மின்னியோப்பா நீர்வீழ்ச்சியும் மீன் குழம்பும்
கோடை வாரயிறுதி என்றால் இயற்கை விரும்பிகளுக்கு மின்னசோட்டாவில் ஜாலி தான். இருக்கவே இருக்கிறது, ஊர் முழுக்க ஏரிகள். அது போரடித்து விட்டால், அக்கம்பக்கம் உள்ள ஸ்டேட் பார்க், அருவி, நடைப்பயிற்சிப் பாதைகள் என உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. அப்படி ட்வின் சிட்டிஸில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று வரக் கூடிய தொலைவில் உள்ளது மின்னியோப்பா நீர்வீழ்ச்சி (Minneopa Falls).
மின்னியோப்பா ஓடை, இங்கு இரு இடங்களில் நீர் வீழ்ச்சியாக விழுகிறது. அதுவே, மின்னியோப்பா என்ற காரணப் பெயராக அமைந்து விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே, இந்தப் பகுதியில் மக்கள் குடியேற்றம் தொடங்கி விட்டது. இயற்கைப் படங்கள் வரைபவர்கள் மத்தியில் இந்த இடம் அப்பவே ஃபேமஸ். இப்ப கேமரா தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவது போல், அப்போது தூரிகைகளுடன் கிளம்பி விடுவார்கள். அதன் நீட்சியாகத் தான், தற்போது எஸ்எல்ஆருடன் நவீனக் காட்சிப் படைப்பாளிகள் இங்கு வலம் வருகிறார்கள்.
நீர்வீழ்ச்சியை வெண்ணிறக் கோலப் பொடியைக் கொட்டுவது போல் (Silky Water Effect), படம் பிடிக்க விரும்புபவர்கள் இங்குச் செல்லலாம். ஆள் நடமாட்டம் ஒப்பீட்டளவில் குறைவென்பதால், சாவகாசமாக நின்று படம் பிடித்து வரலாம். தவிர, நீர் வீழ்ச்சியைப் பல ஆங்கிள்களில் படம் பிடிக்கும் வசதியும் இங்கு உள்ளது.
மின்னியோப்பா நீர்வீழ்ச்சி
வயதானவர்கள் மேலே உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு, படம் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். வாலிபச்சிட்டுக்கள் கீழே நீர்வீழ்ச்சி விழும் இடம் வரை சென்று தண்ணீரில் டைவ் அடித்து நீந்துகிறார்கள். இந்த இடத்திற்குப் போகும் முன்பு, ஏன் நம்மூர் மாதிரி இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் மக்கள் குளிப்பதில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தளவு மக்கள் பொது இடம் என்ற நாகரீகம் பார்க்கிறார்களா அல்லது சட்டம் என்று ஒன்று இருந்து அதைக் கடைப்பிடிக்கிறார்களா என்று சந்தேகம். இங்கு சென்றபோது, அருவியில் குளிக்கும் ரசனைவாதிகளைக் காண முடிந்தது. அருவி விழும் அந்த இடத்திற்குச் செல்ல, பாதை சீராக இல்லாவிட்டாலும், பாறைகளில் ஏறி இறங்கிச் செல்வது நல்ல அனுபவம். அப்படியொன்றும் பயப்படும் அளவுக்கு இல்லை. கொஞ்சம் சிரமப்பட்டுச் செல்வதற்கு வொர்த்தான இடம்.
இந்தப் பார்க்கின் உள்ளே உணவகங்கள் ஏதும் இல்லை. ஆனால், உட்கார்ந்து சாப்பிட, அம்சமான இடங்கள் உள்ளன. வீட்டில் உணவு சமைத்து எடுத்துச் சென்றால், இயற்கைச் சூழலில் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு வரலாம். நாங்கள் மீன் குழம்புடன் சென்றோம். மின்னியோப்பா நீர்வீழ்ச்சிச் சாரலில் மீன் குழம்புச் சாப்பாடு என்பது நல்ல கூட்டணி!! (அப்படித் தலைப்பை கவர் செஞ்சாச்சு!!). என்ன இருந்தாலும், குற்றாலத்திற்குப் புளியோதரை செய்து கொண்டுபோன கூட்டம் தானே நாம்?
இந்த நீர்வீழ்ச்சியைத் தவிர, இங்கு பார்ப்பதற்கு ஒரு காட்டெருமைச் சரணாலயம் இருக்கிறது. புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை ஒன்பது மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். மண் சாலையில் ஒரு பழங்கால மில்லை நோக்கிச் சென்றால், போகும் வழியிலோ, அல்லது வரும் வழியிலோ காட்டெருமைகளைக் கூட்டமாகக் காணும் வாய்ப்புக் கிடைக்கும். வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் என்று அறிவிப்புப் பலகைகளைக் காண முடிகிறது.
நூறு வருடங்களுக்கு முன்பு, இந்த நீர்வீழ்ச்சியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் தனியார் வசம் இருந்தன. இந்த அழகிய பகுதிக்குச் செல்லும் உரிமை பொது மக்களுக்கு வேண்டும் என்று அச்சமயம் கோரிக்கை எழுப்பப்பட்டு, அதன் காரணமாகச் சட்டம் இயற்றப்பட்டு, தனியாரிடம் இருந்து இந்தப் பகுதி வாங்கப்பட்டு, மக்கள் சென்று வருவதற்கான வசதிகள் செய்யப்பட்டன. தென் மின்னசோட்டாவின் பெரிய நீர்வீழ்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி, மின்னசோட்டா மக்களின் வாரயிறுதிச் சுற்றுலாத்தலமாக, மக்களின் வாரச்சோர்வை நீக்கும் இடமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை. அதற்கு அக்காலத்தில் குரல் எழுப்பிய உள்ளூர் மக்களுக்குத் தான், நமது நன்றியைச் சொல்ல வேண்டும். நன்றி.
– சரவணகுமரன்.
Tags: நீர்வீழ்ச்சி, மினசோட்டா, மின்னியோப்பா
First time i heard about this Falls,. NICE