மினசோட்டா தலைமையக மறுதிறப்பு (Minnesota Capitol Reopening)
முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மினசோட்டாவின் தலைமையகத்தில் 2013இல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இருக்கைகளை அதிகரிப்பது, பொதுமக்களுக்கான புதிய கலந்துரையாடல் அறைகள் அமைப்பது, கழிப்பறைக் கட்டுமானங்கள், புதிய விருந்தினர் மையம் எனப் பல விஸ்தரிப்பு வேலைகள் நடைபெற்றன. இதற்காகச் சுமார் 310 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இச்சமயத்தில், கட்டிடத்தின் சில பகுதிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன.
இம்மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி, பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தலைமையகம் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இதையொட்டி வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களும் இங்கு பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, திறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
யோகா, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், வான வேடிக்கை என மூன்று தினங்களும் குதூகலமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. 112 வருடங்களுக்கு முன்பு, இது முதன் முறையாகத் திறக்கப்பட்டபோது, இது போல் விழா ஏதும் இல்லாமல் ஆரவாரமில்லாமல் திறக்கப்பட்டதாம். அது போல் இல்லாமல், இம்முறை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.
மூன்று தினங்களும் பொதுமக்கள் பார்வைக்கு இக்கட்டிடம் காலை 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை திறந்து இருந்தது. உள்ளூர் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இனி வரும் நாட்களிலும் ஆர்வமுள்ளோர் இங்கு சென்று உள்ளே சுற்றிப் பார்வையிடலாம். திங்கள் முதல் சனி தினங்களில் காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையிலும், ஞாயிறு அன்று மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரையிலும் இங்கிருக்கும் வழிகாட்டியுடன் இக்கட்டிடத்தை உலா வரும் வசதி உள்ளது. இது ஒரு இலவச சேவையாகும்.
கடந்த நான்கு வருடங்களாகத் திரைமறைவில் இருந்த மினசோட்டாவின் தலைமையகம், இப்போது புதுப்பொலிவுடன் கம்பீரமாக நிற்பதைக் காண்பதில் உள்ளூர்வாசிகளுக்குப் பெருமகிழ்ச்சி தான்.
MN Capitol reopen – 2017
– சரவணகுமரன்