இளைஞர்களே இனி அவசரம் வேண்டாம்..!
இன்றிருக்கும் இளைஞருக்கு ஈடில்லா அவசரம்..
இல்ல மொன்றிருப்பதை யுமறவே மறந்தனர்.!
என்றும் மெல்லத் தூங்கியே எழுவர்…எழுந்தபின்..
வெல்லத்தான் நினைப்பார் எதையும் எளிதில்,!
ஒருவரியில் முழுவதையும் படிப்பதிலே அவசரம்.!
படித்து முடிப்பதற்குள் படுக்கச்செல்ல அவசரம்.!
பருவம் வருமுன்னே பாழுங்காதலிலும் அவசரம்.!
பணிசெய்யும் இடத்திலே பதவிக்கும் அவசரம்.!
சிட்டாகப் பறக்க வேண்டுமெனும் எண்ணம்..
எந்நாளும் வேண்டா மெனும்நிலை வேண்டும்.!
மொட்டாகும் முன்னே பூப்பூக்க நினைத்தால்..
பூவுலகில் எல்லாமே தலைகீழாய் மாறிடாதோ.!
கட்டான இளைஞரின் கட்டுக்கடங்கா வேகமது..
காதல் கனிந்திருக்கும் வரைப் பொறுப்பதில்லை.!
கட்டும்தாலியை அவசரத்தில் முடிந்து விட்டால்..
காலமுழுதும் துன்பத்தில் கொண்டு விடுமப்பா.!
விதிமீறி வீதியில் காட்டும்வாகன வேகமுன்..
விதியைச் சடுதியில் முடியுமாறு எழுதிவிடுமப்பா.!
பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழத்தான்..
பக்குமாய் மதிகொண்டுநீ செயல்பட வேண்டும்.!
வேகமென்பது தேவைதான் எனினும்..எதிலும்..
விவேகமும் அதிலே சேர்ந்திருத்தல் நலமப்பா.!
மேகம் ஓடுவதைப் போல மிதமான..
வேகமே…நீசெயும் செயலைச் சிறப்பாக்கும்.!
புரட்சியை உண்டாக்கு முன்னிளரத்தம்…அது..
பக்குவமாய் ஓடயுன்னுள் பொறுமை வேண்டும்.!
குரங்குபோலத் தாவுகின்ற வாலிப வேகத்தை..
குறிப்பிட்ட இடத்தில் சிறைவைப்பதே விவேகம்.!
– பெருவை பார்த்தசாரதி