ஒரே ஒரு சந்திரன்
1952 ஆம் ஆண்டு ராமச்சந்திரனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ‘அந்தமான் கைதி’, ‘ குமாரி’,
மற்றும் ‘என் தங்கை’. அந்தமான் கைதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரும் இளைஞன், தன் தந்தை, சிலரால் கொலை செய்யப்பட்டதை அறிந்து, அவர்களைக் கொன்று விடுகிறான். இதற்காக அந்தமான் சிறையில் தண்டனை பெரும் அவன், விடுதலையாகித் திரும்ப வந்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு, கயவர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணை மணந்து கொள்வதான புரட்சிக் கதை ‘அந்தமான் கைதி’. முக்கியப் பாத்திரத்தில் ராமச்சந்திரன் நடித்திருந்தாலும், மலையாள நடிகர் திக்குரிசி சுகுமாரனுக்கு அழுத்தமான பாத்திரம். ராமச்சந்திரனின் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாததாலும், வழக்கத்திற்கு மாறாக அவர் துன்பமுறும் பாத்திரத்தில் நடித்திருந்ததாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்து வந்த ‘குமாரி’ திரைப்படமும் அவருக்குக் கை கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து வந்த படம் ‘என் தங்கை’. நோயுற்ற தாய், கல்லூரியில் படிக்கும் தம்பி, சுட்டியான தங்கை கொண்ட குடும்பத்தைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றி வரும் இளைஞனின் பாத்திரம் ராமச்சந்திரனுக்கு. தாய் இறந்து விட, மாமன் ஒருவன் சூழ்ச்சி செய்து தம்பியைப் பிரித்து விடுகிறான். கடும் மின்னல் தாக்கி தங்கை பார்வையிழந்து விடுகிறாள். தங்கையைக் காப்பாற்றப் பல இன்னல்களை மேற்கொள்ளும் அண்ணன் இறுதியில் சமூகத்திடம் தோற்று தங்கையுடன் கடலில் இறங்கி மறைவது தான் கதை.
நிஜ வாழ்வில் ராமச்சந்திரனுக்குத் தங்கை இருந்ததாகவும், கும்பகோணத்துக்கு அவர்கள் வந்த பின்னர் நோய் வாய்ப்பட்டு அவர் இறந்து விட்டதாகவும், அந்த வடு அவர் மனதில் ஆழப் பதிந்திருந்ததால் இப்படத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தார் என்றும் சொல்லப்பட்டது.
‘என் தங்கை’ வெற்றிப் படமாக அமைந்தது. இதே சமயத்தில், ஏறக்குறைய இதே போன்ற அண்ணன் தங்கை உறவை மையமாகக் கொண்டு, சிவாஜி நடித்து, வெளிவந்த ‘பராசக்தி’ பெரும் வெற்றியைப் பெற்றது.
அடுத்த ஆண்டு வெளியான ஜெனோவா, நாம், பணக்காரி ஆகிய மூன்று படங்களில் ஜெனோவா மட்டுமே வெற்றி பெற்றது. முதலில் மலையாளத்தில் வெளியான ஜெனோவா சில மாதங்கள் கழித்து, தமிழில் வெளியானது. மலையாளிகளான எம்.ஜி. ராமச்சந்திரன், எம். எஸ். விஸ்வநாதன் இருவரும் ஜெனோவா மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமானார்கள். (எம்.ஜி.ஆர். நடித்த ஒரே மலையாளத் திரைப்படம் ஜெனோவா). இளவரசி ஜெனோவா மீது காதல் கொண்டு அவளை மணமுடிக்கும் சிப்ரஸோ, பகைவரை
அடக்கச் சென்று திரும்புவதற்குள், சூழ்ச்சி செய்து அரசியான ஜெனோவாவைத் துரத்திவிடுகிறார்கள் தீய குணம் கொண்ட அமைச்சர்கள்.
அவர்கள் சொல்லும் பொய்களை நம்பி விடும் சிப்ரஸோ, உண்மையறிந்து, எதிரிகளை அழித்து இறுதியில் மனைவி ஜெனோவாவுடன் சேர்வது தான் படத்தின் கதை. 1954 ல் வெளியான ‘மலைக்கள்ளன்’ ராமச்சந்திரனுக்கு ‘ஆக்ஷன் ஹீரோ’, ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது என்றால் அது மிகையில்லை.
ராபின் ஹூட், ஜோரோ ஆகிய கதாபாத்திரங்களை அடியொற்றி நாமக்கல் ராமலிங்கப் புலவர் புனைந்த கதைதான் மலைக்கள்ளன். அமைதியாக இருந்த விஜயபுரம் நாட்டில், திடீரெனக் கொலைகளும் கொள்ளைகளும் நடக்கத் துவங்குகின்றன. ஊரில் பல கொள்ளைகளை நடத்தும் மலைக்கள்ளனைப்
பிடிப்பது அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. மற்றொரு புறம், அப்துல் கரீம் எனும் இளைஞன் ஏழைகளுக்குப் பெரும் பொருளுதவி செய்து வாழ வைக்கிறான். பல சுவாரசியத் திருப்பங்களுக்குப் பின் அப்துல் கரீம் தான் மலைக்கள்ளன் என்பதும், ஊரை ஏய்த்துப் பணம் பறிக்கும் முதலாளிகளிடமிருந்து திருடி, ஏழைகளுக்குத் தந்து உதவுவது தான் அவனது நோக்கம் என்பதும் இறுதியில் புரிய வருகிறது. மேலும் சிறு வயதில் தொலைந்து போன குமாரவீரன்தான், தனது தாயைக் காப்பாற்ற அப்துல், மலைக்கள்ளன் போன்ற அவதாரங்களை எடுத்ததும் புலனாகிறது.
வீரம், சமூகப் பார்வை, காதல், தாய்ப் பாசம் எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்த இப்படம் ராமச்சந்திரனின் திறமைக்குப் பெருந்தீனியாக அமைந்தது. இப்படத்தின் சண்டைக் காட்சிகளும், பாடல்களும் மிகப் பெரிய பாராட்டுகளைப் பெற்றன. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பிரபலமடைந்தன. குறிப்பாக டி. எம்.சௌந்தர ராஜன் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ மற்றும் ‘தமிழன் என்றொரு இனமுண்டு’ ஆகியவை இன்றளவும் ரசிக்கப்படும் பாடல்களாக நிலைத்துள்ளன. தியாகராஜ பாகவதர், நாகேஸ்வரராவ், என்.டி. ராமாராவ், எம்.கே. ராதா போன்ற அந்நாளைய பெரும் நடிகர்களோடு மட்டுமே நடித்து வந்த பானுமதி ராமகிருஷ்ணா, முதன் முதலாக எம்.ஜி.ஆரின் நாயகியாக நடித்த படம் மலைக்கள்ளன். இவரது குரலும், நடனமும் படத்தின் வெற்றிக்கு உதவியது. மு. கருணாநிதியின் திரைக் கதையும், வசனங்களும் படத்துக்குப் பக்க பலமாக அமைந்திருந்தன.
மகத்தான வெற்றி பெற்ற இந்தப் படம், பின்னர் தெலுங்கு, மலையாளம்,
கன்னடம், ஹிந்தி மற்றும் சிங்கள மொழிகளில் வெளியாகி அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றது. தமிழ் மொழித் திரைப்படங்கள் பிரிவில் தேசிய விருதினைப் பெற்றது இந்தப்படம்.
அந்தமான் கைதி, நாம் போன்ற படங்களின் தோல்வியும், என் தங்கை, ஜெனோவா, மலைக்கள்ளன் போன்ற படங்களின் வெற்றியும் எம்.ஜி.ஆருக்கு, ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவியது. சமூகப் பார்வை, பொது நலனில் அக்கறை; அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் வீரம், தாய் / தங்கை பாசம், தூய்மையான காதல், இனிமையான பாடல்கள் – இவற்றைச் சரியான அளவில் கலந்து, சூழ்ச்சிகளை வீழ்த்தி இறுதியில் தருமமே வெல்லும் என்ற கருத்தைச் சொல்வது வெற்றிப் படமாக அமையும் எனும் சூத்திரத்தை ராமச்சந்திரன் புரிந்து கொண்டார். இந்தச் சூத்திரம் அவரது படங்களை மட்டுமின்றி இன்றளவிலும் பல படங்களை வெற்றி பெற வைத்துள்ளது.
– ரவிக்குமார்