\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சிட்டுக்குருவி

chittukkuruvi_425x282நான் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வீட்டு நினைவுகளில் சிக்குண்டு பெரிதும் கலங்கியதுண்டு. உறவினர், நண்பர் இவர்களை விட்டு விட்டு வந்து இங்கே என்ன சாதிக்கப் போகிறோம் எனத் தோன்றியது உண்டு.

நண்பர், உறவினர் மட்டுமில்லை, எனது வாழ்க்கை முறையையே தொலைத்து விட்டதாக நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு பெடல் இல்லாத சைக்கிளை ஓட்டி வந்து பேப்பர் போடும் பெரியவர், ‘எளன்’ என்று கூவி இளநீர் விற்பவர், காலை ஆறரை மணி சமீபத்தில் சாவியை மூன்று முறை கதவில் தட்டி விட்டுத் திறக்கும் எதிர் கடை அண்ணாச்சி, சாலை பரபரப்பாகும் முன் தனது முதலாளிக்கு பாலைக் கொடுத்துவிட்டு எங்காவது தின்ன ஏதாவது கிடைக்காதா என ஏங்கும் பசுக்கள், இன்றைக்கு அமாவாசையா எனும் யோசனையுடன் வாயிற்கதவுச் சுவற்றில் அமர்ந்து, தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்க்கும் காகங்கள், மிக, மிகத் தொலைவில் ராணுவப் பயிற்சி முகாமில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு, கூட்டமாய் மின்சாரக் கம்பியிலிருந்து பறக்கும் சிட்டுக் குருவிகள், தென்னங் குருத்திலிருந்து பிஞ்சுத் தேங்காயைப் பிய்த்துத் தூக்கிக் கொண்டோடும் அணில்கள் என பலவற்றையும், பல ஆண்டுகளாகப் பார்த்து ரசித்த உணர்வைத் தொலைத்து விட்டேன்.

அதன் பின் பலமுறை அந்த வீட்டுக்குச் சென்று வந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக மாறிப் போனதை உணர்ந்தேன்.இரண்டாம் முறை போன போது, பேப்பர் போடும் பெரியவர் இல்லை. பின்னொரு முறை கவனித்த போது, அண்ணாச்சி கடை பல்பொருள் அங்காடியாக மாறியிருந்தது, இப்பொழுது வேலையாள் தான் வந்து கடையை திறக்கிறான். அண்ணாச்சி எப்போதாவது வந்து போகிறார். இளநீர் விற்றவர் பைனான்ஸ் தொழில் செய்கிறார். அமாவாசையன்று மக்கள் கா.கா என்று காகத்துக்காகக் கரைகிறார்கள். தென்னை மரம் வெட்டப்பட்டு விட்டதால் கிடைத்தவற்றைக் கொண்டு வந்து அணில் ஸ்பிலிட் ஏர்கண்டிஷனருக்குள் கூடு கட்டிக் கொள்கிறது. இப்படி நிறைய மாற்றங்கள் கண்ணெதிரே தெரிந்தன.
சென்ற விடுமுறையில் சென்றிருந்த போது ஒரு நாள், மின்சாரக் கணக்கெடுக்க பணியாளர் வந்திருந்தார். வீட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தபடியால் எனக்கு மின்னளவி(?) (Electric Meter) எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. இருபது வருடங்களுக்கு முன் அதே வீட்டில் மின்னளவி உயரத்தில் இருக்கும். மின்சாரப் பணியாளர் வந்தால் அவருக்கு இரண்டு நாற்காலிகளை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு அதை ஒருவர் பிடித்துக் கொள்ள வேண்டும். இவருக்கும் அப்படி ஏதாவது உதவி தேவைப்படுமோ என நினைத்து அவரைப் பின் தொடர்ந்தேன். நேராக வெளிப்புறப் படிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றவர் அங்கிருந்த, மரக்கதவு வைத்த பூஜையறை போல இருந்த ஒரு அறையைத் திறந்தார் .. உள்ளே பெரிய பாக்டரிகளில் இருப்பதைப் போன்ற பல மின்சாரக் கருவிகள் இருந்தன. கையிலிருந்த ஸ்கேனர் கருவியை மின்னளவிக்கு நேரே காட்டினார்.. ‘பிய்ங்க்’ என்று சின்ன சத்தம் கேட்டது. அருகே செருகி இருந்த அட்டையை எடுத்து கிறுக்கி விட்டு கதவை மூடிக்கொண்டு, நடையைக் கட்டினார்.

எப்படி மாறிவிட்டதென்று நினைத்துக் கொண்டேன். பெரிய ரிஜிஸ்தர் நோட்டு இல்லை, டார்ச் அடித்து, இரண்டாம் நாற்காலியில் கால் விரல் நுனியில் நின்று ஒரு கையால் அருகிலிருக்கும் சுவற்றில் ஊன்றி அதில் தெரிவது ஆறா, எட்டா என எட்டிப்பார்க்கும் அவஸ்தை இல்லை. இதற்கு நடுவே மின்னளவி இருக்கும் போர்டுக்குப் பின்புறம் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் சிட்டுக் குருவிகள்,  தன் கூட்டைக்கலைக்கத்தான் அரசாங்கத்திலிருந்து காக்கி உடையில் ஒருவர் வந்திருக்கிராறோ எனக் ‘கிறீச்.. கிறீச்’ என சத்தமிடும் ஓலம் இல்லை.. சடாரென்று உரைத்தது. ஆமாம் சிட்டுக் குருவிகள் என்னவானது?

அவ்வப்போது ஆங்காங்கே சிட்டுக்குருவிகளின் அழிவை கட்டுரைகளாகப் பார்த்திருந்தாலும் பெரிதாக எதுவும் அறிய முற்பட்டதில்லை. ஆனால் அன்று என்னவோ அது பெரிய கேள்வியாகிப் போனது. எங்கே போயின அந்தக் குருவிகள்? வீட்டைச் இரண்டுமுறை சுற்றி வந்து மேலும் கீழும் பார்த்தேன். நடுப்பகல் வெயிலில் வெளியே போன பிள்ளைக்கு இப்படியாகி விட்டதேயென்ற தொனியில், ‘உள்ள வந்து உக்காருப்பா, தண்ணி எடுத்துட்டு வர்றேன்’ என்று சொல்லிச் சென்றார் அம்மா. கண்ணுக்கெட்டிய வரையில் ஒரு சிட்டுக் குருவியையும் காணவில்லை. எவ்வளவு அழகானவை அவை?
அப்போதெல்லாம் வீட்டில் நாய் வளர்த்து வந்ததால் எவரும் உள்ளே நுழைய பயப்படுவார்கள். ஆனால் மனிதருக்கும் சரி, நாய்க்கும் சரி எவருக்கும் பயப்படாமல் உள்ளே வரும் ஒரே உயிரினம் சிட்டுக் குருவிதான். தொடக்கத்தில் எங்கள் நாய் இவற்றை விரட்டிக் கொண்டு ஓடும்.. அந்த விரட்டலுக்கெல்லாம் மசியாத குருவிகள் ஏதாவது ஒரு மின்சார விளக்கிலோ, படத்தின் சட்டத்திலோ உட்கார்ந்து கொண்டு, நாயைப் பார்த்து ‘ இப்போ என்ன பண்ணுவே ‘ என்பது போல் தலையைச் சாய்த்துப் பழிக்கும். நாயும் ஓரிரு முறை குறைத்து விட்டுப் பின்னர் அகன்று விடும், சில நாட்களுக்குப் பிறகு நாய் குருவிகளைச் சட்டை செய்வதில்லை..

எங்கள் வீட்டு வராந்தாவில் (அப்போதெல்லாம்) ஒரு பெரிய காந்திஜி படம் இருக்கும். வாரத்துக்கு ஒரு முறை அந்தப் படத்தைத் துடைத்து வைப்பார் அப்பா. புதிதாக வரும் செய்தித்தாளை அந்தப் படத்துக்கு கீழே இருக்கும் மேசையில் தான் வைப்பார் அம்மா. சில நேரங்களில் காந்திஜி பட சட்டத்தில் அமரும் குருவி சரியாக நாளிதழின் மேல் எச்சமிடும். அப்போதெல்லாம் பெரிதாக அம்மாவைக் கோபித்துக் கொள்வார் அப்பா. சில நேரங்களில் காந்திஜி படத்திலும் எச்சத்தின் மிச்சம் தங்கி விடுவதுண்டு. அப்போது அம்மாவிற்கு பதிலாக குருவிகளுக்குத் திட்டு விழும். ‘அந்தக் கூட்டைப் பிச்சி போடணும்’ என்று சொல்வார் அப்பா.. ஆனால் செய்ய மாட்டார். அது வழக்கமாக எச்சமிடும் மற்றொரு இடம் மின்னளவி. ‘சார் … இந்த குருவிக் கூட்டை எடுத்து போடுங்க .. இல்லேன்னா மீட்டர நீங்களே பார்த்துச் சொல்லுங்க .. கிட்ட நெருங்க முடியலை’ என்பார் மின்சார வாரிய பணியாளர்.

வீட்டில் அப்போது மோட்டார் கிடையாது .. அம்மா கிணற்றில் தண்ணீர் இறைத்து தான் துணி துவைப்பார். அப்போது வெளியில் சிந்தும் தண்ணீருக்காக இந்தக் குருவிகள் போட்டி போடும். அம்மா துணியை அடித்து துவைத்து அதைக் கசக்கும் நேரத்தில் மரத்திலிருந்து விர்ரென்று வந்து தேங்கி இருக்கும் நீரில் தலையை நுழைத்து, சிலுப்பிக் கொள்ளும் . அந்தச் சில நொடிகளில் கழுத்தை முன்னூறு முறை திருப்பித் திருப்பி அம்மா துணியை அடித்துத் துவைக்க மறுபடியும் தயாராகி விட்டாரா எனப் பார்த்துக் கொள்ளும். அவர் துணியை மீண்டும் அடிக்க மனதுள் நினைக்கையில், விர்ரென்று பறந்து மறுபடி மரத்திலமர்ந்து கொள்ளும்.

பசியெடுத்தால் அண்ணாச்சிக் கடைக்கு சென்று விடும். வெளியே சிதறும் பருப்பு, அரிசி இவைகளை கொண்டு வரும். அம்மா உப்புமா செய்வதற்காக அரிசியைக் கழுவிக் காய வைத்திருந்தால் நடுவில் வந்து உட்கார்ந்து எந்த அரிசியில், பாலிஷ் செய்த பிறகும் சக்தி குறையாமல் இருக்கிறது என்பது போல் ஆராய்ச்சி செய்து தன் உணவைத் தேர்ந்தெடுக்கும். ஆனால் காகம் அப்படிக் கிடையாது, ஏதாவது கிடைத்தால் போதும் என்பது போல வந்து எடுத்துக் கொண்டு போகும். அம்மா ஒரு பெரிய குச்சியை வைத்துக் கொண்டு வரும் போதும் போகும் போதும் விரட்டுவார், ‘பாவமம்மா குருவி..’ என்றால் ‘அது எங்கெங்கேலாம் உக்காந்துட்டு வருதோ’ என்று குருவிக்கென்று கொஞ்சம் அரிசியை எடுத்துத் தனியாக சற்று தள்ளி வைப்பார். இருந்தாலும் நான் நடுவிலிருந்து தான் எடுப்பேன் என்று அது அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்யும்.

அவை கூடு கட்டத் துவங்கி விட்டால் போதும் … எங்கெங்கிருந்தோ வைக்கோல், குச்சிகள் என வீடே நிரம்பி விடும் அளவுக்கு கொண்டு வந்து சேர்க்கும். சில சமயங்களில் சிறு சிறு பறவை இறக்கைகளையும் கொண்டு வரும். ‘அதாண்டா, அதனோட பெட்டு (Bed) ‘ எனச் சொல்வான் பக்கத்து வீட்டு கோபால். அவன் ஒருமுறை அதன் கூட்டை திறந்துப் பார்த்ததாகக் கூடச் சொல்வான். அவனை அறிவியல் விஞ்ஞானி போல் பிரமிப்புடன் பார்ப்போம் நாங்கள்.

இப்படிச் சிறு வயதில் பலவகையிலும் என் கவனத்தை ஈர்த்திருந்த சிட்டுக் குருவிகளைக் காணாத போது, அதை அறியாமலேயே இருந்துள்ளது என் மனம் என வெட்கமாக இருந்தது. அன்றிரவு சந்தடி எல்லாம் அடங்கிய பிறகு என்ன தான் நடக்கின்றன சிட்டுக் குருவிகளுக்கு என இணையத்தில் தேடத் துவங்கினேன்.
* சிட்டுக்குருவிக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றன எனும் தவறான நம்பிக்கைகளால் இவை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றனவாம்.
* நகரங்களில் கட்டிட அமைப்புகள் மாறி ஜன்னல், தாழ்வாரம், முற்றம் போன்றவை மறைந்து, கண்ணாடி சூழப்பட்ட குளிர்வறைகளாக மாறி வருவதால் மனிதர்களுடனே சேர்ந்து வாழுந்த குருவிகளுக்கு இருப்பிடமின்றிப் போய்விட்டதாம்
* நான் முன்னர் கூறியபடி சிறு மளிகைக் கடைகள் மறைந்து. பல்பொருள் அங்காடிகளாக மாறுவது உணவு கிடைக்க வழியில்லாமல் செய்து விடுகிறதாம்,
* மேலும் நகரங்கள், மரம், செடி, கொடி போன்றவைகளை இழந்து கான்க்ரீட் காடுகளாகி வருவது குருவிகள் வாழ்விற்கு ஏற்றதாக இல்லையாம்.
* குளம், குட்டை போன்றவை மறைந்ததால் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
* ஒலி மாசும் ஒரு பெரிய எதிரியாக சொல்லப்படுகிறது.
* அலைபேசிக் கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினாலும் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுகின்றனவாம்.
* கிராமங்களில் விவசாய நிலங்கள் குறைவதால் சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரிதாகி இவை அழிகின்றனவாம்.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், ‘மீத்தைல் நைட்ரேட்’ எனும் ரசாயனக் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் அழிகின்றனவாம்.
* இவையெல்லாவற்றையும் விட சிட்டுக் குருவிகள் அழிவிற்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றிக் கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தானாம். DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்குத் தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேரிடுகிறது எனப் பல பறவையியலாளர்கள் சொல்கின்றனர்.
ஆசிய நாடுகள் பலவற்றில் இதை உணர்ந்து சிட்டுக் குருவிகள் அழிவை தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இவற்றிற்கு தானியங்கள், நீர் வைக்க பரிந்துரைக்கப் படுகிறது. இவைகளுக்கு சிறு அட்டைப் பெட்டி, மரத்தாலான வீடுகளும் அமைக்கப்படுகிறது.

ஆசிய நாடுகளில் இதன் அழிவை தடுக்க இப்படிச் சில முயற்சிகள் நடந்து வந்தாலும், வேறு சில நாடுகளில் சிட்டுக் குருவிகள் பெருகாமல் இருக்க, இவைகளை அழித்து வருகின்றனர். குறிப்பாக நாம் வாழும் அமெரிக்க நாட்டில் இவை பெருமளவில் அழிக்கப் பட்டுள்ளன.

1850 ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இருபந்தைந்து ஜோடி சிட்டுக்குருவிகள் கொண்டு வரப்பட்டன. இவை அந்தக் காலத்தில் விவசாயத்தை பாதித்து வந்த புழுக்கள் சிலவற்றை ஒழிக்கப் பயன்பட்டன. சிட்டுக் குருவிகளின் வேகமான இனப்பெருக்கத்தால் 1900 தொடக்கத்திலேயே இதன் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட, அமெரிக்கப் பூர்வீகப் பறவைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அவைகளின் உணவையும், கூட்டையும் சிட்டுக் குருவிகள் அபகரிக்கத் தொடங்கி விட்டனவாம்.

மேலும், மனிதனுடனே சேர்ந்து வாழும் சிட்டுக்குருவிகள் தங்கள் வாழ்க்கையில் அதிக உரிமை எடுத்துக் கொள்வதாக அமெரிக்கர்கள் நினைக்கத் துவங்கினர். சிட்டுக் குருவிகள், வெண்டிலேட்டர்கள், புகைப் போக்கிகள், ஏர்கண்டிஷனர்கள் போன்ற இடங்களில் கூடுகள் கட்டி தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதாக நினைக்கத் துவங்கினர். அதனால் அலாரம் போன்ற மின்சார கருவிகளை பயன்படுத்தி, அவைகளின் கூடுகளையும், , குருவிகளை வேட்டையாடியும் அழித்தனர். பறவைகள், மிருகங்கள் வதைத் தடைச் சட்டமும் சிட்டுக்குருவிகள் போல் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட பறவைகளைப் பாதுகாப்பதில்லை.
இப்படிச் சிட்டுக்குருவிகள் உலகின் சில இடங்களில் தெரியாமலேயும், சில இடங்களில் தெரிந்தும் அழிக்கப் பட்டு வருகின்றன. வரும் நூற்றாண்டில் இதன் நிலைமை எப்படி மாறுமோ தெரியவில்லை ஆனால் சில ஆண்டுகளாக மார்ச் இருபதாம் தேதி ‘உலக சிட்டுக் குருவிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்ச் இருபதாம் தேதி வெளியில் சென்று பறவைகளைக் காண முடியாவிடினும், நமக்கு இயன்றதொரு தினத்தில் பறவைகளைக் கவனிக்கத் துவங்குவோம். ஒரு முறை கவனிக்கத் தொடங்கினால் நம்மையறியாமல் பறவைகள் மீது காதல் கொள்வோம்.
விடுதலையின் சின்னமாகப் பறவைகள், பலரால், பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்டுக் குருவியிடம் பாடம் கற்குமாறு பாரதியார் இப்படி எழுதியுள்ளார்.

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு
விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

பூர்வீகப் பறவை, தருவிக்கப்பட்ட பறவை என்ற பாகுபாடில்லாமல் அனைத்துப் பறவைகளிடமும் பாடம் கற்போம்.

–    ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad