மினசோட்டா மாநிலச் சந்தை 2017
மாநில அந்தஸ்தைப் பெற்ற ஆண்டான 1859 துவங்கி, மினசோட்டாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெருவிழா மினசோட்டா மாநிலச் சந்தை.
அடிப்படையில் மினசோட்டா வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டு வளர்ந்த மாநிலம். விளைபொருட்கள், கால்நடைகள் போன்ற வேளாண்மை அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், விற்கவும் உருவான சந்தை இது. துவக்கத்தில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தச் சந்தை,பின்னர் மினியாபொலிஸ், செயிண்ட் பால் என இரு நகரங்கள் சந்திக்கும் ஸ்நெல்லிங் அவென்யூவில் நிரந்தரமாக நடைபெற, சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
காலப்போக்கில் சிறுவர் சிறுமியர் விளையாடவும், பொழுது போக்கவும் பல அம்சங்கள் சேர்ந்துகொண்டுவிட ‘மினசோட்டா மாநிலச் சந்தை’ பொதுப் பொருட்காட்சியாக உருவெடுத்துள்ளது. சரியாக 12 நாட்கள் மட்டுமே நடைபெறும் இத்திருவிழா, செப்டம்பர் மாதத்தின் முதல் திங்களன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தன்று நிறைவடையுமாறு வடிவமைக்கப்படுகிறது. அவ்வகையில் இந்தாண்டு, இத்திருவிழா ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்தச் சந்தையின் சிறப்பம்சம் நடந்து கொண்டே சாப்பிடும் வகையில் இங்கு குச்சிகளிலும், சிறு பொட்டலங்களிலும் கிடைக்கும் தின்பண்டங்களே.
ஏறத்தாழ 350 சிறு சிறு துரித உணவகங்கள் 500 வகையான தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றன. இந்தாண்டு, முன் எப்போதும் இல்லாத வகையில் இரண்டு மில்லியன் மக்கள் வருகை தர வாய்ப்புள்ளது எனக் கணிக்கின்றனர்.
கேளிக்கை, இசை நிகழ்ச்சிகள், இராட்டினங்கள், சறுக்கு மரம், அணிகலன்கள், அலங்காரக் கடை என நம் கிராமத் திருவிழாக்களை நினைவூட்டும் விழா இது.
இந்தாண்டு விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக:
Statefair 2017
- தொகுப்பு: ரவி
- படத்தொகுப்பு: லாரென்ஸ்