\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குரங்கு பொம்மை

Filed in திரைப்படம் by on September 24, 2017 0 Comments

தமிழ் சினிமாவின் போக்கும், வளர்ச்சியும் அந்தந்தக் காலக்கட்ட இயக்குனர்களின் வரவைப் பொறுத்தே அமைந்துள்ளது. மேடை நாடகப் பின்னணியில் இருந்த வந்த இயக்குனர்கள், இலக்கியத் துறையில் இருந்து வந்த இயக்குனர்கள், ஃப்லிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து வந்த இயக்குனர்கள், பிரபல இயக்குனர்களிடம் பாடம் பயின்ற இயக்குனர்கள் எனப் பலவகை இயக்குனர்களிடம் இருந்து பலவகைச் சினிமாக்களை நாம் கண்டிருக்கிறோம். தற்சமயம் நாம் காண்பது சின்னத்திரை குறும்படப் போட்டியில் ஜொலித்த யூ-ட்யூப் இயக்குனர்களின் படைப்புகளை.

இவர்களிடம் பெரிய நடிகர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை, தங்களுடன் பயணித்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து சினிமாத்துறையில் இறங்கி விடுகிறார்கள். இவர்கள் கதை இல்லாமல் படம் எடுப்பதில்லை. சுருங்க கதை கூறுவதில் தேர்ச்சி பெற்றிருப்பதால், சுவாரஸ்யமாகக் காட்சிகள் அமைத்திடுவார்கள். சில நேரங்களில் குறும்படக் கதையைத் திரைப்பட நீளத்திற்கு நீட்டி முழக்குவதால் ஜவ்வாகி விடும் அபாயத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, பாலாஜி மோகன், அருண்குமார், ரவிக்குமார் என இவர்கள் ஆரம்பித்து வைத்த திரை அலை தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கியமானது. அதே சமயம், இவர்கள் முதல் படத்தில் கிடைக்கப்பெற்ற கவனிப்பையும், வெற்றியையும் அடுத்தடுத்த படங்களில் தக்க வைப்பதில் சிரமப்படுவதையும் நாம் காண வேண்டி இருக்கிறது.

இந்த வரிசையில் தற்சமயம் “குரங்கு பொம்மை” படத்தின் மூலம் அறிமுகமாகி இருப்பவர், இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் இவர் இயக்கிய குறும்படங்கள் மூலம் கவரப்பட்ட நடிகர் விதார்த், தான் தயாரிக்கவிருந்த திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பை அளித்தார். விதார்த்தின் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கது. இதற்குத் திரைமொழியின் நுட்பங்களைக் கவனித்து, அப்படைப்பு இறுதியில் அடையக் கூடிய வடிவம் குறித்த அவதானிப்பு திறன் முக்கியமாகத் தேவை. விதார்த் நடித்து வரும் திரைப்படங்களைக் காண்கையில் அத்திறன் அவருக்கு இருப்பதாகப்படுகிறது (வீரத்தை விட்டுத் தள்ளுங்கள்!!). இது அவர் உடன் இருப்பவர்களின் பங்களிப்பாகவும் இருக்கலாம், தற்செயல் நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.

சரி, நாம் குரங்கு பொம்மை படத்தைப் பற்றி பார்க்கலாம். விதார்த்தின் தந்தை பாரதிராஜா, தஞ்சையில் சிலைக்கடத்தல் தொழில் புரியும் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார். ஆனால், அவர் ஒரு அப்பிராணி. ஒரு வேலைக்காகத் தேனப்பன் பாரதிராஜாவை சென்னைக்கு ஒரு பையுடன் அனுப்பி வைக்கிறார். குரங்கு படம் போட்ட அந்தப் பை, இப்படத்தின் கதாபாத்திரங்களை இயக்கும் கருவியாக இருக்கிறது. சென்னைக்கு வரும் பாரதிராஜா, மற்றொரு கிரிமினலான இளங்கோ குமாரவேலிடம் மாட்டுகிறார். ஒரு பக்கம் விதார்த் தந்தையைத் தேடியலைய, இன்னொரு பக்கம் முதலாளி கம் நண்பனான தேனப்பன் சென்னை வருகிறார். அதன் பிறகு, என்ன நடக்கிறது என்பதைப் பகீரென்று காட்டி மனதைப் பிசைய விட்டு முடிக்கிறார்கள்.

ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லையென்றாலும், ரத்தம் வடியும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தைக் குடும்பத்துடன் காண முடியாது. பணத்திற்காக எதையும் செய்யும் மனிதர்கள் மத்தியில் பாசமும், நட்பும் என்னென்ன செய்யும் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர். குரங்கு படம் போட்ட அந்தப் பை, குரங்கைப் போல் பலர் கைகளுக்குத் தாவி தாவி செல்கிறது. அதனுள் இருக்கும் பொருளும் பலவாறாக மாறுகிறது. அதில் என்ன இருக்கிறது என்ற எதிர்பார்ப்பே, படத்தின் விறுவிறுப்புக் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

கதாநாயகனாக விதார்த் நடித்திருந்ததாலும், கதை பாரதிராஜாவைச் சுற்றியே நகருகிறது. குமாரவேலுக்கும், தேனப்பனுக்கும் கூடப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். விதார்த்தை விட இவர்களுக்கு நடிக்க அதிக ஸ்கோப். இப்படிப்பட்ட கதையில் நடிக்க முடிவு செய்து, அதைத் தயாரித்ததற்கு விதார்த்திற்கு மீண்டும் பாராட்டுகள். பாரதிராஜாவின் மேடைப் பேச்சினைக் கேட்கும்போது, அதன் ஒரு பாமரத்தனமும், அந்தக் காலப் பெருமிதம் ஒன்றும் வெளிப்படும். அந்தப் பாமரத்தனத்தை இதில் இயக்குனர் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். அதில் அப்பாவித்தனத்தை இணைத்திருப்பதின் மூலம் அவர் மேல் ஒரு பரிதாபத்தையும், அவரின் நிலை மேல் பரிதவிப்பையும் பார்வையாளர்களிடம் உண்டு செய்கிறார்கள். இவ்வளவு நல்லவர் எப்படித் தொடர்ந்து தேனப்பனிடம் வேலை பார்க்கிறார் என்பதை இறுதியில் பாரதிராஜாவே கதை வடிவில் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

படத்தின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் இளங்கோ குமாரவேல். இவ்வளவு கொடூரமான கேரக்டரில் இவர் இதுவரை நடித்ததில்லை. இவர் அறிமுகம் ஆகும் காட்சியில் கிரிக்கெட் விளையாடுகிறார். அடுத்து வரும் முக்கியக் காட்சிகளில் எல்லாம் அந்த பேட்டும், ஸ்டம்ப்ஸும் இவருக்குக் கைக் கொடுத்து, இறுதியில் அதுவே இவருக்குத் தண்டனையைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி இயக்குனரின் காட்சியமைப்பு ரசிக்க வைக்கிறது. படத்தின் வசனங்களும் நம்மைக் கவரும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

டெல்னா டேவிஸ் என்பவர் படத்தின் நாயகியாக ஆரம்பக் காட்சிகளில் வந்து செல்கிறார். பார்ப்பதற்கு ஆரம்பக் கால ஓவியா போல் இருக்கிறார். தனித்துத் தெரியாமல் நாம் தெருவில் பார்க்கும் சாதாரணப் பெண் போல் இருப்பது படத்திற்குப் பலம். ஆனால், பாதிப் படத்திற்கு மேல் இவர் என்னவாகிறார் என்று தெரியவில்லை. ஒரே ஒரு காட்சியில் கஞ்சா கருப்பு வருகிறார். அதற்குப் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குச் சென்று விட்டாரோ என்று நினைக்க வைப்பதைப் போல் காணாமல் போகிறார். இப்படிப் பல காட்சிகள், கதாபாத்திரங்கள் தொடர்பில்லாமல், முடிவில்லாமல் நின்று போகிறது. படத்தின் நீளமும் கம்மியே. இது ஒரு வகையில் படத்தின் சுவாரஸ்யத்தைச் சிதைக்காமல் இருப்பதால் நன்மையே. படத்தின் சீரியஸ்னஸை மொக்கை பிக்பாக்கெட்காரனாக வருபவர், காமெடி செய்து கொஞ்சம் சமன்படுத்தினாலும்,  அவருடைய கேரக்டர் படத்திற்கு ஒட்டாமல் உள்ளது.

கன்னடத் திரைப்படங்களில் இசையமைத்து வந்த அஜனீஷ் லோக்நாத் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். பாடல்கள் சிறப்புடன் இல்லாவிடினும் பின்னணி இசையில் மிளிர்கிறார். இவர் இசையை அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் மேலும் கேட்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

கதையின் இருண்மையும், இறுதியில் நிகழும் வெட்டுக்குத்துக் காட்சிகளும் குடும்பத்துடன் காண ஒவ்வாதவை. மற்றபடி, வித்தியாசமான கதைக்களங்களைக் காண்பதில் ஆர்வமுள்ள திரைப்பட ரசிகர்களைத் திருப்தியுறச் செய்யும் படமிது. அவ்வகையில் கவனிக்கத்தக்க இயக்குனராக இதில் அறிமுகமாகியுள்ளார் நித்திலன். அவருக்கு நமது பாராட்டுகள்.

குரங்கு பொம்மை – குற்றங்களின் வெம்மை.

– சரவணகுமரன்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad