மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்
காதல், காதல், காதல்,
காதல் போயின் சாதல்
என்றான் ஓர் கவிஞன்
கவிதைக்குப் பொய் அழகு
என்றான் இன்னொரு புலவன்
அன்னையும், பிதாவும் முன்னறி
தெய்வம் என்றார் ஒருவர்
இன்று அந்த உறவு கடல்
கடந்து போய் விட்டது
கணினித் தொடர்புடன்
இந்தியாவின் இதயம்
கிராமங்களில் என்றார் ஒரு கிழவர்
அந்த இதயத்தை விட்டு
நகர்ந்து வருபவர்தான்
இன்று நான் காணும் தலைமுறை
மனதை ஒருமிக்க மதம்
என்றனர் ஆன்றோர்
ஆனால், மதத்தின் பெயரால்
மதம் பிடித்து அலைவோர்
அன்றோ நாம் இன்று காண்போர்
ஆலயம் தொழுவது சாலவும்
நன்று என்றனர்; நன்று ,
இன்று ஆலயங்கள் பல
ஆடம்பரத்தின் அடையாளங்கள்
என்று ஆனது ஏன்?
குடும்பம் ஒரு கோவிலாம்
இன்று அந்தக் கோவில்கள்
குறுகி விட்டன, ஆனால்,
கோவில்கள் பல்கிப்
பெருகி உள்ளன பலவிதமாய்
எது காதல், எது காமம்?
எது பொய், எது நிஜம்?
எது குடும்பம், எது கோவில்?
எது அறிவு, எது ஆன்மிகம்?
எது மதம், எது மானுடம்?
சொல்லுங்களேன் எனக்கு!
ஜி. சுவாமிநாதன்