அஷ்டவிநாயகா பிரதிஷ்டை
ஹரி ஓம் வாசகர்களே!
மின்னசோட்டாவில், சாஸ்கா நகரில் உள்ள சின்மயா மிஷன் நிறுவனத்தின் பெயர் சின்மய கணபதி. பெயருக்கேற்ப இந்த அமைப்பின் பிரதானக் கடவுள் கணபதி ஆகும். ஒவ்வோர் ஆண்டும் இங்கே ஹிந்துப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இங்கே பால விஹார் என்னும் குழந்தைகளுக்கான ஹிந்து கல்விக் கூடமும் இருக்கிறது. அந்தக் குழந்தைகளும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்பர். இந்தப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து, செப்டெம்பர் மாதத்தில் துவங்கும். விநாயகர்ச் சதுர்த்திக் கொண்டாட்டங்களுடன் தொடங்கி வைப்பர்.
அஷ்டவினாயகா
இந்த ஆண்டு இந்த மையத்திற்குக் கூடுதலான சிறப்புஅஷ்ட விநாயகரின் பிரதிஷ்டை ஆகும். இந்தியாவில், மும்பை நகரில் அஷ்டவிநாயகா எனும் எட்டு விநாயகர் கோவில்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. அவை அனைத்தும் சிற்பிகள் கை படாமால் தானாகவே அமைந்தவை [ஸ்வயம்பு] ஆகும். இந்த எட்டு விநாயகர்கள் பெயர்கள் :
மொரேஸ்வர்
சித்திவிநாயக
பல்லாலேஸ்வர்
வரதவிநாயக
சிந்தாமணி
கிரிஜாத்மஜ
விக்னேஸ்வர
மஹாகணபதி
அஷ்ட விநாயகாப் பிரதிஷ்டையின் காரணமாக, இந்த ஆண்டு விநாயகச் சதுர்த்தி நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 23ம் திகதி துவங்கி 26 வரை இந்த விழா நடைபெற்றது. ஹிந்து மந்திரின் ஆச்சாரியர்களான ஸ்ரீ முரளி பட்டர் மற்றும் ஸ்ரீகோவர்த்தன மயூரம் ஆகிய இருவரும் இங்கு வந்திருந்து சோடச பூஜை நடத்தி வைத்தனர். கோவில் சிற்பிகள் சிலைகளை ஸ்தாபனம் செய்தனர். இந்தச் சிறப்பு வழிபாட்டுக்கென, பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சன்யாசிகள் வந்திருந்தனர். அதிலும் பிரதான சன்யாசிகள் சுவாமி ஈஸ்வரானந்தஜி, சுவாமி ஷரணானந்தஜி, சுவாமி அத்வைதானந்தஜி, சுவாமி பாராத்மானந்தாஜி ஆகியோர் வந்திருந்து குறிப்பித்தக்கது. அவர்கள் பக்தர்களுக்குத் தினமும் ப்ரவசன் அளித்தனர்.
அதன் பிறகு, பால விஹாரில் பயிலும் மாணவர்கள் நாடகம், பாடல், நடனம் எனப் பல வித நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றிப் பக்தர்களை மகிழ்வித்தனர். இந்தக் கோவில் ஓவ்வொரு செவ்வாய்க் கிழமை மாலையும் பொது மக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் அனைவரும் சென்று, வழிபட்டுப் பயனடையலாம்.
– தொகுப்பு: பிரபு ராவ்.