\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அம்மா கடை காப்பி…

Filed in இலக்கியம், கதை by on July 30, 2017 0 Comments

”ம்ம்…. ஏண்டா அம்பி… எங்க உங்கப்பா… “ கேட்டுக் கொண்டே அந்தத் திண்ணையின் தாவி அமர்ந்து கொண்டார் பக்கத்து வீட்டு கஸ்தூரி மாமா.

“தெர்ல மாமா, எங்கயோ போயிருக்கா…” என்று பதில் சொல்லி விட்டு, அந்த இத்துப் போன ரப்பர் பந்தைச் சுவற்றில் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான் கணேசன். இவன் பதிலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் மடியில், வேஷ்டி மடிப்பில் சுற்றி வைத்திருந்த வாழைப்பட்டையை வெளியில் எடுத்துப் பிரித்து, அதிலிருந்து டி.கே.எஸ். பட்டணம் பொடியை, ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலைக் கொண்டு ஒரு சிமிட்டி எடுத்து, கையை உதறினார். உதறிய மாத்திரத்தில், ஒரு புறம் தலையைச் சாய்த்துக் கொண்டு, ஒரு மூக்கில் பொடியை வைத்து அவசரமாய் ஒரு முறை உறிஞ்சினார். தலையை மறுபக்கம் சாய்த்துவிட்டு, மற்றொரு மூக்குத் துவாரத்தில் இன்னொரு முறை உறிஞ்சி முடித்தார். அதன் பின்னர், வேஷ்டியைச் சற்று லாவகமாகத் தூக்கி, அதன் அடி முனையின்மூலம் மூக்கில் மேற்பகுதிகளைச் சரி செய்து கொண்டு மீண்டும் திண்ணையில் அமர்ந்தார்.

அருகிலிருந்து இதனை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்த கணேசன், தனது பந்து விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கத்து வீட்டிலிருந்து சீனு மாமா, “என்ன ஓய்,… கஸ்தூரி ஐயர் இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேள்… “ என்று குசலம் விசாரித்துக் கொண்டே வந்து அமர்ந்தார். “ஆமாங்காணும், நேக்குச் சரியாத் தூக்கம் வரல… எப்படா விடியும்னு காத்துண்ட்ருந்தேன்…” எனப் பதில் கொடுத்துக் கொண்டிருக்க, அடுத்த தெரு ராஜு ஐயரும் அங்கே வந்து சேர்ந்தார். “என்னங்காணும், நியூஸ் கேட்டேளா?” என்று ஆரம்பித்துக் கொண்டே வந்த அவர், மற்ற எல்லாரையும் காட்டிலும் வயதில் மூத்தவர். பக்கத்துச் சிவன் கோயில் சமையற்காரராக வேலை பார்க்கும் அவருக்கு, படிப்பும் அறிவும் சற்றுக் குறைவே. அனைவரும் அவரைக் கேலி பேசுவதனால், தனக்கும் உலக நடப்புத் தெரியும் என்பதற்காக அவ்வப்பொழுது ரேடியோவில் அறைகுறையாகக் கேட்ட தலைப்புச் செய்திகள் குறித்துப் பேச்சு நடத்த முற்படுவார்.

அனைவரும் வரத்தொடங்கியதும், திண்ணையிலிருந்து எழுந்து வீட்டுக்குள் செல்ல எத்தனித்த கணேசனிடம், “டேய்… சாத்வீகமானவர் எப்டி இருக்கார்” என்று வம்பிழுத்தார் கஸ்தூரி மாமா. கஸ்தூரி ரங்கன் என்ற முழுப் பெயருடைய மாமா, ஒரு தெருமுனையில் வருகிறார் என்றால் அந்தத் தெருவே காலியாகிவிடும். அவ்வளவு பயம். “அறுவை மன்னன்” என்றொரு செல்லப் பெயருண்டு அவருக்கு. பேசியதையே திரும்பத் திரும்பப் பேசும் அவர், சாத்வீகமானவர் என்று குறிப்பிடுவது பிரம்பு எடுத்து மாணவர்களை அடித்துப் பின்னிவிடும் கணேசனின் கணக்கு வாத்தியாரைத்தான். அவர் அந்த ஆசிரியருக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் அதுதான். “போங்க மாமா, உங்களுக்கு எப்பவும் இதேதான்….” சொல்லிவிட்டு, காற்றாய்ப் பறந்தான் கணேசன். உள்ளே நுழைந்த மகனைப் பார்த்து, கணேசனின் அம்மா, புலம்ப ஆரம்பித்து விடுவார். “ஆச்சு, விடிஞ்சாச்சு… பல்லு தேய்க்குறதுகளோ இல்லையோ… வந்துடருதுகள்”….

டெய்லர் கடை ஸ்டீஃபன், கோயிலில் தேவாரம் பாடும் ஓதுவார் என அழைக்கப்படும் மீனாட்சி சுந்தரம், லாட்டரி டிக்கெட் விற்கும் ஜெயராமன் என அனைவரும் கூடத்தொடங்கினர். ஞாயிற்றுக் கிழமை ஆகிவிட்டால், இப்படித்தான். கணேசனின் வீட்டுத் திண்ணை களைகட்டத் தொடங்கி விடும். அனைவரும் கூடியிருப்பது, கணேசன் வீட்டின் அடுத்த வீட்டின் கதவு திறப்பதற்காக. அடுத்த வீட்டில் குடியிருக்கும் சரஸ்வதி மாமி, அந்த வீட்டின் முன்புறத்தை ஒரு காப்பிக் ஹோட்டலாக மாற்றியிருந்தார். அதற்கு ”அம்மா கடை” என்று பெயர். அந்த கிராமத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிராமணாள் காப்பிக் கடை அது.

சரஸ்வதி மாமி, கணவனை இழந்தவர். அவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக இருக்கட்டும் என்றும், அடுத்த ஊரிலுள்ள அவரது அண்ணன் சிறிதளவு முதல் போட்டு வைத்துக் கொடுத்த அந்தக் கடை. அதற்கு ஒரு மவுசு எப்படித்தான் வந்ததோ தெரியவில்லை. ஃபில்டர் காப்பி நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த மாமியின் ’மூட்’ அவ்வப்பொழுது அவுட் ஆகிவிடும். சில நாட்கள் மிகவும் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் அவரே, வேறு சில நாட்களில் எரிந்து விழத் தொடங்கியிருப்பார்.

“ஏன் இப்டி, கடை முன்னால நின்னுண்டிருக்கேள்… கடையே நின்னு போய்டப் போறது” என்பார் ஒரு நாள். சரி, நிற்க வேண்டாம் என்று எண்ணி, அங்கே போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தால், ‘சும்மா ஒக்காந்துண்டே இருக்கேளே, கடை ஒக்காந்து போய்டாதோ?” என்று நீட்டி முழக்குவார். இது போலக் கேள்விகள் வரத்துவங்கியதும் அனைவருக்கும் புரிந்து இன்று மாமியின் ‘மூட்’ சரியில்லை, வந்த வேலையைச் செய்து விட்டுக் கிளம்பிவிட வேண்டியதுதான் என்று அவசர அவசரமாக காப்பி உறிஞ்சத் துவங்குவர்.

“என்னத்துக்கு இப்டி, மாடு கழனித் தண்ணி மேஞ்சாப்போல… நின்னு நிதானமாக் குடியுங்கோளேன்.. நன்னா இருக்கிற காப்பிக்கு ஒரு மரியாதை கொடுங்களேன்”… தனக்குத் தானே ஷொட்டு கொடுத்துக் கொள்ளத் தவறமாட்டார் மாமி. சரியென்று நிதானமாகக் குடிக்கத் துவங்கினால், “இதென்ன ஒங்க மாமியார் வீடா, நாலு பேரு வரப்போற இடம்.. சீக்கிரம் குடிச்சிட்டு இடத்தை காலி பண்ணினாத்தானெ…. இல்லன்னா வியாபாரம் படுத்துடாதா?” எனக் கேட்டு அசர வைப்பார். வேறு வழியில்லை, அவரிடம் இந்த மூடில் மாட்டிக் கொண்டால் வாங்கிக் கட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை…

“ஏண்டி ரத்தினம்… இந்த மாமி காப்பில அப்டி என்னதாண்டி ஸ்பெஷல்.. இவ இவ்வளவு வைஞ்சாலும் எல்லாரும் மானங்கெட்டுப் போய் வந்து குடிக்கிறா?” உண்மையான சந்தேகத்துடன் பக்கத்து வீட்டு ரத்தினம் மாமியிடம் விசாரிப்பார் கணேசனின் அம்மா. “தெரியல மாமி, ஏதோ வசிய மருந்து போடுவான்னு பேசிக்கிறா, ஊர்ல…” தெரியாது என்று சொன்னாலும், தெரிந்ததுபோல் ஒரு புரளியைக் கிளப்பி விடுவார் ரத்தினம் மாமி. ”உங்காத்துக்காரண்ட கேட்ருக்கியா, ஏன் அங்கயே போரார்னுட்டு?” தனது கணவர் தன் வீடு விட்டு வேறெங்கும் காப்பி குடிக்கவோ, சாப்பிடவோ செல்வதில்லை என்ற இறுமாப்பில் ரத்தினம் மாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். “கேட்டேனே மாமி… எங்க சொல்றார்.. இன்னும் அழுத்திப் பிடிச்சுக் கேட்டா, சண்டை தான்… என்னதான் இருக்கோ அந்த சரஸ்வதிகிட்ட….” என்று அலுத்துக் கொள்ளத் துவங்க, இதே உரையாடலைப் பல நாட்கள் கேட்ட கணேசன், அதில் ஆர்வம் காட்டாமல் தனது பந்து விளையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

”நேக்கு, ஒரு பத்தாயிரம் ரூபா எங்கயாவது லோனா வாங்கிக் கொடுங்களேன்.. இந்தக் காப்பிக் கடையை ஒரு முழு ஓட்டலா மாத்திடரேன்..” நல்ல மூடிலிருந்த சரஸ்வதி மாமி, வழக்கமாய்க் காப்பி குடிக்க வரும் அனைவரிடமும் பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். “பத்தாயிரமா?…. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்” என்று ராஜு மாமா சொல்ல, “என்னமோப்பா, இருந்தாக் குடுங்கோ, இல்லன்னா இல்லன்னு சொல்லுங்கோ, நான் என்ன இப்போ கொடுத்தே ஆகணும்னு சண்டை புடிச்சேனா?” சட்டென்று ‘மூட்’ மாறிவிட அனைவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காக, சீனு மாமா, “மாமி, நீங்க கவலைப்படாதேள்.. நான் எப்படியாவது அரேஞ்ச் பண்றேன்.. நம்ம செட்டியாரை எனக்கு நன்னாத் தெரியும், நான் கேட்டா மாட்டேன்னு சொல்ல மாட்டார்… உங்களுக்காக நான் இது கூட செய்ய மாட்டேனா” என்று சொல்ல, அவர் முடிக்குமுன் புலியாய்ப் பாய்ந்தார் சரஸ்வதி மாமி… “சரி, சரி… ரொம்பப் பேச வேண்டாம்… நான் கேட்டிருக்கக் கூடாது…. வந்த வேலையைப் பாத்துண்டு கிளம்புங்கோ.. ஓட்டலும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்… இதுவே போறும் என் ஜீவனம் பாத்துக்க…” பொறிந்து தள்ளத் துவங்கினார் மாமி.

”சுவாமி இன்னைக்கு மலையேறிடுத்து… இன்னுமே எது சொன்னாலும் அர்ச்சனைதான்… ராஜு.. உம்மால பாரும் ஓய், நேக்குக் காப்பி கூடக் கிடைக்கல இன்னைக்கு” புலம்பிக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்ற சீனு மாமாவைப் பின் தொடர்ந்து, காப்பி இல்லாத ஏமாற்றத்துடன் அனைவரும் செல்லத் தொடங்கினர். கிளம்பியவர்களின் மனத்தில் அடுத்த ஞாயிற்றுக் கிழமை விரைவில் வராதா என்ற ஒரே எண்ணம் தான்….

– வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad