாட்டுகள் இணைந்த கலவை பொங்கி வழிகிறது.

அவ்வப்போது அதிபரின் செயலாற்றல் ‘அங்கீகாரத் தரமதிப்பீட்டில்’ (acceptance rating) டானல்ட் ட்ரம்ப் 26% புள்ளிகளே பெற்றுள்ளார். உலகத் தலைவர்கள் மதிப்பீட்டில் 22% புள்ளிகளே பெற்றுள்ளார்.

சாமானிய மக்களின் வாழ்வில் பெருமளவுக்கு முன்னேற்றமில்லை என்பது வருத்தம் தந்தாலும், எந்த வீழ்ச்சியுமில்லை என்ற அளவில் ஆறுதல் கொள்ளலாம்.

‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கொரு விடிவுமில்லை’.

– ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad