மீண்டு(ம்) வரும் சுதந்திரம்
விண்ணோர் போற்றிடும் வகைவாழ்ந்து
வியத்தகு சாத்திரம் பல படைத்து
மண்ணோர் வாழ்நெறி வரையறுத்த
மதிநிறை மக்கள் வாழ்ந்திட்ட தேசமிது!!
பல்லாயிரம் ஆண்டுகள் முன்னமேயே
சொல்லால் செயலால் நிலையுணர்ந்து
பொல்லாதது செய்யாது வாழ்ந்திருந்து
வெல்லாத துறையில்லாதிருந்த தேசமிது !
காட்டு விலங்குக் கூட்டம் மத்தியிலே
வாட்டும் குளிரின் வாடையிலே – வேற்று
நாட்டினர் ஆடைகளின்றி திரிந்து இருக்கையில்
வீட்டுமனைகள் வீதிகளாய் வாழ்ந்திருந்த தேசமிது !
மனிதனை மனிதன் அடித்துத் தின்றல்
மண்ணில் சரியென்று உலகம் நினைத்திருக்க
மனத்தில் இனிதானவன், கொல்லாமை இல்லாதவனே
மனிதனென்ற தத்துவத்துடன் வாழ்ந்திருந்த தேசமிது!
கோணிப் பைகளில் குடித்தனம் நடத்திடும்
கோலத்தில் மேற்கு உலகினர் வாழ்ந்திருக்கையில்
கோள்களை அளந்து குவலயம் புரிந்து
கோலோச்சி வாழ்ந்த கோலாகல தேசமிது!
வாணிகம் நடத்திட வந்தனர் வெள்ளையர்
ஆணினம் பலதையும் மதுவினில் கவிழ்த்தனர்
நாணிய நல்லவரை நயவஞ்சக வழிகளைப்
பேணியே வீழ்த்தினர் பேடிகள், புல்லர்கள் !!
ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கம் நடத்தினர்
மாட்சிமை முழுவதும் மண்ணினில் புதைத்தனர்
சாட்சிகள் அழித்து சங்கடம் விளைத்தனர்
காட்சிகள் எங்கிலும் கண்ணீரை விதைத்தனர் !!
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
இம்மையிலும் மறுமையிலும் அடிமைகளெனப் பரிகாசம்
செம்மையான வாழ்வுமாறி செக்கிழுத்து உடல்வருந்தி
வெம்மையான உணர்வுகளாய் வீதிகளில் பரிதவிக்க
பிள்ளைகளோ, சிறியவரோ, வயதினிலே பெரியோரோ
இல்லையெந்த வேறுபாடும் வெள்ளையரின் கொடுமைகட்கு
வெள்ளைமனப் பெண்டிரவர் விதவையானர் ஒருநொடியில்
கொள்ளையழகுப் பெண்களோ குலைந்தழிந்தனர் சடுதியிலே!!
குருதி கொதித்திட்ட குவலயத்து மாந்தரவர்
அறுதியிட்டு, சூளுரைத்து ஆக்ரோஷமாய்ப் போராட
கருதிப் பலவழியில் கடுமையான துயரடைந்து
இறுதியில் அடைந்தனர் இணையிலாச் சுதந்திரம் !!
தன்னலமற்ற பெரியோர் பலர் – தங்கள்
இன்னுயிர் ஈந்ததால் வந்ததிந்தச் சுதந்திரம் !
மண்ணில் சிந்திய செந்நீராலே – நம்
கண்ணில் காட்சியாய்க் கிடைத்ததிந்த சுதந்திரம் !
எண்ணிய மாத்திரம் வியந்து போற்றிடும்
திண்ணிய வீரர்கள் தந்ததிந்த சுதந்திரம் !
அன்னியன் பிடியிலே ஆட்கொண்டு அவதியுற்ற
புண்ணிய பூமியை மீட்டெடுத்த சுதந்திரம் !
சுதந்திர வீரர்களின் தியாகங்கள் மறந்து
பதந்தரு பெரியோரின் பண்புச்சொல் மறைத்து
இதந்தரு மனிதர்களாய் இருப்பது தவிர்த்து
மதந்தரு போதனைகள் தவறுதலாய்ப் புரிந்து
வெள்ளையரின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தேசத்தை
கொள்ளையர்கள் கையிலெடுத்துக் கொடுமையிலே ஆழ்த்தினரே !
பார்க்குமிடம் எங்கும் பசிபிணி பாவத்தை
நீக்கமற நிறைத்துவிட்டுச் சுயநலம் பேணினரே!
மேடையிலே நல்லவர்போல் முழக்கங்கள் பலசெய்து
பாடையிலே போகும்வரை பணங்காசு குவித்திட்ட
பாவிகளின் சுயநலத்தால் பலதுயரும் அடைந்திங்கே
பாழ்பட்டு நின்றாலும், விழித்தெழும் விரைவினிலே !!
ஆயிரம் ஆண்டுகளாய்ப் போராடித் தேர்ச்சியுற்ற
ஆற்றல்மிகு நம்சமூகம், அதிகாரக் கூத்தாடும்
ஆணவமிகு அரக்கர்களை இரக்கமின்றி வெளியேற்றி
ஆனந்தக் கூத்தாடும், அந்தநாள் தூரமில்லை !!
– வெ. மதுசூதனன் !