\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தற்கொலை தவிர்ப்போம்

இக்கட்டுரை வெளியாகும் செப்டம்பர் 10ஆம் நாள் ‘உலகத் தற்கொலைத் தடுப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நீட் (National Eligibility and Entrance Test)

கடந்த சில தினங்களில் தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரையும்  உணர்வு பூர்வமாகப் புரட்டி போட்ட செய்தி  அனிதாவின் தற்கொலை. ‘கனவு காணுங்கள்’ என்ற கூற்றைக் கடந்து மருத்துவராகும் லட்சியத்தோடு மிகச் சிறந்த முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, மருத்துவப் படிப்புக்கான விளிம்பில் நின்ற   அவருக்கு, ‘நீட்’  நுழைவுத்தேர்வு பற்றி பரிச்சயமும், பயிற்சியும்  இல்லாததால், அதில் வெற்றி பெற முடியாமல் போனது. நீட் தேர்வு முறையால் தனது லட்சியம் தகர்ந்துவிட்ட விரக்தியில்  அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

 

‘நீட்’ தேர்வு தேவையா; நாடு தழுவிய தகுதித் தேர்வினை மத்திய அரசு சரியான முறையில் அமல்படுத்தியதா; மாநிலப் பாடத்திட்டப்படிப் படித்துவரும் மாணவர்களுக்கு, மத்தியப் பாடத்திட்டப்படி நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஏற்புடையதா; மாநில அரசு போதுமான அளவிற்குப் பள்ளிகளுக்கு இந்நுழைவுத் தேர்வு பற்றிய தகவல்களை விளக்கியதா; இது தொடர்பான வழக்குத் தொடரப்பட்ட போது, நடைமுறைச் சிக்கல்களை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்ததா – இப்படிப் பல கேள்விக்கணைகள் பறந்து கொண்டுள்ளன. ‘நீட்’ தேர்வு முறை தொடருமா, விலகுமா? நமக்குத் தெரியாது.  எனினும் அனிதா எனும் 17 வயது நிரம்பிய பெண்ணை நாம் இழந்தது இழந்தது தான்.

நீலத் திமிங்கலம் (Blue Whale)

கடந்த இரண்டு வாரங்களில் ‘நீலத் திமிங்கலத்தால்’ மாண்டவர்கள் பட்டியல்.

ஆகஸ்ட் 30, 2017 – விக்னேஷ் (19),  பி.காம்.  இரண்டாம் ஆண்டு, மதுரை

ஆகஸ்ட் 31, 2017 – சசிகாந்த் போரோ (21),  எம்.பி.ஏ.  முதலாண்டு, புதுவை

செப்டம்பர் 1, 2017 – அஷோக் முலானா (22), குஜராத்

செப்டம்பர் 2, 2017 – சாத்விக் பாண்டே (17), +2, மும்பை

மனோதத்துவம் படித்து வந்த  ஃபிலிப் புடெய்கென் எனும் 22 வயது ரஷ்ய இளைஞன் உருவாக்கிய ஒளி உரு விளையாட்டு ‘ப்ளு வேல்’. இவ்வுலகில் வாழத் தகுதியில்லாத உயிரியல் கழிவுகளை அகற்றுவது இவ்விளையாட்டின் நோக்கம் என்று குரூரமாகச் சொல்கிறான் இவன்.

பிளேடால் வெட்டி கைகளில் நீலத் திமிங்கல அடையாளக் குறிகள் வரைவது, நள்ளிரவு சுடுகாட்டுக்குச் சென்று வருவது, திகில் படங்கள் பார்ப்பது என கிட்டத்தட்ட 50 சவால் நிறைந்த பணிகளைச் செய்வது இவ்விளையாட்டின் இலக்கு.  விளையாட்டாகத் தொடங்கிவிட்டு, இடையில் வெளியேறினால் குடும்பத்தினர் கொலையாவார்கள் என்ற மிரட்டலினால் தொடரவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டவர்கள் மேலே சொல்லப்பட்ட நால்வரும். இவர்களைப் போல உலகம் முழுதிலும் 130க்கும் அதிகமானோர் நீலத் திமிங்கலத்துக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில், பல தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணமுள்ளன.

உலகச் சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 2015 ஆம் மட்டும், உலகம் முழுதிலும்  எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை புரிந்துள்ளனர். இதில் 15 முதல் 29 வயதுக்குள் இருக்கும் பிரிவினரின் தற்கொலை  இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. வயதுப் பிரிவில் இப்பிரிவினர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

குறிப்பாக இலங்கையிலும், இந்தியாவிலும் இப்பிரிவினரின்  தற்கொலைகள் அதிகரித்தவண்ணமுள்ளன. 30 வயதுக்குள்ளான  பெண்களும், 30 வயதுக்கு மேலான ஆண்களும் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனராம். 30 வயதுக்கு மேல், ஆண்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகரித்த காரணத்தால் மன அழுத்தம் அதிகமாகி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கின்றனர், 30 வயதுக்கு மேலான பெண்கள் குழந்தை பெற்ற காரணத்தினால், பொறுப்புகள் கூடி ( பிள்ளைகளின் நலன் கருதி) தற்கொலை முயற்சியைக் கைவிடுகின்றனராம்.  சமீப காலமாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) ஒரு இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

உலக நாடுகளில், இலங்கையில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நேர்கின்றன. ஒரு லட்சம் பேரில் 35.3 பேர் தற்கொலை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இவ்வெண்ணிக்கை 15.2 ஆக உள்ளது.  உலகளவில் ஒரு லட்சம் பேரில் 10.5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைப் பார்க்கும் பொழுது, இலங்கையில், உலகளவில் நடப்பதை விட மூன்றரை மடங்கும், இந்தியாவில் ஒன்றரை மடங்கும்  தற்கொலைகள் ஏற்படுகின்றன.

அதிர்வூட்டும் இப்புள்ளிவிவரங்கள் கவலைக்குரியவை. மேலே குறிப்பிடப்பட்ட தற்கொலைகளை, அல்லது எந்த தற்கொலையையும்  ‘கோழைத்தனமான செயல்’,  ‘பலவீனமானவர்’, ‘வளர்ப்பு சரியில்லை’ என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கி விட முடியாது. அவர்களை, அச்செயலுக்குத் தூண்டிய  எண்ணங்கள் புரியாமல் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடுவதால், எதிர்காலத் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.

தற்கொலைக்கான காரணிகள்

தற்கொலையைப் புரிந்து கொள்ளப் பல நூற்றாண்டுகளாக முயன்ற தத்துவவாதிகளும், உளவியல் நிபுணர்களும், தற்கொலைக்கான காரணங்களை,  சமூகம், பொதுநலம், வாழ்வியல் குளறுபடிகள் என்ற மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்தனர்.

சமூகம் : சமூகத்தால் தனிமைப்படுத்தப்படும் ஒரு நபர் தனது தற்பெருமையை (ego) நிலைநாட்டிக் கொள்ள மேற்கொள்வது.

தோல்வி, ஏமாற்றம், தனிமை, அச்சம், நிராகரிப்பு போன்ற நிகழ்வுகள் தரும்   மனவதிர்ச்சி (Trauma), மனவழுத்தம் (Mental pressure), மனவுளைச்சல் (Stress), மனப்பிழவு (Schizophrenia), மனச்சோர்வு (Depression), இருமுனையப் பிழவு (bipolar disorder) , தன்னிரக்கம் (Selfpity) போன்றவை தற்கொலைக்கு முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் இவ்வித நிகழ்வுகளை அதிகமாக எதிர்கொள்ள நேரிடுகிறது. ‘தக்கன நிலைத்தல்’ (‘Survival of the fittest’) எனும் கோட்பாட்டின் கீழ் இயங்கும் தற்கால உலக வாழ்க்கை முறையில், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல்  அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஏதோவொரு காரணங்களால் சற்றே பின்தங்குபவரை மற்றவர்கள் கவனிப்பதோ, அவருக்காக கவலைப்படுவதோ இல்லை.

ஓரிரு தலைமுறைக்கு முன்பு வரை காதல் தோல்வி தற்கொலைக்கு முதற் காரணியாக இருந்தது. இந்தத் தலைமுறை காதல் தோல்விகளைச் சீரணிக்கத் துவங்கியுள்ளது. இந்த மாற்றம் மகிழ்ச்சி தந்தாலும், நீலத் திமிங்கலம் போன்ற அற்பச் சவால்களை ஏற்பதும், தோல்வியில் தன்னை ஒருவர் மாய்த்துக் கொள்வதும் வருந்தத்தக்கது.

பொதுநலம் : தீக்குளிப்பது, மனித வெடிகுண்டாக மாறுவது போன்ற தற்கொலைகளை மேற்கொள்பவர்கள் மற்றவரைப் பழிவாங்கும் வகையில் இம்முடிவுகளை எடுக்கின்றனர். இவர்கள் தங்களைப் பொதுநலம் கருதும்  ஓர் போர்வீரனாகவும், தியாகியாகவும் சித்தரித்துக் கொள்கின்றனர். நம்மில் சிலரும் அப்படியே பெருமை பேசிப் போற்றி வருகிறோம்.

திடீர்க் குளறுபடிகள் :  அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், சூறாவளியாகச் சில குளறுபடிகள் ஏற்படுகையில் அவற்றைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை முடிவைச் சிலர் மேற்கொள்கின்றனர்.  

பருவம் பொய்த்துப் போனதால் தங்களை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள்,  தேர்வு முடிவு, கடன் தொல்லை, முறையற்ற உறவு போன்ற காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்பவர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.   

இவை மட்டுமின்றி  உடல்நலமின்மை, நாட்பட்ட உடல்வலி போன்றவையும் தற்கொலைக்கு முக்கியக் காரணங்களாக  உள்ளன. தீராத துயரத்துக்கு முடிவு காண்பதாக நினைத்து இவர்கள் தங்கள் முடிவைத் தேடிக்கொள்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில், குடும்பம், நட்பு போன்ற வட்டங்களில் தனிப்பட்ட பிரச்சனைகளைத் தெரிவிப்பதும், உதவி நாடுவதும் குறைந்து போயுள்ளது. தங்களது மன பாதிப்புக்களை, எண்ணங்களைக்  குறித்துக் கூடி உட்கார்ந்து யாரும் பேசுவதேயில்லை. ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் குறித்துக்கூட, நேர்மையாக யாரும் உரையாடுவதேயில்லை.

இன்னமும் நம் சமூகத்தில் ‘மனநலக் குறைபாடு’ என்பது இழிவானது என்றே கருதப்படுகிறது. ஒருவர்  ‘சைக்கியாட்ரிஸ்ட்’டிடம் சென்றால் அவரை மற்றவர்கள் வேறொரு கீழ்த்தரமான கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். இது போன்ற காரணங்களால் மனதளவில் பாதிப்புக்குள்ளானவர்கள் அவற்றை மற்றவரிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள். சளி, ஜுரம் போன்ற சிறிய உபாதைகளுக்குக் கூட மருத்துவரிடம் சென்று உடல் நலம் பேணுபவர்கள் மன நலனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

தற்கொலை செய்யத் துணிபவர்கள் அனைவரும், தங்களது முடிவை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றனர். அக்குறிப்புகளைப்  புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம் நாம். மேலே குறிப்பிட்ட, நீலத் திமிங்கல விளையாட்டால் தற்கொலை மேற்கொண்ட நால்வரும்   நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தங்களுடைய  முடிவைத் தங்கள் நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர். அச்சமயத்தில் அவர்கள், ‘விளையாட்டாகச் சொல்கிறான்’ என்று அசட்டையாக இருந்து விட்டு இப்போது வருந்துகின்றனர்.

விடைபெறும் தொனியில் பேசுவது, தங்களுக்கு மிகவும் பிடித்த / நெருக்கமான பொருளை மற்றவர்களுக்குத் தந்து விடுவது, பதட்டமாக இருப்பது அல்லது எதிலும் ஈடுபாடின்றி இருப்பது போன்றவையும் தற்கொலைக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகின்றன.

இது போன்ற மனநிலையில் யாரையேனும் சந்திக்க நேர்ந்தால், உணர முடிந்தால், தயவு செய்து அவரிடம் திறந்த மனதோடு பேசுங்கள். அவர்கள் வெளிப்படையாகத் தங்களது சிக்கல்களை, குறைகளை உங்களிடம் பேசத் தயங்கும் நெருக்கடியை முதலில்  களையுங்கள். அவர்கள் பகிரும் விஷயங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவர்களது துயரத்தைக் குறைக்க முற்படுங்கள். மனநல மருத்துவர், உளவியல் மருத்துவர் போன்றோரைச் சந்திக்க உதவுங்கள்.

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகத் தோன்றினால் மன நல மருத்துவரை அணுகத் தயங்காதீர்கள்.  

பிரபல நகைச்சுவையாளரான பில் மேஹர் தற்கொலையை இப்படிக் குறிப்பிடுகிறார். “தற்கொலை என்பது கடவுள் எனும் முதலாளியிடம் ‘நீ என்ன என்னை வெளியேற்றுவது? நானே வெளியேறுகிறேன்.’ என்று சொல்வதாகும்”.

பிறப்பும், இறப்பும் இயற்கையாக நிகழ வேண்டியவை. அப்படியே வைத்திருப்போம்.

  • ரவிக்குமார்

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad