அறிவுள்ள காகம் !
காகம் ஒன்று பறந்து திரிந்தது
கோடை வெயில் தீயாகச் சுட்டது
தாகம் தீர்க்க அலைந்து வாடியது
காகம் குடிநீருக்காகத் தவித்தது !
குளம் குட்டையெல்லாம் சுற்றியது
களைப்பில் மரத்தில் நின்றது
எல்லாமே வறண்டு கிடந்தது
தாகம் தீர்க்கத் தண்ணீர் எங்கே ?
காகம் அங்கும் இங்கும் பறந்தது
கூரை மீது நின்று பார்த்தது
குடிசை அருகே சிறு மண்பானை
குடிக்கத் தண்ணீர் இருந்தது !
அக்கம் பக்கம் பார்த்து விட்டு,
பானையின் மேல் அமர்ந்தது
பானையினுள் அலகை நுழைத்தது
பருக நீர் எட்டாமல் ஏமாந்தது !
காகம் சுற்றும் முற்றும் பார்த்தது
காகித உறிஞ்சு குழல் கிடந்தது
தாகம் தீர்க்க வழி கிடைத்தது
காகம் குழலைக் கவ்வியது !
குழலைப் பானையில் நுழைத்தது
குழந்தைபோல் காகம் மகிழ்ந்தது
குழல் மூலம் நீரை உறிஞ்சியது
குடிநீரை மகிழ்வுடன் அருந்தியது !
அங்கும் இங்கும் மீண்டும் பார்த்தது
அலகில் கவ்விய குழலைப் போட்டது
அலைந்த காகத்தின் தாகம் தணிந்தது
மகிழ்வுடன் சிறகடித்துப் பறந்தது !
சிறுவர்களே ! அறிவுள்ள காகத்தின்
செயலைப் பாருங்கள் – நீங்களும்
சிந்தித்துச் செயல் புரியுங்கள்
வெற்றிக் கனியைப் பறிக்கலாம் !
பூ. சுப்ரமணியன்,