\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கொலு பொம்மை

Filed in கதை, வார வெளியீடு by on September 10, 2017 0 Comments

நீ ஆத்தப் பாத்துக்கோடா… நான் ஒரு இரண்டாத்துக்குப் போய், குங்குமம் வாங்கிண்டு வந்துடறேன்”…. அம்மா சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானாள்.

“அம்மா, என்னம்மா.. என்னப்போய்… இது பொம்மனாட்டிகள் சமாச்சாரம்..யாராவது வந்தான்னாக்கா நான் என்ன பண்ணுவேன்??” என்று இழுத்த கணேஷைப் பார்த்து, “நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேண்டா.. அதுக்குள்ள யாரும் வரமாட்டா.. அப்டியே வந்தாலும் உக்கார வை, நான் வந்துடறேண்டா” சொல்லிக்கொண்டே அவன் பதிலுக்கும் காத்திராமல் வெளியேறினாள் மங்களம் மாமி.

”அம்மா, அம்மா” என்று தான் கத்திக் கொண்டிருப்பதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் காம்பவுண்ட் கேட்டைத் தாண்டிச் செல்லும் அம்மாவைக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ். “சே…. என்ன கர்மண்டா.. எவன் கண்டுபிடிச்சான் இந்த நவராத்திரி, கொலு, அது கிதுன்னு…. எவ்வளவு டைம் வேஸ்ட்.. நேத்து வரைக்கும் பலகையை எடு, படியைக்கட்டு, கயிறைக் கட்டு, லைட்டை மாட்டு.. மணலெடுத்துண்டு வா.. விதைநெல்லை ஊறப்போடு… அது கிதுன்னு கழுத்தறுத்தா… இன்னைக்கு அவா வேற ஆத்து கொலு பாக்கப் போனா நான் நம்மாத்துக்கு வரவாளப் பாத்துக்கணுமாம்… என்ன கொடுமை இது….” மனதில் கருவிய வண்ணம் சோஃபாவில் சென்று அமர்ந்தான். தொலைக்காட்சியை ஆன் செய்து, மனதில் ஒட்டாமல் ரிமோட் எடுத்துச் சேனல்களை மாற்றத் தொடங்கினான்.

மாமீ…….. மாமீ…… ஆத்துல யாரும் இல்லயா?”… டி.வி. பார்த்துக் கொண்டே சற்றுக் கண்ணயர்ந்த கணேஷை எழுப்பியது இந்தக் குரல்.. அந்தப் பெண்ணின் குரல் தேனினும் இனிய குரல் என்று சொல்ல வேண்டும்.. ஆனாலும் பெண்களுக்கான கொலுவைக் காவல் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட எரிச்சல் தொனிக்க, “யாரு… யாரங்க…” என்று உள்ளிருந்து கொண்டே குரல் கொடுத்தான். “மங்களம் மாமி ஆத்துல இல்லயா?” பெண் விடுவதாக இல்லை. அந்தக் குரலிலிருந்த விடாப்பிடித் தனத்தை உணர்ந்த கணேஷ், எழுந்து வெளியே வந்தான். வீட்டில்தான் இருக்கிறோம் என்பதால் லுங்கி மட்டும் அணிந்து, மேல் பகுதி வெற்றுடலாய் இருந்தான். பூணலணிந்து சற்று நோஞ்சானான உடம்பு இருபது வயது இளைஞனைப் பதினாறு வயது போல் காட்டிக் கொண்டிருந்தது. வெளியில் வந்தவுடன் நின்றிருக்கும் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் அதிசயத்தில் வாயடைத்துப்போய் நின்று விட்டான்.

வெண்ணிற தாவணி, பச்சை நிறப் பாவாடை அதற்கு மேட்சிங்காக பச்சை நிறத்திலேயே ரவிக்கை. போட்டிருந்த ஒற்றை ஜடையின் நுனியில் பச்சை நிற ரிப்பன். எண்ணெய் பூசிப் படிய வாரியிருந்த தலை. கூரிய மூக்கு, “வெள்ளாவி வச்சு வெளுத்தாங்களா?” என்று சினிமாப் பாட்டில் கேட்பது போன்ற வெள்ளை நிறம் அந்தக் கூரிய நாசியையும், கன்னங்களில் முளைக்கத் தொடங்கியிருந்த பருக்களையும் எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்து. சராசரி உயரம். பார்ப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்திழுக்கும் கட்டுடல். பார்த்த மாத்திரத்தில் கணேஷ் வாயடைத்து நின்றதில் எந்த வியப்புமில்லை. அவளின் அழகையும் இளமையையும் பார்த்தவுடன், தான் சட்டை அணியாதது நினைவுக்கு வந்தது. உடனே வெட்கப்படலானான். அனிச்சையாய்க் கை கொண்டு மார்புப் பகுதியை மறைத்துக் கொண்டே, வெளியில் கொடிமேல் உலரப் போட்டிருந்த துண்டு ஒன்றை எடுத்து மேலுடலைப் போர்த்திக் கொண்டே “ஆம் உள்ள வாங்கோ…” என்றான்….

“ஆத்துல அம்மா இல்லயா? நாம் போய்ட்டு அப்புறமா வரேனே…” என்று கிளம்பத் தொடங்கியவளை, “நோ… நோ… நோ… இருங்கோ.. அம்மா இங்கதான் பக்கத்தாம் வரை போயிருக்கா… வந்துடுவா… யாராவது வந்தா ஆத்துல காத்திருக்கச் சொன்னா… வாங்கோ.. நீங்க போய்ட்டேள்னா.. அம்மா என்னை வைவா….” என்று அம்மாவின் சொல்லுக்கு மிகவும் கட்டுப்பட்டது போலப் பேசத் தொடங்கினான்… “ஓ… சரி… ஆனா ஆத்துல நீங்க மட்டுமா இருக்கேள்?…” என இழுத்த அவளை, “பரவாயில்ல.. வாங்கோ… நீங்க என்ன நம்பலாம்..” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் கணேஷ். “இல்லை, அதுக்கில்லை…” என்று எழுத்த அவள் இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல், செருப்பைக் கழட்டி விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் உள்ளே வருவதைப் பார்த்தவுடன், கணேஷின் உள்ளத்தில் தோன்றிய உவகைக்கு எல்லையே இல்லை. தனது மகிழ்ச்சியைப் பெருமளவு காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த அவன், மெதுவாக அவளிடம் ‘உங்க பேரென்னன்னு சொல்லவே இல்லயே..” என்று கேட்டான். “ஆஹ்… நான், என் பேரு… பாரதி… போன மாசந்தான் அப்பாவுக்கு மாத்தலாகி இந்த ஊருக்கு வந்தோம்.. பக்கத்துத் தெருவுல இருக்கோம்.. உங்கள நான் நிறைய தரம் பாத்திருக்கேன்.. சங்கர், உங்க க்ளாஸ்மேட், அவன் தங்கை நான்… மங்களம் மாமியைக் கோயில்ல பாத்தேன்… மஹாலக்‌ஷ்மியாட்டமா இருக்கேன்னு புகழ்ந்தா.. கொலுவுக்கு ஆத்துக்கு வான்னு கூப்ட்டா.. அதான்…” படபடவென்று ஜெட் வேகத்தில் பேசித் தன்னை அறிமுகம் செய்து முடித்த பாரதியை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.

“சரி வாங்கோ.. கொலு பாருங்கோ… எப்டி இருக்குன்னு சொல்லுங்கோ… நிறையா நான் பண்ணினது… அம்மாவுக்கும் நேக்கும் இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்..” சற்று நேரத்திற்கு முன்னர் காவல் காத்துக் கொண்டிரு என்று சொன்ன அம்மாவிடம் சண்டை போட்டதை முழுவதுமாக மறந்து விட்டான் அவன். ”அப்டியா.. வாவ்… பிரம்மாண்டமாப் பண்ணியிருக்கேள்… சூப்பர்… எவ்வளவு நன்னா இருக்கு” என்று புகழ்ந்து கொண்டே கொலுவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தாள். கொலுவைப் பார்க்கும் அவளை விடாமல் கண்களாலேயே விழுங்கிக் கொண்டிருந்தான் கணேஷ். ஒவ்வொரு அமைப்புக்களையும் பார்ப்பதற்காகக் குனிந்து, நிமிர்ந்து, முழங்காலிட்டு, உட்கார்ந்து எனப் பல போஸ்களிலும் பார்த்து, அவற்றில் மூழ்கி இருக்கும் அவளைப் பல கோணங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ். நளினத்துடன் கட்டப்பட்டிருந்த தாவணி, அவளது இடது பக்க இடுப்பையும், வயிற்றுப் பகுதிகளையும் தாராளமாய்க் காட்டிக்கொண்டிருந்தது. அங்கே அவன் பார்வை நின்றபின் வேறு உலகத்திற்கே சென்றுவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

“நோ… நோ.. நோ… ரொம்ப தப்பு…” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட கணேஷ்.. ”சத்த இருங்கோ, அம்மா பண்ணி வச்சிருக்க சுண்டல் எடுத்துண்டு வரேன்” என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு அகர்ந்தான். சுண்டல் எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்கும் அம்மா கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“சாரிடா… அலமேலு மாமி புடிச்சுண்டுட்டா… ஒரே அறுவை… பேசித்தள்ளிட்டா….. கொஞ்சம் நாழியாயிடுத்து… கோவிச்சுக்காத.. நோக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கொலுவைப் பாத்துக்கோன்னு சொல்லிட்டுப் போய்ட்டேன்… சாரிடா” என்றாள். “என்னம்மா சொல்றே… இதப்பாத்துக்குறது என்ன பெரிய வேலை.. நம்மாத்து வேலையை நாம செய்யாம யாரு செய்வா?” என்றான் கணேஷ். தன் காதுகளைத் தன்னாலேயே நம்ப முடியாத அம்மா ஏதோ பதில் சொல்ல எத்தனிக்கையில்தான் கொலுவுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பாரதியைக் கவனித்தாள். பார்த்த மறு நிமிடம், இதற்காகத்தான் நம்மகனிடம் இந்த மாற்றம் என்பதைப் புரிந்து கொண்டாள்…

“மாமி.. எப்படி இருக்கேள்? அன்னக்கி வரச்சொன்னேள்னு வந்துட்டேன்.. உங்க புள்ள ரொம்ப நன்னா பாத்துண்டார்… கொலுவுக்கெல்லாம் ரொம்ப ஹெல்ப் பண்ணினாராமே.. இந்த வயசுல இதெல்லாம் செய்றது ரொம்ப அபூர்வம்… “ என்று அடுக்கிக்கொண்டே போனாள். மங்களம் மாமி அமைதியாய் மகனை ஓரக்கண்ணால் பார்த்து மனதிற்குள் நகைத்துக் கொண்டாள்.

“சரி மாமி, நேக்கு நாழியாயிடுத்து, நான் வந்தும் ரொம்ப நாழியாயிடுத்து… நீங்க வந்ததும் பாத்துட்டுப் போலாம்னுதான் காத்துண்டு இருந்தேன்…. நான் கிளம்புறேன் மாமி.. இன்னும் இரண்டாத்துக்குப் வேற போயி கொலு பாத்துட்டுப் போகணும்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள். “ஓ, அப்டியா கொழந்தே… நாழியாயிடுத்தேம்மா.. இருட்டப்போறது இப்போ நீ தனியாப் போனா எப்டி?… ம்ம்ம்ம்…..  கணேஷைக் கூட அனுப்பலாம்னா அவனுக்கு இன்னொருத்தர் ஆத்துக்குக் கொலுவுக்காகப் போறது பிடிக்காது… பொம்மனாட்டிகள் வேலைன்னு சொல்லுவான்… நானே கூட வரேன்” என்று சொல்லிப் புறப்பட எத்தனித்தாள். “அம்மா.. என்ன சொல்ற நீ? இதெல்லாம் நம்ம கலாச்சாரம், ரிலிஜன்…. சுவாமியை நினைச்சுக்கறதுக்குப் பலவழிகள் அதுல இதுவும் ஒண்ணு… நானே எல்லார் ஆத்துக்கும் போலாம்னுதான் இருந்தேன்… இவாளோடப் போறது டபுள் பர்பஸ் சால்வ் ஆய்டும்…” என்று சொல்ல, மாமி, “ம்ம்ம்ம்ம்….. அடேங்கப்பா.. அப்டியாடா?” என்றாள் மங்களம் மாமி தனது குரலில் இருக்கும் எகத்தாளம் தெரியுமளவுக்கு. “தவிர, நீ பாவம் இப்பதான் நடந்து போய்ட்டு வந்திருக்க, கால் வலிக்குமில்லையோ… நீ உக்காந்து ரெஸ்ட் எடும்மா” என்று கரிசனமாய்ச் சொல்ல, அம்மா அனைத்தும் புரிந்தவளாய் நகைத்தாள்.

“வாவ்… நீங்க எவ்வளவு பொறுப்பானவர்… நான் இதுபோல ரெஸ்பான்ஸ்பிள் மேன் பாத்ததில்லை…. எங்கூட துணைக்கு வரதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..” என்று பேசிக் கொண்டே பக்கத்தில் நடந்த பாரதியைப் பார்த்துக் கொண்டு தெருவில் பெருமிதமாய் நடந்தான் கணேஷ். அவன் வந்ததே பாரதியுடன் நேரம் செலவழிக்கத்தான் என்று விரல் சூப்பும் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் அவளுக்கு மட்டும் அது தெரிந்திருக்காது என்று அவனுக்கு ஒரு நம்பிக்கை. நவராத்திரி பற்றியும், அதன் பின்புலம் மற்றும் தத்துவம் எனத் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவளுடன் பரிமாறிக் கொண்டே நடந்தான் கணேஷ்.

முதலாவதாக நுழைந்தது சரஸ்வதி மாமியின் வீடு. அவர்களைத் தெரியுமென்றாலும், அவ்வளவாகப் பழக்கம் கிடையாது.. உள்ளே நுழைந்ததும் முதலாவதாகக் கவனத்தைக் கவர்ந்தது அங்கிருந்த அனைவரும் பெண்கள் என்பதே. மருந்திற்குக்கூட ஒரு ஆண் இல்லை. அந்த வீட்டிலுள்ள ஆண்மக்கள்கூட பெண்கள் வருவார்கள் என்பதற்காக வீட்டைக்காலி செய்திருந்தனர். அப்பொழுதுதான் தான் வந்திருக்கக்கூடாது என்று உணர்ந்தான். பெண்கள் இருந்த, கொலு வைக்கப்பட்டிருந்த இடம் தவிர்த்து, அதற்கு மறுமுனையில் நின்று கொண்டிருந்த பாரதியைப் பார்க்கத் தொடங்கினான். அதுவரை அவன் பார்ப்பதைக் கவனிக்காததுபோல் இருந்த பாரதி, இப்பொழுது அவன் முகத்தை நேரடியாகப் பார்க்க ஆரம்பித்தாள். சற்று மெதுவாய், தன்னிச்சையாய் நடப்பதுபோல, நடந்து வந்து அவனருகில் நின்று கொண்டாள். “என்ன… ரொம்ப கான்ஷியஸா ஃபீல் பண்றேளா? என்று தொடங்கினாள். ”நேக்குத் தெரியும், நீங்க வந்ததே எனக்காகத்தான்… நேக்கும் நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமா இருந்துது தெரியுமா? உங்களை நேக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு… இதைத்தான் கண்டதும் காதல்னு சொல்றாளோ?” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டாள்.

தன் காதுகளைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை கணேஷுக்கு… தன் காலுக்குக்கீழே பூமி கழன்று விழுந்து தான் பறப்பதுபோன்ற உணர்வு பெற்ற கணேஷ், அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவராத்திரி எப்பொழுது வரும் என்று காத்திருக்கத் தொடங்கினான்.

   வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad