எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்?
அமெரிக்காவில் ஆண்டு தோறும் மருத்துவத்துக்காக மட்டும் செலவிடப்படும் தொகை $3.2 ட்ரில்லியன். அதாவது தனி நபர் ஒருவருக்குச் சராசரியாக $10 ஆயிரம் டாலர்கள்; நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 18%. உலகிலேயே மருத்துவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு அமெரிக்காதான். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) கணக்குப்படி மருத்துவ நலனைப் பொறுத்தவரையில் அமெரிக்கா 37 ஆவது இடத்தில் தான் உள்ளது. அதாவது மற்ற நாடுகளை விடவும் அதிகம் செலவழித்தும், உடல் / மருத்துவ நலனில் பல வளர்ந்த, வளர்ந்து வரும், வளர்ச்சி பெறாத நாட்டு மக்களை விட மோசமான நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மக்கள், தாங்கள் செலவழிக்கும் தொகைக்கு நிகரான மருத்துவ நலனைப் பெறுவதில்லை. உண்மையில் மருத்துவத் துறையின் சிக்கலான செலவீனப் பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
மருத்துவமனைக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையில் நடக்கும் கணக்கு வழக்குகளைப் புரிந்து கொள்ளக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். என்றாலும் நாட்டின் அரசியலமைப்பையே மாற்றியமைக்கக் கூடிய அளவுக்குச் சிக்கல் வாய்ந்த பிரச்சனையின் அடிப்படைக் காரணங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
- நிர்வாகச் செலவு
அமெரிக்க நாட்டில் பல மருத்துவக் காப்பீட்டு நல நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் நோயின் வகை, அதனைக் கண்டறியும் முறை, அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் போன்றவற்றைக் குறிப்பிட, எண் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தக் கணினிக் குறியீடுகள் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணத்துக்கு, ஒற்றைத் தலைவலிக்கான குறியீடு சிக்னா (Cigna) காப்பீட்டு நிறுவனத்துக்கும், ஹுமானா (Humana) காப்பீட்டு நிறுவனத்துக்கும் மாறுபடுகின்றது. அது மட்டுமில்லாமல் சிகிச்சையின் உட்பிரிவு, கடுமையைப் பொறுத்துக் குறியீடுகள் மாறுபடுகின்றன. இதனால் பல சமயங்களில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவத்தின் செலவை விட, அவரது மருத்துவத்துக்கான செலவுகளைக் கணக்கிடும் பணிக்கும், அதனைக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் பணிக்குமான செலவுகள் அதிகமாகி விடுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவர் 20 நிமிடங்கள் சோதித்து அளிக்கும் சிகிச்சைக்கு, பின்புலத்தில் எழுத்தர்கள் நான்கைந்து மணி நேரம் செலவிட வேண்டியுள்ளது. கோ பேமண்ட் (co payment), டிடக்டபில் (deductible), கோ இன்ஸ்யூரன்ஸ் (co insurance) என்று சாமானியரால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மருத்துவக் குறியீடுகள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும், காப்பீட்டு வகைகளுக்கும் மாறுபடுகின்றன. ஹார்வர்டு பல்கலையில் பொருளியல் துறைப் பேராசிரியரான டேவிட் கட்லர் “மருத்துவத் துறையில் நிர்வாகச் செலவு பூதாகாரமாக உள்ளது; மொத்த மருத்துவச் செலவின் கால் பங்கு (1/4) நிர்வாகத்தின் கணக்கிடும் முறைகளுக்கு செலவிடப்படுகிறது” என்கிறார். 900 நோயாளிகள் படுக்கும் வசதி கொண்ட வட கரோலினா, ட்யூக் பல்கலை மருத்துவமனையில், 1300 கணக்கர்கள் இடைவெளியின்றிப் பணியாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக் காண்பிக்கிறார். கனடா போன்ற பல வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, பொதுவான கணக்கிடும் முறைகள் (single payer system) பெருமளவில் மருத்துவ நலன் செலவுகளைக் குறைக்கும் என்று கூறுகிறார் டேவிட். போதாக்குறைக்கு இந்நிறுவனங்கள் அளிக்கும் காப்பீட்டை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் இடைத்தரக நிறுவனங்கள் தங்கள் பங்கையும் சேர்த்து நம்மிடம் வசூலிக்கிறார்கள். நிர்வாகச் செயல்பாட்டை எளிமைப்படுத்துதல் கணிசமான அளவிற்கு மருத்துச் செலவைக் குறைக்கும்.
- மருந்துகளின் விலை
மற்ற நாடுகளை போல மருந்துகளின் விலையில் அமெரிக்க அரசாங்கம் தலையிடுவதில்லை. மெடிக்கைட் (Medicaid), மற்றும் இராணுவ மேலாண்மை (Veterans Administration) ஆகிய இரண்டு பிரிவுகள் மட்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, மானிய விலையில் மருந்துகளைப் பெறுகின்றன. மெடிக்கேர் (Medicare) பயனாளர்கள் உட்பட மற்றவர்கள் பயன்படுத்தும் மருந்துகளின் விலைகளை மருத்துவ நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. பல மருந்து நிறுவனங்கள் (Pharmaceuticals) தாங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்கான ஆய்வுச் செலவை ஈடுகட்ட 20 வருட காப்புரிமையைப் (patent rights) பெறுகின்றன. இந்த 20 வருட காலங்களுக்கு மற்ற நிறுவனங்கள், அதற்கு இணையான மருந்தினைத் தயாரிக்க முடியாது. இருபது ஆண்டுகள் முடியும் வரை அந்நிறுவனம் விதிப்பது தான் விலை. மற்ற நாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்யவும் வழியில்லை. பிற நாடுகளில் இல்லாத வகையில், மருந்து நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர முயல்கின்றன. “உங்கள் மருத்துவரிடம் எங்களது மருந்தைப் பற்றிக் கேளுங்கள்” என்று பல நிமிடங்கள் ஓடும் விளம்பரச் செலவுகளும், வர்த்தக மேம்பாட்டுச் செலவுகளும் மருந்துகளின் மீது சுமத்தப்பட்டு, மருந்து மாத்திரை விலைகளைப் பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.
- தற்காப்புத் தன்மை
அற்பக் காரணங்களுக்காகவும், மருத்துவச் சக்திக்கு அப்பாற்பட்ட தோல்விகளுக்காகவும் மருத்துவர்கள் மீதும், மருத்துவ மனைகள் மீதும் வழக்குத் தொடுத்தல் அவர்களைக் கூடுதல் தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. இதனால் மருத்துவர்களுக்கு நோயின் முழுத் தன்மை புரிந்தாலும், சிகிச்சை செய்யத் தெரிந்திருந்தாலும் அவர்களே நேரிடையாக வைத்தியம் மேற்கொள்ளாமல் சிறப்பு மருத்துவர்களைச் சிபாரிசு செய்கின்றனர். அல்லது தங்களது புரிதல் / சிகிச்சை பற்றி, பின்னர் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் வருமென்ற அச்சத்தால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தேவையற்ற வருடிச் சோதனை (Scan), காந்த ஒத்திசைவுப் பரிசோதனை (MRI) போன்ற பல மருத்துவச் சோதனைகளைப் பரிந்துரைத்து, தங்களது சிகிச்சைகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர் .
மேலும் நோயைத் தீர்க்க எந்த மருந்து எந்த அளவில் தேவை என்று நன்றாகத் தெரிந்தாலும், பக்க விளைவுகள் ஏற்பட்டு சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் மிக மிகக் குறைந்த அளவில் தொடங்கி, மருந்துகளை நெடுநாட்கள் உட்கொள்ளச் செய்கின்றனர். மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் மேற்கொள்ளும் இந்தத் தற்காப்புச் சிகிச்சை முறையால் மட்டும் அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு $650 பில்லியன் கூடுதலாகச் செலவாகிறதெனச் சொல்லப்படுகிறது
.
- வர்த்தக / நவீன மயமாக்கம்
இன்றைய மருத்துவத் துறையில் வர்த்தக நோக்கம் தலைதூக்கியுள்ளது. மருத்துவமனைகளின் அந்தஸ்தை உயர்த்தவும், போட்டி மருத்துவமனைகளிலிருந்து தனித்து நிற்கவும் பளபளக்கும் கட்டிடங்களும், அதி நவீனக் கருவிகளும் நிறுவப்படுகின்றன. பெரிய மருத்துவமனைகள் தங்கள் ‘பிராண்ட்’ டைப் பதிய வைக்க, சிறிய மருத்துவமனைகளை அபகரிக்கின்றன. இதனால் போட்டிகள் குறைந்து, மருத்துவ வர்த்தகம் கொழிக்கிறது.
- மருத்துவர்களின் ஊதியம்
பல பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஊதியங்கள் விண்ணை முட்டுமளவுக்கு உள்ளன. ஒரு வேளை யாராவது, எந்தக் காரணத்துக்காகவாவது வழக்குத் தொடுத்தால் அதனைச் சமாளிக்க ஆகும் சட்டச் செலவையும் இவர்கள் தங்கள் ஊதியத்தில் சேர்க்கின்றனர். சிறப்பு மருத்துவர்கள் தங்கள் ஊதியத்தை மருத்துவமனைகளிடம் பெறுவதில்லை. மாறாக அவர்கள் நேரிடையாகக் காப்பீட்டுக் கழகத்திடமிருந்தோ, நுகர்வோரிடமிருந்தோ வசூலிக்கின்றனர். இதனை வசூலிக்க, இடைத்தரக வசூல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது போன்ற பல காரணங்களால், அமெரிக்காவில் மருத்துவ நலனுக்கான செலவு ஆண்டுதோறும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளும், மருத்துவ முன்னேற்றங்களும் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அவை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
– ரவிக்குமார்
Tags: ACA, Healthcare, single payer system, WHO, மருத்துவமனை, மருந்து