வட அமெரிக்கத் தமிழ்த் தெருவிழா (Tamil Fest-Scarborough’s largest street festival)
நடுத்தெருவில் குத்தாட்டம் வேண்டுமா, கொம்பனாட்டம் வேண்டுமா, இல்லை சிலம்பாட்டம் வேண்டுமா? அல்லது பாட்டுக் கேட்டு ஆடணுமா, மெட்டுப்பாட்டு முணுமுணுக்கணுமா எல்லாமே உண்டு இந்தத் தமிழர் தெருத் திருவிழாவில்.
கனேடியத் தமிழ் மக்களின் தரமே வட அமெரிக்காவில் ஒரு தனி விசேடம். ஏறத்தாழ 300,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வாழும் ரொன்ரோ மாநகரில் ஸ்கார்பரோ பகுதியில் மூன்றாவது வருடமாக நடைபெறும் கனேடியப் பண்டிகை இது.
இந்தப் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஊர்க் கோயில் உற்சவங்கள் போன்று, சிறுவர் முதல் பெரியோர் வரை யாவரும் வந்து பங்குபெற்றுக் களிப்புற, கனேடியத் தமிழர் வர்த்தகப் பேரவை, மற்றும் தமிழ் வர்த்தக தாபனங்கள் பெருமளவில் முனைந்து சகல வசதிகளையும், செளகரியங்களையும் அமைத்துத் தந்துள்ளனர்.
மார்க்கம் வீதி (Markham Road) எனப்படும் பெரும் வீதியில், ஒருபுறம்
பாரியமேடைகளும், மறுபுறம் குழந்தைகள் மகிழ பல விளையாட்டு மேடைகளும் நிரப்ப, மத்தியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட மைய மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்ட சேவல் குத்து விளக்குகள் அமைந்திருந்த மேடையை உள்ளுர் வானொலி பிரபலங்கள் அமைத்திருந்தனர்.
தமிழர் உணவுக்கு இந்தத் தெருவிழாவில் பஞ்சமேயில்லை. இளநீர் தொட்டு, கமகமக்கும் தோசைகள், ஆப்பம், உரொட்டிகள், பலவகையான யாழ்ப்பாண ஐஸ்க்ரீம்கள், ஃபலூடாக்கள், விதவிதமான சிற்றுண்டிகள், பாரம்பரிய கூழ் வகைகள்- அப்பப்பா கடல் போன்று தமிழர் விரும்பும் உணவு வகைகள்.
ஆடைகள்,அணிகலன்கள், மற்றும் இதர பொருட்களின் விற்பனைக் கூடங்கள் பலவும் – மார்க்கம் வீதியின் இரு பக்கங்களிலும், ஆங்காங்கே தெரு மத்தியிலும் நிரம்பியிருந்தன.
மற்றொரு சிறப்பம்சமாக ரொன்ரோ கனேடியத் தமிழ் பொலீஸார் அணியினரைக் குறிப்பிடலாம். மிகவும் பொறுப்பு மிகுந்த போலிஸ் பாதுகாப்புச் சேவையில் பல தமிழ் யுவ , யுவதிகளும் அருமையாக பங்கேற்று, தம் மக்களிடையே கலந்துரையாடி, குழந்தைகளுக்கு ஓட்டிகள் (stickers) கொடுத்துப்பழகினர்.
சென்ற கால் நூற்றாண்டில், வட அமெரிக்கத் தமிழர்கள், தாம் குடி புகுந்த நாடாகிய கனேடிய மண்ணில் பற்பல துறைகளிலும் இணைந்து, முன்னேற்றம் அடைந்து சிறப்பாகப் பங்கு பெறுகின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும் .
Tamil Fest – 2017
இந்தப் பெருவிழாவிற்குத் தமிழர் மட்டுமல்லாது, பல உள்ளுர் கனேடிய மக்களும், நலன்புரி அமைப்புக்களும், ஏன் உள்ளூர் அரசியல்வாதிகளும் கூடாரம் இட்டு மக்களைச் சந்தித்துப் பேசுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்விழாவிற்கு, சென்ற வருடம் ஏறத்தாழ 170,000 மக்கள் வருகை தந்தனர். இவ்வருடமும் இதை விட அதிக மக்கள் வர சாத்தியம் உண்டு என்பது ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை விழாவிற்கு, சாரை சாரையாக வந்த வட அமெரிக்க மக்கள் கூட்டமே ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஒட்டு மொத்தத்தில் வட அமெரிக்கத் தமிழர் சிறப்பிற்கு இந்த வகையான தெருவிழா மிகவும் வெற்றிகரமான ஒரு எடுத்துக் காட்டு எனலாம்.
- யோகி அருமைநாயகம்