பகுத்தறிவு – 8
மந்திரங்கள் ஓதுவதாலோ, சடங்குகளை முறையாகச் செய்வதினாலோ எல்லா விளைவுகளும் மாறி அமைந்துவிடுமா என்றால், அமையாது என்பதே பதிலாகும். இதனைச் சொல்லக் கேட்கையில், ஒரு நாத்திகரின் வாதம்போல் இருக்கிறதல்லவா? இதுவரை அப்படித் தெரிந்தாலும், நாத்திகர்களால் ஒரு செயலின் விளைவு எதிர்பார்த்தபடி இல்லாததன் காரணமென்ன என்றால் அறிவுபூர்வமாக விளக்க இயலாது. ஆனால், அதனையும் தொடர்ந்து அறிவியல் நோக்கோடு விளக்குவதே ரமணரை மகரிஷி நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
ஒரு கட்டிடத்தின் மாடிக்குச் செல்வதற்காகத்தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரேனும் படிகளிலேயே தங்கிவிடுவார்களா? மந்திரங்களும், சடங்குகளும், பழக்க வழக்கங்களும் அந்தப் படிகளைப் போன்றவை, மேல்மாடியை அடைய பலருக்கும் தேவைப்படுபவை. ஆனால், அங்கேயே தங்கிவிடுவது, அதாவது காலம் முழுவதும் சடங்குகள் செய்து கொண்டிருப்பது, என்பது அறிவுபூர்வமான செயலாக இருக்க முடியாது. அதேபோல், ஒரு சிலர் அந்தக் கட்டிடத்தில் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமல் அமைந்திருக்கும் லிஃப்ட் மூலமாகக் கூட மேல்மாடிக்குச் சென்றுவிடக்கூடும். இங்கு லிஃப்ட் என்பது ஞானமார்க்கத்திற்கு ஒப்பீடாகக் குறிப்பிடப்படுவது. ஞான மார்க்கம் என்பது பக்தி மார்க்கத்திற்கு எதிரானதல்ல. பெரிதாகக் கேள்வி கேட்காமல், ஆராய்ச்சி செய்யாமல் பெரியவர்கள் சொன்னால் நன்மைக்காகவே இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பக்தி மார்க்கம் என விளக்கலாம். அவ்வாறில்லாமல், பெரியவர்கள் சொன்னாலும் இவற்றிற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும், என விளக்கமறிய விடாது முயல்வது ஞான மார்க்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றாகும். இது போன்ற எந்த முயற்சியுமே இல்லாது, கண்ணை மூடிக்கொண்டு இவையனைத்தும் மூடநம்பிக்கை என்பது நாத்திகமாகும்.
பக்தி மார்க்கப் படிகளைப்பற்றி ஏதும் அறியாது, கட்டிடத்தின் மறைவில் சிலர் கண்ணுக்கு மட்டுமே தெரிகின்ற ஒரு லிஃப்ட்டில் ஏறிச் சென்றவராகையால், எவருக்கும் ஒரு மந்திரத்தையோ, ஸ்லோகத்தையோ, சடங்கையோ, பரிகாரத்தையோ ரமணர் கற்றுக் கொடுக்கவில்லை. கற்றுக் கொடுக்கவில்லை என்பதைவிட, அவருக்கே அவற்றுடன் அறிமுகமில்லை என்பதுதான் நிஜம்.
ரமணர் குகைகளில் வாழ்ந்திருந்த காலத்தில், அவரை அக்கறையுடன் காத்து வந்த பக்தர்களுள் மிகவும் முக்கியமானவர் சிவசுப்பிரமணிய பிள்ளை அவர்கள். பிள்ளை அவர்கள் பல முறை பல தத்துவ ஞான விளக்கக் கேள்விகளை ரமணரிடம் கேட்பார். நாம் ஏற்கனவே எழுதியிருந்ததைப்போல், ரமணர் பல முறை பதில் பேசாதிருந்துவிடுவார். சிலமுறை சுருக்கமான பதிலளிப்பார். இவை தவிர, சிலமுறை மணலிலோ, சிலேட்டிலோ அல்லது சிறு சிறு காகிதங்களிலோ கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை எழுதித்தருவதும் அவரது வழக்கமாக இருந்திருக்கிறது. இதுபோல எழுதித் தரப்பட்ட பல பதில்களையும் பொறுப்புடன் சேகரித்து வைத்திருந்த சிவசுப்பிரமணிய பிள்ளை, பல வருடங்களுக்குப் பின்னர் ரமணரின் மேல் இயற்றப்பட்ட “ரமண சரித அகவல்” என்ற பாடல் தொகுப்பின் பின்பகுதியாக, அவற்றை “நானார்” எனும் பேரில் வெளியிட்டார். ”நான் யார்” என்பதன் அன்றைய வார்த்தைப் பிரயோகமே “நானார்” என்பதாகும். இது புத்தகமாக வெளி வந்த பத்து வருடங்களுக்குள் பல்வேறு பதிப்புக்கள், வெவ்வேறு எண்ணிக்கையிலான கேள்வி பதில்களுடன் வெளியிடப்பட்டிருந்தன. அதன் பின்னர் ரமணரே எழுதிய, கட்டுரை வடிவமான நூலே ஆதாரபூர்வமானதாகக் கருதப்படுகிறது.
இருபதுக்கும் மேற்பட்ட பத்திகளைக் கொண்ட இந்தப் பதிப்பு, “சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்குச் சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை அடையதன்னைத் தானறிதல் வேண்டும். அதற்கு நானார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.” என்ற முதல் பத்தியுடன் தொடங்குகிறது. ரமணரின் சொந்தத் தமிழ்நடை இதுவாகும். சற்றுப் பழைய, வடமொழி கலந்த தமிழாக இருப்பினும், சற்றே கவனத்துடன் படித்திடின் அனைத்தும் நேரடியாக விளங்கிடும்.
“ஆத்ம விசாரம்” என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்படும் தன்னை அறிந்து கொள்ளும் முயற்சியே ஞான மார்க்கத்தின் முதல் படி என்கின்றனர் பல அறிஞர்கள். ரமணரும் இதனையே “ஞான விசாரம்” என்று குறிப்பிட்டு, பல வழிகளில் நமக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கிறார். நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்றால், எழுதிக் கொண்டிருக்கும் “நான் யார்?” என்பதே இந்த ஆத்ம விசாரத்தின் ஆரம்பம். நான் என்பது இந்த உடல் என்று நினைத்துக் கொள்வது அடிப்படை எண்ணமாகக் கொள்ளலாம். அந்த உடல்தான் நானென்றால், ஒரு நாள் உடலம் சடலமாகப் போகிறதே, அப்பொழுது இதனை எடுத்து எரிப்பார்களே, அப்பொழுது ’நான்’ என்பது அழிந்து விடுகிறதா? என்னைச் சுற்றி இருப்பவர்கள் துயரத்தால் அழுவார்களே, இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது எது? என் உடலை எரிக்கிறார்கள் என்று சொல்கையில், அந்த “நானில்” உடலைவிட்டு வெளியே எதுவோ இருப்பதைப் போலத் தோன்றுகிறதல்லவா? ஒரு வேளை நான் என்பது உடலை விட்டு வேறெதனையோ குறிப்பிடுகிறதோ? சரி ‘நான்’ என்பது உடல் மட்டுமில்லை, அதனில் உறையும் உயிரெனவும் கொள்ளலாம். ஆனால், அந்த உயிரைப் பார்க்க இயலவில்லையே? கண்ணால் பார்க்க இயலாததை, இருக்கிறது என்று ஒப்புக் கொள்வது எவ்வாறு?
பிறகு எதைத்தான் ‘நான்’ என்று குறிப்பிடுவது? இதற்கு விடையாய் ரமணர் தெளிவாய் விளக்குவது, “அறிவு ஒன்றே நான்” என்பதே. அறிவு என்பதற்குத் தற்பொழுது சாதாரணப் பயன்பாட்டிலுள்ள புத்திசாலித்தனம் என்று பொருள் கொள்ளலாகாது. இதற்குப் பல தத்துவார்த்தமான பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன தெளிவு, உணர்தல், விளங்கிக் கொள்ளுதல் போன்றனவும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக ‘விழிப்புணர்வு’ என்ற பொருளையும் கொள்ளலாம். இன்னும் பல பொருட்களைச் சொல்லலாம். தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஆங்கில அர்த்தங்களையும் பார்க்கலாம். Knowledge, awareness, consciousness, wisdom, intelligence, learning, sensory perception எனப் பல வகையிலும் விளக்கலாம். ”அறிவே நான்” என்ற இரண்டு எளிய வாசகங்களால் ரமணர் விளக்குவது, மனிதனின் உண்மையான, இயற்கையான உள்ளுணர்வு என்பது அவரின் அடிப்படை அறிவு அல்லது விழிப்புணர்வே ஆகும். நாம் நம் அனுபவங்களைப் பாரபட்சமின்றி ஆராய்ந்து நோக்கின் இதே முடிவுக்கே வரவேண்டியிருக்கும்.
சரி, இந்த விழிப்புணர்வின் குணங்கள்தான் என்ன என்ற அடுத்த கேள்வியைக் கேட்கிறோம். அதற்கு ரமணர், அந்த விழிப்புணர்வின் இயற்கை என்பதே ”சத்-சித்-ஆனந்தம்” என்று விளக்குகின்றார். இன்றைய வழக்குத் தமிழில் இதனை, சச்சிதானந்தம் என்று குறிப்பிடுகிறோம். ‘சத்’ என்பது ‘இருக்கும் நிலை’ (being) ’சித்’ என்பதற்கு ‘விழிப்புணர்வு’ என்று பொருள். மற்றும் ‘ஆனந்தம்’ என்பதற்கு ‘களி’ அல்லது நீங்காத பேரின்பம் என்று பொருள். இருக்கும் நிலையை விழிப்புணர்வு நிலையில் எப்பொழுதுமே வைத்திருத்தல் ஆன்மாவிற்கு, உயிருக்கு நீங்காத பேரின்பம் தரும் என்பதையே, சச்சிதானந்தம் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் தத்துவ விளக்கமாகக் குறிப்பிடுகிறார் ரமணர்.
(தொடரும்)
– வெ. மதுசூதனன்.
Tags: பகுத்தறிவு, ரமணர்