விக்ரம் வேதா
மணிரத்னம் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் இணை காயத்ரி புஷ்கர். மணிரத்னம் தான் மஹாபாரதம், சத்தியவான் சாவித்திரி, ராமாயணம் என நாம் கேட்டு அறிந்த புராணக் கதைகளை, நாட்டு நடப்புகளுடன் இணைத்து, படங்களைக் கொடுத்து வந்தார். ரௌடியான கர்ணன், காஷ்மீர் போன சத்தியவான், சந்தன மரக் கடத்தல் செய்த ராவணன் என்று புராண மிக்ஸ் கதாபாத்திரங்களை வடிவமைத்து வந்தார்.
அந்த வகையில், இதில் நாம் சிறு வயதில் கேட்ட, வாசித்த, ரசித்த விக்ரமாதித்தன் வேதாளம் கதையை என்கவுண்டர் போலீஸ் – ரௌடி கேங் என்னும் பின்னணியில் சுவையாகக் கொடுத்திருக்கிறார்கள் புஷ்கர் காயத்ரி தம்பதியினர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமாக மாதவன், கேங்க்ஸ்டர் வேதாவாக விஜய் சேதுபதி. ஒவ்வொரு முறை மாதவனிடம் பிடிபடும் போதும், ஒரு கதையைச் சொல்லிவிட்டுத் தப்பிச் செல்கிறார் விஜய் சேதுபதி. இதில் யார் நல்லவன் யார் கெட்டவன் என்று அவர்கள் கூறுவதில் மட்டுமல்ல சுவாரஸ்யம். எது சரி, எது தவறு என்று ஆடியன்ஸையும் சேர்த்து அடிக்கடி யோசிக்க வைத்திருப்பதே படத்தில் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
மாதவன், விஜய் சேதுபதி இருவரின் கதைத் தேர்வுகளும் ஆச்சர்யப்படுத்துகின்றன. நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பது போல் தோன்றும் ‘இறுதிச் சுற்று’ படத்தில், மாதவன் தனது ஆளுமையைக் காட்டி ஜொலித்திருப்பார். இதில் விஜய் சேதுபதியுடன். கமல், அமீர் கான் போன்றோருடன் திரையைப் பங்கிட்டு நடித்தவருக்கு, இது பெரிய விஷயம் இல்லை என்றாலும், தனது நடிப்பின் மீது மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவராலேயே தொடர்ந்து இது போல் பயணிக்க முடியும்.
மாதவன் நடிக்க வந்த புதிதில் பெற்ற ‘சாக்லேட் பாய்’ என்ற பெயரும், இன்று அவர் ஏற்று நடித்திருக்கும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களும் அவருடைய நடிப்புத் திறமையை மட்டுமன்றி, கதைத் தேர்வுத் திறனையும் காட்டுவதாக அமைந்துள்ளன. அதே போல், விஜய் சேதுபதியின் கதைத்தேர்வும் இன்னொரு வகையில் ஆச்சரியமூட்டும். தனது கதாபாத்திரம் கதையின் மையமாக இல்லாவிட்டாலும், கதை பிடித்து விட்டால் தேர்ந்தெடுத்து நடிப்பார். பிறகு, படத்தில் அந்தக் கதாபாத்திரம் நம்மைக் கவரும்படி நடித்துவிடுவார்.
மாதவன், விஜய் சேதுபதி – இருவருக்கும் சமபங்கு இருக்கும் வகையிலான கதை. அப்படியொரு கதையை உருவாக்கியிருப்பதிலேயே நம்மை முதலில் கவர்ந்து விடுகிறார்கள் இயக்குனர்கள். அதற்கு அவர்கள் அமைத்திருக்கும் திரைக்கதை, படத்தைச் சிறப்பாக்குகிறது. நடிகர்கள் தேர்வு, நடிப்பு, இசை, வசனம் போன்றவை படத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.
கதைக்குள் கதையாக மூன்று கதைகள் வருகின்றன. திருடா திருடா, திருடா திருடி, திருடன் போலீஸ் என்று அந்த அத்தியாயங்களுக்கு நமக்குப் பழக்கமான டைட்டில்களையே வைத்திருக்கிறார்கள். இது அனைத்தும் வேதாவைச் சுற்றி நடக்கும் கதைகள். இவை தவிர, விக்ரமின் உலகைச் சுற்றி ஒரு கதையும், விக்ரமிற்கும் வேதாவிற்கும் இடையேயான பரமபத விளையாட்டுக் கதையும் இதில் சேருகின்றன.
படத்தைப் பார்க்கும்போது, இப்படத்தின் ஸ்கிரிப்ட்டிற்காக, இயக்குனர்கள் உழைத்திருப்பது தெரிகிறது. 2007 இல் வெளிவந்த ஓரம்போ , 2010 இல் வந்த குவார்ட்டர் கட்டிங் என இரு படங்களும் சரியாகப் போகாததால் மூன்றாவது படமான இதில் கண்ணும், கருத்துமாக இருந்திருக்கிறார்கள். காட்சிகளின் காரணங்களை அழகாக இணைத்திருக்கிறார்கள். குவார்ட்டர் கட்டிங்கில் ஒரு அருமையான கதை இருந்தது. திரைக்கதை தான் சொதப்பி விட்டது என்பதை நினைவுப்படுத்திப் பார்க்கலாம். அப்படி என்ன கதையா? ஒரு இளைஞன் சரக்குக் கிடைக்காமல் நடு இரவில் தவிக்கும் தவிப்பு தான்! சரி, விக்ரம் வேதாவுக்கு வரலாம்.
முதல் பாதியில் சைலண்ட்டாக ஹீரோயிசக் காட்சிகளில் கலக்கியிருக்கும் மாதவன், பிற்பாதியில் குழப்பத்துடன் தவிக்கும் காட்சிகளிலும் மிளிர்கிறார். நண்பன் சைமன் இறந்த செய்தியைக் கண்களாலேயே அவருடைய மனைவியுடன் பகிரும் காட்சி ஒரு சான்று.
விஜய் சேதுபதி வழக்கம் போல் அசால்ட்டாக வருகிறார். அது மிரட்டலாக இருக்கும் போது, காட்சிக்குப் பொருந்துகிறது. அதுவே, காமெடியாகப் பண்ணுகிறேன் என்று இறுதியில் மாறும் போது, கதாபாத்திரத்திற்குப் பொருந்தாமல் போகிறது. முதல் காட்சியில் வடை சாப்பிட்டுக் கொண்டே போலீஸில் சரணடையச் செல்வது, தம்பியைக் காயப்படுத்தியவனைக் கோபத்துடன் அடிக்கச் செல்வது என அசத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதியின் தம்பியாக ‘மதயானைக் கூட்டம்’ கதிரும், கதிருக்கு ஜோடியாக வரலஷ்மியும் குறைவாகவே திரையில் வந்தாலும், கதைக்குத் தேவைப்படும் திருப்பங்களைக் கொடுக்க உதவியிருக்கிறார்கள். மாதவனுக்கு ஜோடியாக வரும் ஷ்ரதா, படத்தில் விக்ரமின் மனைவி, வேதாவின் லாயர் என படத்தின் கதாநாயகர்களை இணைப்பவராக இருக்கிறார். விஜய் சேதுபதிக்குத் தான் ஜோடி இல்லை. தனக்கு ஒரு பழைய காதல் கதை இருப்பதாகச் சொல்லத் தொடங்கும் அவரை, மாதவன் போதும் என்று அங்கேயே முடித்து விடுகிறார். அது என்ன கதையோ? அடுத்து பாகம் எடுத்தால் தெரியும்! எடுக்கும் வாய்ப்பும் உள்ளது. அப்படித்தான் படத்தை முடித்திருக்கிறார்கள். அங்கும் ஒரு கேள்வி, முடிவை நம்மிடம் கொடுத்தவாறு.
படத்தின் இன்னொரு ஹீரோ என்று இசையமைப்பாளர், சி.எஸ். சாமைக் குறிப்பிடலாம். பின்னணி இசையில் அவ்வளவு பொருத்தமாக, ரசிக்கும் வண்ணம் படத்தின் பலத்தைக் கூட்டியிருக்கிறார். “போகாத என்னை விட்டு “ பாடலில் படத்தின் கதையை அழகாகச் சொல்லியிருப்பதை, படத்தோடு கேட்கும்போது தான் புரிகிறது. அவரே இப்பாடலை எழுதியிருக்கிறார். ரவுடிகள் உலகைப் பாடும் “டசக்கு டசக்கு“ பாடலில், பாடிய பாடகர்கள் ரகளை செய்திருக்கிறார்கள்.
படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்வதில் உதவியிருக்கும் மற்றொருவர், வசனகர்த்தா மணிகண்டன். “தங்கச்சிக்கு என்ஜினியர் மாப்பிள்ளை பார்த்திருக்கேன்” என்பவரிடம் “அதில என்ன பெருமை?” என்று மாதவன் பதில் கேள்வி கேட்பதில் ஊர் நிலவரத்தைப் புட்டு வைத்திருக்கிறார் மணிகண்டன். படத்தில் ஒரு பயந்த போலீஸ் கேரக்டரிலும், இவர் வந்து செல்கிறார்.
படத்தின் குறை என்றால், படத்தில் இருக்கும் ஏகப்பட்ட முடிச்சுகள், திருப்பங்களைத் தான் சொல்ல வேண்டும். பார்ப்பவர்களை யோசிக்க வைப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், ஒரேடியாக யோசிக்க வைத்து, களைப்படையவும் செய்யக் கூடாது. ட்விஸ்ட் கொடுக்கிறேன் என்று எதார்த்ததை மீறியும் சென்று விடக் கூடாது. படத்தைப் புரிந்து, பிடித்துப் போய் திரும்பத் திரும்பப் பார்ப்பது ஒரு வகை. இன்னொரு முறை பார்த்தால் இன்னமும் புரியுமோ என்று நினைத்துப் பார்ப்பது இன்னொரு வகை. இரண்டாவது வகையில், படம் பிடித்து இன்னொரு முறை பார்ப்பவர்கள், இப்படத்திற்கு அதிகம் இருப்பார்கள்.
விக்ரம் வேதா – விவேகமும் வேகமும்.
– சரவணகுமரன்
Tags: காயத்ரி, புஷ்கர், மாதவன், விக்ரம் வேதா, விஜய் சேதுபதி, விமர்சனம்