எழுத்தறிவித்த இறைவன்
எழுந்து நடந்திட இயன்றிடாப் பாலகனை
எழுச்சித் தலைவனாய் மாற்றிட்ட சிற்பியவர்…
எழுமையிலும் பணிந்து வணங்கிட மறக்கத்தகா
எழுத்து அறிவித்த இணையிலா இறைவனவர் …..
பிதற்றலாய்த் தொடங்கிய பேதையின் வாழ்க்கையை
பிறர்போற்றி வாழ்த்திடும் வகைமாற்றிய வித்தகரவர்…..
பிழைப்பினை நடத்திடப் பிறர்கையை நம்பிவாழும்
பிணிபோக்கி தன்னம்பிக்கை ஊட்டிய தலைவரவர்…..
தவழ்ந்து வருதலும் தன்னால் ஆகாதென்ற
தரக்குறை நிலைமாற்றித் தருக்காய்ச் சமைத்தவரர்…..
தன்னலம் கொண்ட மாந்தர்கள் நிறைந்த
தரணிதனில் பிறர்க்கெனத் தனையுருக்கும் மெழுகானவர்……
வாயில் வைத்த விரலதனைச் சுவைத்துவாழும்
வாழ்க்கையே நிலையென இருந்த மழலைதனை
வானுயரச் சேர்க்கும் வழிவகை கற்றுணர
வாய்ப்புகள் பலசமைத்து வாழ்நெறி புகட்டியவரவர்…..
ஏற்றம் பலபெற்றுயர எல்லாரும் முயல்கையிலே
ஏணியாய்த் தானிருந்து ஏனையோரை ஏற்றிவிட்டவர்…..
ஏதிலார்க் குற்றமெல்லாம் எளிமையாய் மன்னித்து
ஏதுவரினும் தடம்மாறா ஏற்றமிகு பண்பாளரவர்…..
அன்னையின் தியாகமோ அவனியில் அரிதன்று..
அவள்உதரம் உதித்தவர்க்கு அவள்தருதல் வியப்பன்று
அவையேதும் இல்லாமல் அவர்நலமும் நினையாமல்
அன்பொன்றே கொள்கையாய் அமைந்திட்ட சிவமவரே…
ஈன்று புறந்தந்த இன்னுயிர்த் தந்தையவர்
ஈந்து காத்திடும் இன்செயலும் அரிதன்று..
ஈகைத் திறமெனும் இனிமைக் குணமொன்றால்
ஈனப் பிறவிகளையும் இன்முகத்தோடு வளர்த்தவரவர் ….
உடன் பிறந்த உயிர்க்கொடிப் பிணைப்புக்கள்
உறவுகளின் உயர்வுக்கு உழைத்தல் உயர்வன்று…
உறவென்று ஏதுமின்றி ஊதியமும் நினைப்பின்றி
உலகத்தோர் உய்வதற்கு உழைத்திடுமவர் உன்னதமானவர்….
காலம் முழுவதும் காலடியில் சமர்ப்பித்தலும்
காரியம் அனைத்திற்கும் காரணியெனப் பணிதலும்
காணக் கிடைத்திடாக் கடவுளெனத் தொழுதலும்
காட்டிடும் நம்மனம் கிடந்துழலும் நன்றியினை !!
ஆசிரியர் அவர்தாளை அன்புடனே தொழுது
ஆசிரியர் அவர்புகழை அவனியெங்கும் இயம்பி
ஆசிரியர் அவர்தியாகம் அனுதினமும் நினைத்து
ஆசிரியர் தினமிதனில் அளித்திட்டோம் நம்வணக்கம் !!!
– வெ. மதுசூதனன்.