அனாமதேய ஆபத்து
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இணையங்களிலும், சமூகத் தளங்களிலும் காட்டுத் தீயெனப் பரவிவரும் சொல் ‘சரஹா’. இது புதிய சமூகப் பிணையப் பயன்பாட்டு மென்பொருள் (Social networking apps / Social networking software). வாட்ஸப், ட்விட்டர், ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட் போன்று பல பயன்பாட்டு மென்பொருட்கள் இருக்கும் பொழுது, இதென்ன புதுசா சரஹா?
சரஹா (Sarahah)
சவூதி அரேபியரான, ஜெயின் அல்-அபிதின் டாஃபிக் சரஹாவை உருவாக்கியுள்ளார். அரேபிய மொழியில் ‘சரஹா’ என்றால் வெளிப்படை, நேர்மை என்று பொருளாம்.
ஒருவரைப் பற்றிய நேர்மையான, வெளிப்படையான கருத்துக்களைத் தெரிவிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் இது. ஒரு சின்ன ட்விஸ்ட் என்னவென்றால், கருத்தைத் தெரிவிப்பவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளத் தேவையில்லை.
‘நம்மளை எல்லாம் ஆபிஸ் நேரத்திலே ஃபோன் பேசாதீங்க, இன்டர்நெட் யூஸ் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு அந்தாளு மட்டும் இன்டர்நெட் பாக்கறான்யா! மேனேஜர்னா என்ன வேணா பண்ணலாமா? இதைக் கேக்குறதுக்கு ஆளேயில்லையா?’
‘அவ நெஜமாவே எல்லாம் தெரிஞ்ச ‘அப்பா டக்கரா’ இருக்கலாம் … அதுக்காக மத்தவங்க எல்லாரையும் கொறச்சு எடைபோடக் கூடாதுல்ல .. இதை நான் அவகிட்ட சொன்னா அனாவசியமா சண்டை தான் வரும்..’
இது போன்ற, பூனைக்கு யார் மணி கட்டுவது சிக்கல்களைத் தீர்த்து வைப்பது தான் இம்மென்பொருளின் நோக்கம். அதாவது உங்கள் தோழனோ, தோழியோ வைத்திருக்கும் சரஹா பயனர்ச்சொல் தெரிந்தால் போதும். நீங்கள் அவரிடம் நேரிடையாகச் சொல்லத் தயங்கும் தகவலை, அனாசயமாகத் தட்டி விடலாம். அவருக்குச் செய்தியை யார் அனுப்பினார்கள் என்று தெரியவே தெரியாது.
நமக்கு வாட்ஸ்அப்பில் யாராவது தகவல் அனுப்பினால், அதை அனுப்பியவரின் தொலைபேசி எண் நமக்குத் தெரியும்; டிவிட்டரில் பயனாளர் முகவரி தெரியும்; மின்னஞ்சலில் மின்னஞ்சல் முகவரி தெரியும். நேரில் போய் சண்டை பிடிக்கலாம் அல்லது வண்டி வண்டியாகத் திட்டி பதில் அனுப்பலாம். சரஹாவில் அது முடியாது. தகவல் அனுப்பியவர், தகவலோடு தன் பெயரை எழுதுமளவுக்கு வெள்ளந்தி இல்லை என்றால் யார் அனுப்பியது என்று தெரிந்துகொள்ளவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் தகவல் அனுப்புபவர்கள் சரஹா அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கிட்டத்தட்ட மொட்டை கடிதம் போன்றது தான் இது.
அலுவலகங்களில், ஆண்டுதோறும், சக ஊழியர்களின் செயல்பாட்டுத் திறன் பற்றிய மதிப்பீடுகளைச் செய்திருப்பீர்கள். அது போலவே தாம் வேலை செய்த நிறுவனத்தின் நிறைகுறைகளை, நிறுவனத்தினரிடம் மறைமுகமாகத் தெரிவிக்க டாஃபிக் உருவாக்கிய மென்பொருள் தான் சரஹா. இதுவே இன்று ஐ-ஃபோன், ஆண்ட்ரியாடு தொலைபேசிகளில் இயங்கும் பயன்பாட்டுக் குறுநிரலாக (app) வடிவெடுத்துள்ளது. நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் அறிய விரும்பினால் ஐ-ட்யூன்ஸ் அல்லது ப்ளே ஸ்டோரில் இக்குறுநிரலை தரவிறக்கம் செய்து, பயனர் முகவரி தயாரித்து முகநூல், வாட்ஸப், ஸ்நாப்சாட் போன்ற ஏதோவொரு சமூக ஊடகம் வழியே மற்றவரோடு பகிர்ந்துக்கொள்ளலாம். அவர்கள் இந்தக் குறுநிரலைத் தரவிறக்கம் செய்யாமல், பயனர் முகவரி எதுவுமின்றி உங்களைப் பற்றி எழுத முடியும். அதே போல் நீங்களும் மற்றவரின் சரஹா முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். உங்களது அடையாளம் மற்றவருக்குத் தெரிவிக்கப்படாது. ஐ-ஃபோனிலும், ஆண்ட்ராய்டிலும் இதை நிறுவிக்கொள்ள கட்டணமெதுவும் கிடையாது.
அண்மையில் இந்தியாவில் வெளியான இந்த ‘ஆப்’ இளைஞர்களிடையே, குறிப்பாகப் பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கானோர் இந்தக் குறுநிரலைத் தங்கள் ஃபோன்களில் தரவிறக்கம் செய்துள்ளனர்.
வெளிப்படையாகப் பயனர் முகவரி தெரிவிக்க வேண்டிய பல சமூக ஊடகங்களிலேயே, பொய்யான பெயரில் கணக்குத் துவங்கும் பலர் இருக்கிறார்கள். ஆபாசச் செய்திகள், படங்கள், தரக்குறைவான செய்திகள் அனுப்புவது இவர்களது வாடிக்கை. சரஹா இது போன்ற சமூக அவலங்களை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சுகிறார்கள் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்று ‘ஆஸ்க்’ (askfm), ‘விஸ்பர்’ (whisper), ‘இக்யாக்’ (yikyak), ‘ஆஃப்டர் ஸ்கூல்’ (after school) போன்ற குறுநிரல்கள் தோன்றி வலம் வந்தன. இதைப் பயன்படுத்தத் துவங்கிய இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவர் கேலி, சீண்டல், கிண்டல், அலம்பல் தாங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
சரஹாவில் எந்தவிதமான பேரண்ட் கண்ட்ரோல், ஃபில்டர், டிராக்கிங் வசதிகள் தற்போது கிடையாது என்றாலும், வரும் காலங்களில் தேவையென்றால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளும் சேர்க்கலாம் என்கிறார் டாஃபிக்.
புதிதாக வந்த குறுநிரல் என்னிடம் இல்லையென்றால் அவமானம் என்று அவசரப்படாமல், நிஜமாகவே இது நமக்குத் தேவைதானா என்பதைப் புரிந்து கொண்டு பயன்படுத்துங்கள். உங்களது பிள்ளைகள் தொலைபேசியில் குறுநிரல் பயன்படுத்துபவராயின், சரஹாவின் சாதக பாதகங்களை அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லுங்கள். எண்முறை தூஷணம், எண்முறை நிந்தனை (digital abuse) பெருகி வரும் காலத்தில் இது போன்ற புதிய மென்பொருட்களை நாம் மிகவும் கவனத்தோடும், பொறுப்போடும் அணுக வேண்டியது அவசியம்.
– ரவிக்குமார்.
Tags: Sarahah, ஆண்ட்ராய்டு, ஐஃபோன், சரஹா