வாசகர்களுக்கு வணக்கம் !
உங்களனைவரையும் எங்களின் தலையங்கத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் எங்களின் தலையங்கங்கள் என்பது நீங்களறிந்ததே. அந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற நாட்டு நடப்புகளில் முக்கியமான சிலவற்றை ஒரு சிறு முத்தாய்ப்பாய் வெளியிடுவது எங்கள் தலையங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற விஷயங்களில் முக்கியமான ஒன்று குறித்துப் பேசலாம்.
உலக அளவில், எப்பொழுதும் போன்ற நடப்புகளே என்று தைரியமாகச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. இந்திய நாட்டில் என்று எடுத்துக் கொண்டால், சமீபத்தில் வெளியான ஜி.எஸ்.டி. குறித்த மாற்றங்கள் அனைவராலும் பேசப்படும் ஒரு முக்கிய நிகழ்வு எனலாம். இது குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்பது இந்தத் தலையங்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் இந்திய நாட்டையே திருப்பிப்போட்ட டிமானிடைஸேஷனுக்குப் பிறகு, அதே போன்ற அளவிலான இன்னொரு தடாலடியான மாற்றம் ஜி.எஸ்.டி குறித்த மாறுபாடுகள் என்றால் மிகையாகாது. ”குட்ஸ் அண்ட் சர்வீஸஸ் டேக்ஸ்” [Goods and Services Tax] எனப்படும் பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு மீதான வரியே G.S.T. எனப்படும். இந்த வரி தொடர்பான, தற்போது அறிவிக்கப்பட்ட மாற்றங்களே இந்திய நாட்டைப் பரபரப்பாக வைத்துள்ளது.
வெகு ஜனங்களால் மேம்போக்காகப் புரிந்து கொள்ளப்படுவது, ”மாநில அரசின் வரி தொடர்பான விதிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே ஜி.எஸ்.டி’யின் நோக்கம்” என்பதே. ஆனால், இதற்குள் இன்னும் பல உள்ளடக்கப்பட்ட சாதக, பாதகங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அவற்றில் பலவற்றைக் குறித்து, வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களின் கட்சி அரசியல் நிலைப்பாட்டிற்கேற்ப, அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்தோ எதிர்த்தோ எழுதிய வண்ணம், பேசிய வண்ணம் உள்ளனர். பொது மக்களும், தங்கள் கட்சிப் பார்வை எனும் கண்ணாடி அணிந்து கொண்டே பல விமரிசனங்களை வைப்பதாகத் தோன்றுகிறது. நம்மை எடுத்துக் கொண்டால், நாம் இன்னும் இதனைப் பொருளாதார ரீதியாக ஆராய்ச்சி செய்து ஒரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. ஒருசில நடைமுறைச் சிக்கல்கள் புரிகின்றது, உடனடியான பாதிப்பாக பொருட்களுக்கான வரிப்பணம் அதிகமாவது போலத்தான் தோன்றுகிறது. நெடுநாளைய ஆதாயமாகப் பல விஷயங்கள் இருப்பதுபோலத் தெரிகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
நமக்குத் தெரிந்த வெகுஜனப் பார்வையில் பார்க்கையில், சாதகமான ஒரு விஷயம் மிகப் பிரம்மாண்டமாய் நம் கண்ணுக்கு முன் தெரிகிறது. இந்த மாற்றங்களுக்கு முன்னர்வரை, ஒவ்வொரு மாநிலமும் அதனதன் விதிகளுக்கேற்ப, பொருள் மற்றும் சேவைகளுக்கு வரி விதித்துக் கொண்டிருந்தனர். ஏதேனும் ஒரு நுகர்வோர் பொருள், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறதென்றால், அது கடந்து செல்லும் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்திற்கேற்ப வரி செலுத்த வேண்டும். அவை மொத்தமாய் எவ்வளவு வருமென்பது, முன்கூட்டியே அறிந்த விஷயமா என்பது ஒருவிதமான கேள்விக்குறியே. இந்தச் செலவுகளுக்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்ய வேண்டிய நிலையிருப்பதால், அதிலும் சற்று ஸ்திரத்தன்மை குறைந்திருப்பதாகவே நமக்குத் தோன்றியது. ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் வரி செலுத்துவது என்பதற்கும் மேலாக, அதற்கான ஆவணங்களைக் காட்டி உரிய அனுமதி பெறுவது என்பது சற்றுக் கடினமான விஷயமாகவே தோன்றுகிறது. இந்த நடவடிக்கை, அதற்குரிய அலுவலர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மாமூலை அதிகரிப்பதற்குப் பயன்பட்டதாகவே, நிதர்சனமாய்ப் பேசுவோரின் குரல் ஒலிக்கிறது. மேசைக்கு மேலே செலுத்தப்படும் வரிகளும், மேலைக்கு அடியில் கொடுக்கப்படும் மாமூல்களும் மொத்தமாய் விடிவது நுகர்வோரின் தலையிலேயே என்பது நமக்குத் தெரிந்த உண்மையே. நாடு முழுமைக்கும் ஒரே வரிச் சதவிகிதம் என்ற இந்த மாற்றம், இது போன்ற மேசையடியில் நடத்தப்படும் பேரங்களைப் பெறுமளவு குறைக்கும் என்ற வகையில், இது சரியான முடிவே என்று நமக்குத் தோன்றுகிறது.
ஆளுங்கட்சி எது செய்தாலும் அதில் பிழை கற்பிக்கும் எதிர்க் கட்சிகளையும், அந்த நடவடிக்கை போலச் சிறந்தது ஒன்றுமில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு பெருமை பேசும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களையும் விட்டு விட்டு, பொதுமக்கள் என்ற ரீதியில் பார்க்க எத்தனிக்கிறோம். இன்னும் சில காலம் தொடர்ந்து கண்காணித்து, இந்த மாற்றத்தின் விளைவுகளை முடிவு செய்வதே சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதே இப்போதைக்கு நமக்குத் தோன்றும் கருத்து.
நன்றி,
ஆசிரியர்.