\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஏ. ஆர். ரஹ்மான் – 25

ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில், இது இருபத்தைந்தாவது ஆண்டு. 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ரோஜா வெளியான சமயம், அவருடைய வயது 25. இந்த இளைஞன் தான் இந்திய இசையைப் புரட்டிப் போடப் போகிறான் என்றும், இவன் உள்ளூர் இசையை உலகிற்கும், பலவகை உலக இசையை நம்மூருக்கும் பரப்பவிருக்கும் ஆஸ்கர் நாயகனாக இருப்பான் என்று யாரும் எண்ணியிருக்கவில்லை. சாதனைகளுக்கு எந்த நிறுத்தமும் இல்லாமல், ஓடிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் இசைப்பயணத்தை, அவருடைய சிறந்த 25 பாடல்களைக் கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்ப்போமா?

1992

1992 இல் அவர் இசையில் முதலில் வெளிவந்த ரோஜாவை எல்லோரும் அறிந்திருப்போம். முதல் படத்திலேயே அவருக்குத் திரைக்கலைஞர்களுக்கான இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருது கிடைத்தது. இந்த விருது அவருக்குக் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது, அப்போது தேர்வுக் குழுவில் இருந்த பாலு மகேந்திராவின் ஒரு ஓட்டு. அச்சமயம் தேவர் மகன் படத்தின் இசைக்காக, தேசிய விருதுக்கான போட்டியில் இருந்த தமது நண்பர் இளையராஜாவுக்குப் போடாமல், புதிதாக அறிமுகமான ரஹ்மானுக்குத் தமது ஓட்டை அளித்தார் பாலு. அதற்குப் பிறகு, மூன்று முறை இந்த விருதை வாங்கிவிட்டார் ரஹ்மான்.

 

1992 இல் அவர் இசையமைப்பில் வெளிவந்த மற்றொரு படம், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த யோதா.

1993

அன்று அவருடைய இசை புதியதாக இருந்தது. எங்கும் கேட்காததாக இருந்தது. துல்லியமாக அந்த இசை ஒலித்தது. வாக்மேனில் அவருடைய பாடல்களைக் கேட்பது, ஒரு மேஜிக் அனுபவமாக இருந்தது. கணினி, சிடி என்று டெக்னாலஜி முன்னேற்றமும் அவருடைய இசையும் இணைந்து ஒரு புது அனுபவத்தை இசை ரசிகர்களுக்கு அளித்தது. 1993 இல் அவருடன் இணைந்து பாரதிராஜா, கிழக்குச் சீமையிலே அறிவித்த போது, எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. கிராமத்துப் படத்துக்கு ரஹ்மான் இசையா என்று. அந்த ஆச்சரியங்களுக்குத் தனது இசை மூலம் பதிலளித்தார் ரஹ்மான். அதில் கிராமியமும் இருந்தது, ரஹ்மானது பிரத்யேகப் பாணியும் இருந்தது. அதே ஆண்டு ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனுக்கு இசையமைத்து, தான் ஒரு கமர்ஷியல் இசையமைப்பாளர் என்றும் நிரூபித்தார் ரஹ்மான்.

1994

தயாரிப்பாளராக ரோஜாவில் ரஹ்மானை அறிமுகப்படுத்திய பாலசந்தர், தான் இயக்கவிருந்த டூயட் படத்தில் ரஹ்மானை இசையமைப்பாளராகச் சேர்த்துக் கொண்டார். அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருந்த அனுபவம் வாய்ந்த மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோர் ஏதேதோ காரணங்களால் இளையராஜாவிடம் இருந்து விலகி, வேறொரு இசைத் துணைக்காகக் காத்திருந்தனர். ரஹ்மானின் வருகை, இவர்களுக்கு இன்னொரு வெற்றி இன்னிங்க்ஸைக் கொடுத்தது. இன்னொரு பக்கம், அப்போது தான் அறிமுகமாகி இருந்த ஷங்கர், கதிர் போன்றோருடனும் கூட்டணி அமைத்து, இளைஞர்களுக்குத் தொடர்ச்சியாக இசை விருந்து அளித்துக்கொண்டிருந்தார் ரஹ்மான்.

1995

தமிழ்நாட்டில் மையம் கொண்டிருந்த இசைப்புயல், வட இந்தியாவையும் தாக்கத் துவங்கியது, 1995 இல். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய், பல காரணங்களால் இந்தியா முழுக்கப் பேசப்பட்டது. அதில் ரஹ்மானின் இசையும் முக்கியக் காரணம். இதுவரை ரஹ்மானின் தமிழ்ப்பாடல்கள் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பிரபலமாகி இருந்தது. முதன்முதலாக, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரங்கீலாவில் நேரடி ஹிந்திப்படத்தில் அறிமுகம் ஆனார். படமும், இசையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. 80களில் மொத்த இந்தியாவும் ஹிந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டைத் தன் வசம் வைத்திருந்தார் இளையராஜா. 90களில் ரஹ்மான் போட்ட போடில் ஹிந்திவாலாக்கள் தமிழ்ப் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வருடம் தான் ரஜினி, தேவாவிடம் இருந்து ரஹ்மானிடம் முத்து படத்துக்காக வந்து சேர்ந்தார். அதற்கு அடுத்த வருடம் எலெக்ஷ்னுக்கு ரஹ்மான் இசை தான் தீம் மியூசிக்காக இருக்கும் என யாரும் அப்போது நினைத்திருக்கவில்லை.

1996

1996 தமிழகத் தேர்தலில் ரஜினி திமுக-தமாக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுக்க, முத்து படத்தின் இண்ட்ரோ மூலம் ரஹ்மான் பின்னணி இசை கொடுத்தார். சன் டிவியில் இருபத்து நான்கு மணி நேரமும் இது ஒலித்துக்கொண்டே இருந்தது. ரஹ்மான் இசையால் தான் அந்தக் கூட்டணி வெற்றிப்பெற்றது என நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்? இருந்தாலும், சொல்லி வைப்போம்!! 🙂

இந்த வருடம் ஷங்கரின் இந்தியன், பி.வாசுவின் லவ் பேர்ட்ஸ், கதிரின் காதல் தேசம், ரவி என்றொரு அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் மிஸ்டர். ரோமியோ ஆகிய படங்கள் வெளிவந்தன. புது இயக்குனர், பழைய இயக்குனர், கெத்துப் படம், மொக்கைப் படம் – எதுவாக இருந்தாலும் இசையில் என்றும் குறை வைத்ததில்லை இசை சாம்ராட்.

1997

ஆரம்பக்காலத்தில் தன்னுடன் விளம்பரப்படங்களில் இணைந்து பணியாற்றிய ராஜீவ் மேனனுக்கு ஏ.வி.எம்மில் ரஹ்மான் வாய்ப்பு வாங்கிக்கொடுத்த படம் – மின்சாரக் கனவு. பதிலுக்கு ராஜீவ் மேனன் ரஹ்மானுக்கு வாங்கிக்கொடுத்தது, இன்னொரு தேசிய விருது. அது மட்டுமில்லாமல் பிரபுதேவாவுக்குச் சிறந்த நடனத்திற்கும், எஸ்.பி.பிக்குச் சிறந்த பாடகருக்கும், சித்ராவுக்குச் சிறந்த பாடகிக்கும் தேசிய விருதுகள் வந்து குவிந்தன. இந்தக் காலத்தில் இந்த அடி பின்னும் ரஹ்மான் எம்.ஜி.ஆர். காலத்தில் என்ன இசையமைத்திருப்பார் என்ற எண்ணத்திற்குப் பதிலாக ‘இருவர்’ பட இசை அமைந்திருந்தது. ரஹ்மான் பாடல்களில் ஒரு குற்றச்சாட்டு சொல்வார்கள். பாடல் வரிகளைச் சரியாகக் கேட்க விடாமல் இசையமைக்கிறார் என்று. சுத்தத் தமிழில் எழுதப்பட்ட ‘நறுமுகையே’ மாதிரியான பாடல்களில் அப்படிப்பட்ட குறைகள் இருக்காது. அவருக்குத் தெரியாதா, எதையெதை நமக்கு எப்போது தர வேண்டும் என்று?!!

இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர ஆண்டில் நவீன இந்தியாவுக்கான ‘வந்தே மாதரம்’ படைத்தார். அது இந்த தலைமுறை இந்திய இளைஞர்களுக்கான தேசிய கீதமானது.

1998

இந்த வருடம் புது இயக்குனர்களின் படங்களுக்கு எதுவும் இசையமைக்கவில்லை. மணிரத்னம், ஷங்கர் அப்படி இல்லையென்றால் ப்ரியதர்ஷன், தீபா மேத்தா என்று செட்டிலாகி விட்டார். தமிழில் ஜீன்ஸ் மட்டுமே வெளியாகியது. ஹிந்தியில் தில்சே, எர்த், தோலி சஜகே ரஹ்னா ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் ‘தில்சே’ தமிழில் ‘உயிரே’ என வெளியாகி,ஆடியோ விற்பனையில், தமிழ் படங்களுக்கு நிகரான சாதனை படைத்தது. வைரமுத்து வரிகள், இது ஹிந்தி படத்திற்கான பாடல்கள் என்ற உணர்வை கொஞ்சமும் கொடுக்கவில்லை. ‘காதலுக்கு மரியாதை’யை ப்ரியதர்ஷன் ஹிந்தியில் ‘தோலி சஜாகே ரஹ்னா’ என்று இயக்கினார். படம் ஹிட் இல்லையென்றாலும், பாடல்கள் ஹிட் ஆகின. இச்சமயத்தில் இப்படி வீணாய்ப்போன பாடல்களை, வேறு மொழியில் ரீ-யூஸ் செய்யத் தொடங்கினார். இப்படத்தின் பாடல்கள் தமிழில் ‘ஜோடி’ படத்தில் பயன்படுத்தப்பட்டன. ‘எர்த்’ பாடல்கள் ‘ஸ்டார்’ படத்தில் பயன்படுத்தப்பட்டன. இப்படிப் பழைய ஈயம் பித்தளை பிஸினஸ் செய்தே ப்ரவீண்காந்த் போன்ற சில இயக்குனர்கள் படங்கள் இயக்கினார்கள்.

1999

ரஹ்மான் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். படையப்பா, முதல்வன், தால், தாஜ்மகால், சங்கமம் என மெகா ஹிட்டுகளின் காலம். முத்துவில் ரஹ்மான் இசைக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஓர் அந்நியத்தன்மை இருந்தது. படையப்பாவில் எல்லாம் சரியாகி நெருங்கி விட்டார்கள். ரஜினியின் மாஸ், ரஹ்மானின் கிளாஸ் என இரண்டும் கலந்து இருந்தது. மின்சாரக் கண்ணா பாடல் ஒரு உதாரணம். சங்கமம் படப் பாடல்கள் மற்றொரு உதாரணம். பாமர ரசிகர்களையும், ட்ரெண்டிங் இளைஞர்களையும் கர்னாடிக் இசை நுணுக்கங்களை ரசிக்க வைத்தார். சங்கமத்தில் தான் மிகவும் மதிப்புக் கொண்டிருந்த எம்.எஸ்.விஸ்வநாதனைத் தனது இசையில் நெக்குருகப் பாட வைத்தார். இங்கே இப்படி என்றால், வட இந்திய கிராமிய இசையை வெஸ்டர்னில் கலந்து ‘தால்‘ படைத்தார்.

2000

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மகத்தான இசைக் கலைஞனாகத் திகழம் ரஹ்மானுக்கு 2000 ஆம் ஆண்டும் சிறப்பாக அமைந்தது. இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்தது. அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரிதம், தெனாலி ஆகிய படங்கள் வெளிவந்தன. ரஹ்மான் என்னதான் உயிரைக் கொடுத்து இசையமைத்திருந்தாலும், அவருடைய எல்லாப் பாடல்களும் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுத் திரைக்கு வருவதில்லை. மணிரத்னம், ஷங்கர், கதிர், ராஜீவ் மேனன், வசந்த் போன்ற வெகு சிலரே பாடல்களுக்கான நியாயத்தைச் சேர்ப்பவர்கள். இதில் ஷங்கர் கேசட்டில் வெளியிட்டது போக, இன்னும் ரெண்டு பாடல்கள் வாங்கிப் படத்தில் சேர்ப்பார். மணிரத்னம் வேறு வகை. நல்ல நல்ல பாடல்களாக வாங்கி, காட்சிக்குப் பின்னணியில் எங்கேயோ சேர்த்து விடுவார். அதைப் பார்க்க நமக்குத் தான் கொலவெறியாக இருக்கும்.

2001

2000 வரை தமிழ்ப் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமே முதல் பணியாக இருந்தது, இரண்டாயிரத்திற்குப் பிறகு மாறிவிட்டது. இந்த ஆண்டுத் தமிழில் வெளிவந்த பார்த்தாலே பரவசம், அல்லி அர்ஜுனா, ஸ்டார் போன்ற படங்கள் திராபையாகப் போக, ஹிந்தியில் வெளிவந்த லகான் பெரும் புகழைக் கொடுத்தது. இதற்குப் பிறகு, ஹிந்திப் படங்களை அதிகமாக ஏற்றுக் கொள்ள இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். லகானுக்கு முன்பே ரஹ்மான் இசையமைப்பில் இந்தியன், ஜீன்ஸ், எர்த் ஆகிய படங்கள் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு இருந்தாலும், லகான் முதன்முறையாக விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. லகானுக்கு ஆஸ்கர் கிடைத்துவிடும் என்று நாடே எதிர்பார்த்துக் கிடந்தது. ஆனாலும், அது தேர்வுப் பெறவில்லை. அப்படத்தின் மூலம் ரஹ்மானுக்கு, இசைக்காக இன்னொரு தேசிய விருது கிடைத்தது.

2002

இன்னுமொரு தேசிய விருது மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திற்காகக் கிடைத்தது. படத்தின் டைட்டில் பின்னணியில் ஒலித்த ‘வெள்ளைப் பூக்கள்’ பாடல், தொடக்கத்திலேயே ஒரு புல்லரிப்பைக் கொடுத்தது. இந்த ஆண்டு அவர் இசையில் தமிழில் வெளிவந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதில் ரஜினியின் பாபாவும் அடக்கம். பத்து வருடத்தில் ரஹ்மான் டொக்காகிவிட்டாரா எனக் கேள்விகள் எழுந்தன. ஆனால், இன்னொரு பக்கம் ஹிந்தியில் பகத்சிங், சாதியா (அலைபாயுதே) ஆகிய படங்களுக்கு விருதுகள் வாங்கிக்கொண்டு தான் இருந்தார்.

2003

ரஹ்மானுக்குத் தமிழில் இந்த வருடம் இன்னொரு மோசமான வருடம். மணிரத்னத்துடன் ஃப்ளாப், ரஜினியுடன் ஃப்ளாப் என்று இருந்தது, 2003இலும் தொடர்ந்தது. ஷங்கரின் பாய்ஸ், பாரதிராஜாவின் கண்களால் கைது செய் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆபிஸில் அடி வாங்கிna. காரணம் என்னவோ தெரியாது. இதற்குப் பிறகு, ரஜினி படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். ஷங்கர் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

ஆனால், இந்தாண்டு, ரஹ்மான் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்தார். அது, சீன மொழியில் வெளியான ‘வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தது தான். இதற்கு முந்தைய ஆண்டு, ‘பாம்பே ட்ரீம்ஸ்’ என்னும் ஆங்கில மேடை இசை நாடகத்திற்கு இசையமைத்து, தனது பார்வையை இந்தியாவிற்கு வெளியேயும் கொண்டு சென்று இருந்தார். இது கூட, அவருடைய தமிழ்ப்படத் தோல்விகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

2004

2004 இல் தமிழில் ஆய்த எழுத்தும், நியூவும் வெளியாகியது. ஃபனா என்ற வார்த்தையைத் தவிர, முழுக்கத் தமிழில் எழுதப்பட்ட பப் பாடல் ‘ஆய்த எழுத்தில்’ வந்தது. இப்படத்திலும் சரி, ‘நியூ’ படத்திலும் பாடல்கள் நன்றாக வந்திருந்தன. சில பல புது முயற்சிகளும் செய்திருந்தார். ரீ-மிக்ஸ் கலாச்சாரம் தொடங்கப்பட்டது இதில் தான். ஆனால், மற்றவர்கள் போல் அல்லாமல், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ஒப்புதலுடன் ‘தொட்டால் பூ மலரும்’ பாடலை ரீ-மிக்ஸ் செய்தார். ரீ-மிக்ஸ் என்பதை விட, ரீ-ட்யூன் என்று சொல்லலாம். வாலியின் அதே பாடல் வரிகளுக்கு, புதிதாகத் தனது பாணியில் இசையமைத்திருந்தார். இளையராஜாவுக்கு ‘அம்மா என்றழைக்காத’ பாடல் எப்படியோ, அப்படி ரஹ்மானுக்கு ‘காலையில் தினமும்’ பாடல் அமைந்தது.

2005

லகானில் தொடங்கியது, வரலாற்றுப்படங்களுக்கு இசையமைக்கும் ரஹ்மானின் வரலாறு. அதற்குப் பிறகு, பகத் சிங் படத்திற்கு இசையமைத்தார். 2005 இல் அவர் இசையமைத்தது அனைத்தும் வரலாற்றுப் படங்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மங்கல் பாண்டே, கிஸ்னா என அவர் இசையில் வெளிவந்த படங்கள் அனைத்தும், வரலாற்று நாயகர்களின் திரைப்படங்கள். தமிழில் வெளிவந்தது, ஒரே ஒரு படம் தான். அன்பே ஆருயிரே. அதுவும், எஸ்.ஜே.சூர்யா செய்த சேட்டையால் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. ‘ஆறரை கோடி’ பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள். எஸ்.ஜே.சூர்யாவை மறந்து விடுங்கள். ரஹ்மான், அவரது ரசிகர்களுக்காகவே பாடியது போல் இருக்கும். வாலியின் வரிகள் அப்படி.

2006

இந்தச் சமயத்தில் ரஹ்மான் சுதாரித்துக்கொண்டார். செய்தால் நல்ல படங்கள் மட்டும் செய்வோம் என்று தமிழில் படங்களைக் குறைத்துக்கொண்டார். ஆங்கிலப் பட வாய்ப்புகள் அதிகம் வந்தன. 2006இல் வெளிவந்தவை, மூன்று படங்கள். ரங்தே பசந்தி, சில்லென்று ஒரு காதல், வரலாறு. ரங்தே பசந்தியும், வரலாறும் பெரும் வெற்றிப் பெற்றன. சில்லென்று ஒரு காதல் சுமாராகத் தான் ஓடியது என்றாலும், காலத்திற்கும் நிற்கும் பாடல்கள் அதில் இருந்தன. உதாரணத்திற்கு, ஸ்ரேயா கோஷல், நரேஷ் பாடிய ‘முன்பே வா’ பாடலைச் சொல்லலாம். இந்தச் சமயத்தில் ரஹ்மான் இசையில் ஒரு பெரும் மாற்றம் இருந்தது. நாற்பது வயதை நெருங்கியதால் இருக்கலாம். துள்ளிக்குதிக்க வைக்கும் அதிரடி இசை குறைந்து, மனதைத் தொடும் அட்டகாசமாக மெலடிகள் அதிகமாகக் கொடுக்கத் தொடங்கினார்.

2007

இந்தாண்டு ரஹ்மான் இசையில் மூன்று ஆங்கிலப் படங்கள் வெளியாகின. ஹிந்தியில் மணிரத்னத்தின் குரு. தமிழில் சிவாஜியும், அழகிய தமிழ் மகனும். ஆங்கிலத்தில் சேகர் கபூர் இயக்கத்தில் வெளியாகிய ‘எலிசபெத் – தி கோல்டன் ஏஜ்’ ஆஸ்கரில் சில விருதுகள் பெற்றன. ரஹ்மானின் இசை, ஆஸ்கருக்கு இதில் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அவர் ஆஸ்கரை நெருங்கிக்கொண்டிருந்தார்.

2008

இந்த ஆண்டுத் தான், ரஹ்மான் புகழை உலகமெங்கும் பரப்பிய “ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. ஜெய்ஹோ ஜெய்ஹோ என உலகமே ஆர்பரித்தது. இந்த வார்த்தையின் மேல் ட்ரேட்மார்க் பிரச்சினை வரும் அளவுக்கு, இந்தப் பாடல் பிரபலமாகியது. இந்தாண்டு வெளியாகி இருந்த ‘ஜோதா அக்பர்’ படத்திலும் பலரையும் கவர்ந்த இசையை அளித்திருந்தார் ரஹ்மான். தமிழில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு படமும் வரவில்லை. ‘சக்கரக்கட்டி’ மட்டும் வெளியாகி, வந்த வேகம் தெரியாமல் போனது. ஹிந்தியில் ஏற்கனவே வெளியாகிய பாடல்களை, இதில் பயன்படுத்தியிருந்தார். பாடல்களுக்கு இருந்த வரவேற்பு, படத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது.

இந்த ஆண்டுத் தான், ரஹ்மான் கே.எம். மியூசிக் கன்சர்வெட்டரி என்று இசைக்கான கல்லூரியைச் சென்னையில் தொடங்கினார். தான் இசையின் மூலம் பெற்ற வாய்ப்பை, சமூகத்தில் இருக்கும் ஆர்வமுடைய அடுத்தத் தலைமுறைக்கும் பகிரும் வண்ணத்தில், இது தொடங்கப்பட்டது.

2009

2009 ஆம் ஆண்டு ரஹ்மானுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. பல ஆண்டுகளாக ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த ஆஸ்கர் விருது ரஹ்மானுக்கு இரண்டாகக் கிடைத்தது. அவர் இசையமைப்பில் வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் ஆஸ்கரில் விருதுகளைக் குவித்தது. இந்தப் படத்திற்கா, இந்த இசைக்கா என்று அங்கலாய்த்துக்கொண்டவர்களுக்கு ரஹ்மானின் முந்தைய சாதனைப்பாடல்களை நினைவுப்படுத்திச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. ஆஸ்கர் ஜோரில் தமிழில் எந்தப் படமும் ரஹ்மான் இசையில் இந்தாண்டு வரவில்லை. இரு ஹிந்தி படங்களும், ஒரு ஆங்கிலப் படமும் வெளியாகின. அதில் டெல்லி – 6 பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றன. ஆங்கிலத்தில் வெளியான ‘கப்பிள்ஸ் ரெட்ரிட்’ பாடல், 2010ஆம் ஆண்டு ஆஸ்கரில் பரிந்துரை லிஸ்ட்டில் இடம் பிடித்தது.

2010

எங்கயா போனாரு?’ன்னு தமிழர்கள் ரஹ்மானைத் தேடிக்கொண்டிருந்த போது, 2010இல் பெரும் விருந்தோடு திரும்பி வந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன் எனத் தமிழின் அனைத்து வகை ஆடியன்ஸுக்கும் திருப்தியளிக்கும் இசை படைத்தார். ஸ்லம்டாக் மில்லியனர் இயக்குனர் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திலும் இசையமைத்தார். இந்தச் சமயம், ரஹ்மான் இசையில் வேறொரு பக்கத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றார். இது அவருடைய இன்னொரு பரிணாமத்தைக் காட்டியது. நெகிழ்வடையச் செய்யும் இசையை அடிக்கடி அளித்தார். மொத்தத்தில் 2010இல் வேறொரு ரஹ்மானாக மாறினார். இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மபூஷன்’ இந்தாண்டு ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

2011

127 ஹவர்ஸ், திரும்பவும் ஆஸ்கர் கதவைத் தட்டிவிட்டு வந்தது. உலகப் பயணங்கள் பல அவருக்கு இருந்தன. விளையாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் தீம் இசை அமைத்துக்கொடுத்தார். ஹிந்தியில் வெளிவந்த ‘ராக்ஸ்டார்’ ஹிந்தி இசை ரசிகர்களைப் பித்துப்பிடிக்கச் செய்தது. தொடர்ந்து வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்திக் கொண்டு வருகிறார். அதுவும் மிகத் தேர்ந்த திட்டமிடலுடனும், தரத்துடனும் அமைந்திருக்கும். 2015இல் சிகாகோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்ட வீடியோ, இங்கு உங்கள் பார்வைக்கு.

2012

கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா” ஹிந்தியில் அவரால் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது. மணிரத்னத்தின் ‘கடல்’ படமும் இந்தாண்டு வெளிவந்தது. இரண்டுமே வெற்றிப்பெறவில்லை. சக்திஸ்ரீ பாடிய ‘நெஞ்சுக்குள்ளே’ சொக்க வைத்தது. வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரரான சித் ஸ்ரீராம், இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். ஷாருக்கான் நடிப்பில் யாஷ் சோப்ரா இயக்கத்தில் வந்த ‘ஜப் தக் ஹே ஜான்’ ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2013

இந்தாண்டு மரியான், ராஞ்சனா என இரண்டுமே தனுஷ் படங்களாக ரஹ்மானுக்கு அமைந்தது. மரியான் படத்தை அவருடைய ஆரம்பக்கால நண்பரான பரத்பாலா இயக்கியிருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் குட்டி ரேவதி, கபிலன் ஆகியோருடன் இணைந்து பாடலாசிரியராகவும் தனது பங்கை அளித்தார். ஹிந்தியில் தனுஷ் அறிமுகமாகிய ராஞ்சனா படத்தின் வெற்றிக்கு ரஹ்மானின் இசை முக்கியப் பங்காற்றியது.

2014

இரண்டாயிரத்திற்குப் பிறகு அமைந்த இயக்குனர் கூட்டணிகளில் இம்தாஸ் அலி முக்கியமானவர். ரஹ்மான் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் படங்களை இயக்கி வருபவர். கதையின் களம் பஞ்சாபைத் தாண்டிச் செல்லும் வகையில் இருந்ததால், பஞ்சாப் இசைக்கூறுகள் இருக்கும்படி இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் ரஹ்மான். இதுபோல் தமிழில் அக்கால நாடக உலகினைக் களமாக அமைத்து வெளிவந்த வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்திலும் சில புது முயற்சிகள் செய்திருந்தார். ஐ, கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களும் தமிழில் இந்தாண்டு வெளிவந்தன. ‘யாருமில்லா தனியறையில்’, ‘என்னோடு நீ இருந்தால்’ ஆகிய பாடல்கள் மனதை மயக்கின.

2015

‘ஓ காதல் கண்மணி’யில் மணிரத்னம், ரஹ்மான இருவருமே இளமைத்துள்ளலுடன் திரும்ப வந்தனர். வைரமுத்து வெளியூர் சென்றிருந்த காரணத்தால், ரஹ்மானும் மணிரத்னமும் இணைந்தே ‘மெண்டல் மனதில்’ பாடலை எழுதி, அது இளைஞர்களிடம் பெரும் வெற்றியைப் பெற்றது. ‘பறந்துச் செல்ல வா’ பாடலை ஐ-பேட் ஆப் லூப் மூலமே இசையமைத்தார். இது எல்லாம் இருந்தாலும், கர்நாடக இசையில் இருந்த ‘மலர்கள் கேட்டேன்’, ‘நானே வருகிறேன்’ பாடலும் பலரைக் கவர்ந்தன. ரஹ்மானின் மகன் அமீன் இப்படத்தில் ‘மௌலா’ என்ற அரபிப்பாடலைப் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் ரஹ்மான் உலகப்புகழ் பெற்ற இரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய முகமது என்ற படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

2016

கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்கள் தமிழில் வெளிவந்தன. ஆங்கிலத்தில் பீலே குறித்த பயோகிராபிக் படமும், ஹிந்தியில் ‘மொகஞ்சதரோ’ குறித்த வரலாற்றுப்படமும் வெளியாகின. இதில் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

2017

இந்தாண்டு இதுவரை தமிழில் வெளிவந்த படம் – மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’. ஹிந்தியில் ஓகே கண்மணியின் ரீமேக்கான – ஓகே ஜானு. இன்னும் சில வாரங்களில் மெர்சல் ரிலீஸாக உள்ளது. அடுத்து 2.0, சங்கமித்ரா என வரிசையாகப் பெரிய பட்ஜெட் படங்கள் வர உள்ளன.

ரஹ்மானின் இந்த 25 ஆண்டு இசைப்பயணத்தில் ஏற்றமும் இறக்கமும் இரண்டுமே இருந்துள்ளன. ஆனால், அவரது படைப்புகளில் உள்ள தரத்தில் என்றும் ஏற்றம் மட்டுமே. அவரது இசையில் எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் கூட, அவரது குணத்தில் மயங்கினார்கள். எளிமை, எந்தச் சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் இருப்பது, யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது போன்றவை மற்றவர்களை இன்ஸ்பையர் செய்யும் குணங்கள். 25 இல்லை, 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த விஷயத்தில் ரஹ்மான் மாறப் போவதில்லை. நாமும் அவர் இசையின் மீது கொண்டுள்ள ஈர்ப்பைக் குறைத்துக் கொள்ளப்போவதில்லை.

  • சரவணகுமரன்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad