வரவேற்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்
ஊர்ப் புறத்தில் வாழவைக்கும் தர்மம் என்பது வழி தெரியாது வந்தவர்களை வசதியுள்ளதோ இல்லையோ, வரவேற்று உபசரித்தலாகும். இன்றைய வருமானம் மிகுந்த தனிக்குடும்ப வாழ்க்கைச் சூழலிலும், நகர வாழ்வில் பக்கத்து வீட்டாரையே சரியாகத் தெரியாத அநாமதேயச் சூழலில் எமது சமூகத்திடையே வரவேற்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல் எமது மேம்பாட்டிற்கு அவசியம்.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாகப் பதிப்பகம் சார்ந்த தகவல்துறையில் பணிசெய்து வந்தேன். அப்போது எனது பணிகளில் ஒன்று தகவல் சேவைப் பதிவகங்களுடனும், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், சட்டத்துறை, கணக்கியல், கணனியியல், மருத்துவம், காப்புறுதித்துறை எழுத்தாளர்கள் மற்றும் விளம்பரதாரர் ஆகியோருடன் கலந்துரையாடல், ஒன்று கூடிப் புதிய தகவற்பொருட்களை உருவாக்குவது ஆகியவையேயாகும். எமது ஒத்துழைப்பு பல நூறு கோடிகளை வருமானமாகத் தருவது மாத்திரமில்லாமல் பல்லாண்டு கால நட்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டமை நானும் எனது சகபாடிகளும் சந்தோஷப்படும் விடயமாகும்.
இதுவரை பல நாடுகளில் பன்மொழிப் பதிப்பகங்கள், பத்திரிக்கை, வெளியீட்டு விழாக்கள், விழா அமைப்பாளர்கள் என்று பலரையும் சந்திக்க வாய்ப்பு வந்தது. இதன் போது வெற்றிகரமாக நடத்தப்படும் வர்த்தகங்களும், ஆரம்பித்தில் ஆக்ரோஷமாக விளம்பரத்தில் ஆடம்பரமாக ஆரம்பித்துப் படிப்படியாக வாடிக்கையாளர் மதிப்பிழந்து, வருமானம் ஈட்டலில் தோல்வியுற்று மறைந்து போனவர்களையும் பார்த்தேன். இவற்றில் தமது பதிப்பகங்கள், தகவல் மையங்களை வளர்த்தவர்களிடையே குறிப்பாகச் சில அடிப்படைத் தொழிலை நிலைக்க வைத்துக் கொள்ளும் அம்சங்களையும் அவதானித்தேன். இதையே இங்கு குறிப்புரையாகத் தரவுள்ளேன்.
நாடுகள், கலாச்சாரங்கள், வேவ்வேறாக இருப்பினும் வர்த்தகர்களும் அவர்கள் வாடிக்கையாளர் தொடர்புகளும் அடிப்படையில் ஒன்றாகவே காணப்பட்டன. இதன் அடிப்படை ஒருவர்க்கு ஒருவரிடையே உள்ள சந்தேகமற்ற முழுநம்பிக்கையே ஆகும்.
குறிப்பாக ஜப்பானியப் பதிவகங்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் புத்தக்கடைகள் அவரவர் வாடிக்கையாளர், வாசகர்கள் , பன்னோக்குத் தகவல் நுகரும் பங்குச் சந்தை, வங்கித்துறை, பெருமக்களுக்குச் செய்து வரும் பணிகளை, பணிவிடைகளைப் பார்த்துப் பல தடவை அசந்து விட்டேன்.
வர்த்தகத் துறையில் யாவரும் பணம் உழைத்துக் கொள்ள வழிதேடியவாறுதான் உள்ளனர் என்பதை நாம் மறுக்க முடியாது. நம்பிக்கையுடன் உழைத்துக் கொள்வது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி நிகழ்காலத்தில் நமக்குள் வரவும் செய்யலாம்..
ஆயினும் நம்பிக்கை நாணயமான வர்த்தகம், உரிய உபசாரம் உயர, வர்த்தக மதிப்பும் வருமானமும் தாமாகவே உயர்கின்றன இதற்கு அமெரிக்க, பிரித்தானிய, ஜப்பானிய, ஜெர்மானியப் பதிப்பகக் கம்பனிகள் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாகத் தொழில்பட்டு வருவது ஒரு ஆதாரமேயாகும்.
நான் பதிப்பகங்களைக் கூறினும் இது போன்று பல பாரிய உலகளாவிய வர்த்தகத் தாபனங்களும் எவ்வாறு பற்பல கலாச்சாரத் தொழில் புரிபவர் ஒன்று கூடி ஒருவரையொருவர் மதித்து பெரும் வர்த்தக வெற்றிகளை உண்டு பண்ணியவாறுள்ளார்கள் என்பதையும் அவர்கள் நேரடி வாடிக்கையாளர் மூலம் வந்த வருமானத் தரவுகளில் இருந்து கண்டு கொள்ளலாம்.
மேலும் எனது பல பயணங்களிலும், பலவேறு தகவல் மையங்களில் தொழில் பார்த்த போதும் நான் தொழில் புரிந்த தாபனத்தின் அந்த நாட்டுப் பத்திரிகையாளர்கள் எவ்வாறு தமது வாசிகர்களை, வாடிக்கையாளர்களை, அபிமானிகளை மிகுந்த மதிப்புடன் சேவைப் பரிமாறல்களைச் செய்து கொண்டனர் என்பதையும் அவதானித்தேன்.
இது நிச்சயமாக ரயிட்டர்ஸ் (Reuters), புளும் பேர்க் (Bloomberg), ஏ.பி. (AP), என்.ஹெச். கே (NHK), மைனிச்சி (Manichi), போன்ற உலகளாவிய தகவல் கம்பெனிக்கு பன்னாட்டு மக்கள் மத்தியில் புகழ் தந்தது என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
பிரதானமாக யப்பானிய, சிங்கப்பூரிய மற்றும் ஜெர்மானிய வேலைத் தளங்களிலும், வேலைக்கு அப்பால் மக்கள் ஒன்று கூடிப் பொதுத் தொண்டுகள் செய்த போதும் பன்முனைகளில் இருந்து பல தரமான கருத்துக்களும் ஆர்வத்துடன் மக்கள் கேட்டு மதித்து ஒன்றாக மனதாரக் கொண்டாடியதையும் அவதானித்தேன். அந்தக் கலாச்சாரங்களில் ஒற்றுமையாகவும், பொருளாதாரத்தில் மற்றும் பொது வாழ்வில் சிறந்து விளங்கியும் வாழ்கின்றனர் என்பதும் தெளிவுற்றது.
ஒன்றிணைந்து வாழலின் மகிமை
சான்றோர் பலரும், ஏன் தமிழ்க் கவி பாரதியும் கூட தனது குழந்தைப் பாட்டில் ” ஓடி விளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையைவையாதே பாப்பா ” என்கிறார்.
சரித்திரத்தில் உலக நாகரிகங்கள் உயர்ந்த போது அவற்றின் அடிப்படை அத்திவாரம் பல்வகையான சமூகங்களையும், கலாச்சாரங்களையும் திறந்த கரத்துடன் வரவேற்றுத் தம் சமூகம், உடனிருக்கும் பன் சமூகம் மேம்பட வாழ்க்கைதனைக் கட்டியெழுப்பியதே. எவ்வெப்போது சமூக அங்கத்தவர் இனத் தூய்மை, துவேசம் போன்ற பேதங்கள் ஆரம்பித்தனரோ அவ்வப்போதே அவரவர் கலாச்சாரங்களுக்குச் சாவுமணி கட்டி ஓங்கிய நாகரிகங்களையும் மண் கவ்வ வைத்தனர். இது வரலாற்றுக் குறிப்பு.
அமெரிக்க நாட்டின் பிரஜாயுரிமையின் அடிப்படைக் கொள்கை சாதி, மத அந்தஸ்துக்களை அந்தந்த நாடுகளில் விடுத்து சமமான பிரஜைகளாகச் சத்தியப் பிரமாணம் செய்து இந்நாட்டில் வாழ்வதே. இது அமெரிக்கச் செல்வந்தம், வாழ்க்கை முறை உயர்வின் அடிப்படை. இதுவே இன்றும் அமெரிக்க நாட்டை நோக்கிப் புது வாழ்வு தேடி மக்கள் வருவதன் அடிப்படைக் காரணமாகும்.
சரித்திரத்தில் பூர்வீக வாசிகள் இனத் துரோக ஆக்கிரமிப்பும், ஆப்பிரிக்க, சீன அடிமை வாழ்வுகள் ஆகியவையும் சமூகத்தின் ஆழமான காயங்கள் ஆகும். இன்றும் கறுப்பின மக்கள் தம் அடிப்படை உரிமைக்குப் போராடி வருகிறார்கள் தாம். ஆயினும் அபிவிருத்தி அடைந்து வரும் ஆப்பிரிக்கக் கண்டமக்கள் படும் துயரத்துடன் ஒப்பிடுகையில் எம் கறுப்பின மக்கள் வாழ்க்கை உயர்ந்தே காணப்படுகிறது. அமெரிக்கப் பிரஜைகள் யாவருக்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமது உரிமையை வாதாடவும் வழியுண்டு. இந்தச் சலுகை ஏறத்தாழ 5 சதவீத உலக மக்கட்தொகைக்கு இல்லாத தனியுரிமை.
பல நாடுகளில் இருந்து வந்தும் மக்கள் யாவரும் இன்று இணைந்த எமது பன்கலாச்சாரம் எனும் துணிகளில் இருந்து உருவாக்கப்பட்ட புடவையே இன்னாட்டின் பிரஜாயுரிமையும், உயர் வாழ்க்கைத் தர அபிவிருத்தியும், செல்வந்தமும் ஆகும். அமெரிக்கத் தொழிலகங்களில் உற்பத்திக்கும், பணம் திரட்டலுக்கு இன்றும் இதுவே அடிப்படைக் காரணி. அமெரிக்கக் கலாச்சாரம் என்பது உலக அளவிலான கலாச்சாரங்களிலிருந்து சற்று வேறுபட்டது. அமெரிக்கக் கலாச்சாரத்தை பிரஜைச் சமுகவியல் கலாச்சாரம் (Civil Society) என்று கூறிக்கொள்ளலாம். இதன் உயிர் நாடி பன்முகத் தன்மை (Diversity). இது அமெரிக்கப் பொது சாசனத்தால் உருவாக்கப்பட்ட சமவுரிமைக் கலாச்சாரம்.
அமெரிக்கத் தொழிலகங்கள் தொடர்ந்தும் ஆண், பெண், வயது, வர்க்கம், சாதி, சமயம் என்ற அந்தஸ்து அற்று, பாரபட்சம் தவிர்த்து குடிமக்கள் உரிமைச் சட்ட வழியாகப் பேணி யாவரும் பணி புரியவே வரவேற்கின்றன.
எனினும் பன்முகத் தன்மை என்பது பல கலாச்சார மக்களை ஒரிடத்தில் ஒன்று கூட வைத்து ஏதோ வேண்டியவாறு கேளிக்கை போடுவது அல்ல. இது எவ்வாறு பல வகை மக்கள், பலவிதமான சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும், அனுபவங்களையும் மதிப்புக் கொடுத்து வரவேற்று அந்த அனுபவங்களின் ஒருமிப்பை வைத்து புதிய சிந்தனைச் சமூகச் சிறப்பு அத்திவாரத்தை ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதே ஆகும்.
மனித இனம் தன் சமூகத்தை நாடியே வளரும் உயிரினம். எனவே பெரியவரோ, சிறியவரோ ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து உதவி ஆதரவு தருவதால் முன்னேறும் இனம். இதையே எமது தமிழ்ச் சான்றோரும் சிறப்பாக எழுத்தில், படிப்பில் கற்பித்துச் சென்றுள்ளனர்.
உலகளாவிய பல பில்லியன் பெறுமதித் தாபனங்கள் நடைமுறை
பொதுத்தொண்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார ஒன்றியங்கள் ஆகியவை வர்த்தகத் தாபன பன்முகத் தன்மை பற்றிய நடை முறைகளில் இருந்து ஒரு சில பக்கங்களைப் பகி்ர்ந்து கொள்வது சமூக மேம்பாட்டிற்கும் நலனைத் தரும்.
வெற்றிகரமான வர்த்தகத் தாபனங்கள் குறிக்கோள் மிகவும் இலகுவானது. அதே சமயம் மிகவும் உறுதி வாய்ந்தது. உலகின் எப்பாகமாகவும் இருக்கலாம் ஒவ்வொரு காலையும் எமக்கும் புதிய நாளைத் தருகிறது. இன்று வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது, எம்முடன் தொடர்பிலுள்ள யாவருக்கும் நலமுடன் வாழ எவ்வாறு உதவி செயலாம் என்று எண்ணிச் செயல்படுவதே சிறப்பைத் தரும். இது எந்த மதபோதனையும் அல்ல, அரசியல் ஆக்கிரமிப்பும் அல்ல. பொது மனிதாபிமானச் சிந்தனை மட்டுமே.
வர்த்தகம், வளர்வுறும் பொதுத்தொண்டு இவை யாவற்றிலும் மனிதாபிமானச் சிந்தனை, செயல்முறை உரியவர் யாவர்க்கும் மன நிறைவு உண்டாகும்.. வியாபாரமும், விஞ்ஞானமும் விரும்பிச் செய்யும் பொறுப்புடைய பொதுத்தொண்டு யாவும் ஈற்றில் ஒரு மனிதன் இன்னும் ஒரு மனிதனுடன் தொடர்பு கொள்ளும் செயலே ஆகும். இவை ஒருவரை ஒருவர் அவர்கள் கருத்துக்களை மதித்து, அவர்களின் அனுபவங்களை உணர்ந்து, நல்லெண்ணத்தையும், திடமான முடிவுகளையும் சேர்த்துக் கொள்ள உதவும். புத்திசாலி வர்த்தகத் தாபனம் இதைப் புறக்கணிக்காது. காரணம் இதுவே அவர்கள் வியாபார வெற்றி.
சமூகம் வளர்ந்தோம்ப வரவேற்புக் கலாச்சாரமே தேவை
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தளவில் அகத்தியர் அருளியிருக்கலாம், ஔவைப் பாட்டி சொல்லியிருக்கலாம், வள்ளுவர் வளமாகத் தந்திருக்கலாம், பாரதி பாசத்துடன் பாடியிருக்கலாம், அப்துல் கலாம் ஆழமாகச் சிந்தித்துத் தம் முத்துக்களைப் பதி்த்திருக்கலாம் ஆயினும் நடைமுறையில் எம் சான்றோர் சொற்களை உபயோகிக்கிறோமா என்று நாம் சுதாகரித்துப் பார்க்க வேண்டும்.
நாம் எமது சமூகத்தை வளர்க்கத் தேவையானவை அன்பும், பண்பும், தோளுடன் தோள் கூட்டி நின்று நம்பிக்கை நாணயத்துடன் ஒருவரை ஒருவர் மதிக்கும் மனிதாபிமானத்துடன் வரவேற்கும் கலாச்சாரத்தையும் அதை ஒட்டிய சிந்தனையும் மாத்திரமே எமக்கு வழி தர வல்லவை. இதுவே சுழலும் எம் வாழ்க்கை எனும் பந்தாட்டத்தில் வெற்றி தரும் வளர்முக யுக்தியாகும்.
-யோகி