மர்மக் குகை (Mystery Cave)
பேரைக் கேட்டால் ஏதோ பலான ஆங்கில டப்பிங் படம் போல் தெரிந்தாலும், இந்தப் பெயரில் மினசோட்டாவில் ஒரு குகை இருக்கிறது. பயப்படத் தேவையில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பமாகச் சென்று வரக் கூடிய இடம் தான்.
மினசோட்டா ஒரு விசித்திரமான பிரதேசம்தான். மேலே பல ஏரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்றால், மண்ணுக்குள்ளும் பல அதிசயங்களை வைத்திருக்கிறது. முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், பூமியின் அடியில் அருவியும், ஏரி போன்ற நீர்நிலையும் உள்ள பிரதேசம் இது. நயாகரா குகையில் அருவியும், இந்த மிஸ்ட்ரி குகையில் ஒரு சிறு ஏரியும் உள்ளன.
ஃபாரஸ்ட்வில் மிஸ்ட்ரி கேவ் (Forestville/Mystery cave) என்னும் இந்த ஸ்டேட் பார்க், ட்வின் சிட்டிஸில் இருந்து சுமார் 120 மைல்கள் தொலைவில் உள்ளது. ஜிபிஎஸ்ஸை மட்டும் நம்பி வண்டி ஓட்ட வேண்டாம். ரோட்டு சைன் போர்டு பார்த்து செல்லவும். மிஸ்ட்ரி கேவ் என்று போர்டு காட்டும் திசையில் செல்லவும். ஃபாரஸ்ட்வில் என்பது ஒரு பழமையான சிற்றூர். தற்சமயம் யாரும் வசிப்பதில்லை. நூறு வருடங்களுக்கு முன்பே இந்த ஊரில் வசித்த கொஞ்சநஞ்ச பேரும் கிளம்பிவிட்டனர். தற்சமயம் வெறும் கட்டிடங்கள் சிலவும், ஒரு பாலம் மட்டும் இந்த ஊரில் தனியே வசித்து வருகிறது. பார்க்க விருப்பப்பட்டால் சென்று பார்க்கவும். ஆளே இல்லாத ஊரில் ஒருத்தர் டீ ஆத்திக்கொண்டிருக்கிறார் (நம்மைப் போன்ற டூரிஸ்ட்டுகளுக்காக!!).
மர்மக் குகை (Mystery Cave)
சரி, நாம் மர்மக்குகையைக் கவனிப்போம். 1937 இல் ஜோசப் பெட்டி (Joseph Petty) என்னும் உள்ளூர்வாசி, இங்கிருக்கும் ஆற்றங்கரையோரம் ஒரு குளிர்காலத்தில் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு இடத்தில் பனி சேராமல், மண் வெப்பமாக இருப்பதைக் கண்டார். பூமியின் அடியே இருக்கும் குகையில் இருந்து வெளிவரும் வெப்பக்காற்றால், அந்த இடத்தில் பனி படியாமல் இருப்பதை உணர்ந்த ஜோசப், மண்ணைத்தோண்டி உள்ளே குகைக்குள் இறங்கி அதை விரிவாக்கினார். மக்களுக்கு ஒரு டூர் போல், அதைக் காட்ட தொடங்கினார். மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு, அவரிடம் இருந்து 1988இல் மாநில அரசு இந்த இடத்தை வாங்கிப் பராமரிக்கத் தொடங்கியது. மக்கள் பாதுகாப்புடன் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக, கைப்பிடிமானம் கொண்ட பாதைகள் போடப்பட்டு, இந்த இடத்தைப் பற்றிய தகவல்களைக் கூறும் பலவகை டூர்கள் நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு இவ்வகை டூர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தக் குகை எப்போதும் ஒரே சீரான தட்பவெப்பத்தில் இருக்கிறது. வெளியே வெயில்காலமோ, குளிர்காலமோ, உள்ளே எப்போதும் 48 டிகிரி தான். அதனால், வெயில்காலம் என்றாலும் இங்குச் செல்லும் போது, ஜாக்கெட் எடுத்துச் செல்லவும்.
இது தான் மினசோட்டாவின் நீளமான குகைப் பாதை. சுமார் 13 மைல்கள் தொலைவுக்கு இருக்கும் இந்தக் குகைப்பாதையில், 1 மணி நேர அளவில் சுற்றி பார்க்கக்கூடிய டூர் இருக்கிறது. உள்ளே இருக்கும் நீர் நிலைகள், விதவிதமான பாறைகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது. முக்கியமாக, இங்கிருக்கும் நீலபச்சை ஏரியைக் (Turquoise Lake) குறிப்பிட வேண்டும். அவ்வளவு அழகு. சிறு நீச்சல் குளம் அளவில் இருக்கும் இந்த ஏரி பச்சை நீலக்கலரில் மின்னுவதால் இந்தப் பெயர் வைத்துள்ளார்கள். இந்த நீரில் கரைந்திருக்கும் கால்சியம் கார்போனைட் இந்த நீல வண்ணத்திற்குக் காரணம் என்பது உபரித்தகவல்.
இங்கு இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒளி அமைப்பு, ஒரு கலை அம்சத்துடன் அமைந்துள்ளது. ஆனால், அது ஒரு செயற்கைத்தனத்தைக் கொடுப்பதாக உள்ளது. எந்தக் கல்லையும் தொட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். ஒரு இடத்தில் லிங்கம் போன்ற வடிவத்தில் ஒரு கல்லைக் காண முடிந்தது. இதுவே, நம்மூராக இருந்தால், இந்தக் குகையின் நிலை என்னவாக இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறது.
ஒரு இடத்தில் நம்மை நிற்க வைத்து, அனைத்து விளக்குகளையும் அணைத்து, இருட்டு என்றால் என்ன என்பதைக் காட்டுகிறார்கள். குகைகளை ஆய்வுச் செய்பவர்களின் வேலை எப்படி இருக்கும் என்ற பிரமிப்பை, அந்த நேரத்தில் அந்த இருட்டு நமக்குப் புரிய வைக்கிறது.
இந்த ஸ்டேட் பார்க் அமைந்திருக்கும் ஃபில்மோர் கவுண்டி (Fillmore County), பாதாளப் பள்ளங்களுக்கு (sinkholes) பேர் போனது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளங்கள் இந்த நிலப்பரப்பில் உள்ளன. இன்னொரு சமயம், இவற்றைச் சென்று பார்க்க வேண்டும். அப்போது, இந்தக் குகைக்கும், இது போன்ற பள்ளங்களுக்கும் இருக்கும் தொடர்பை நாம் காணலாம்.
மேலும் தகவல்களுக்கு,
https://dnr.state.mn.us/state_parks/forestville_mystery_cave/index.html
- சரவணகுமரன்
Tags: Mystery Cave, மர்மக் குகை