வாசகர்களுக்கு வணக்கம் !
உங்களனைவரையும் இந்தத் தலையங்கத்தின் மூலம் மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தப்பாமல் தட்ப வெப்ப நிலை மாறுவது இயற்கையாய் நடக்கும் ஒன்றே. அதேபோல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பனிப்பூக்களில் எங்களின் தலையங்கங்கள் வெளியிடப்படுவதும் தவறாமல் நிகழ்கிறது. வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து இயற்கையில் எழிலைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எழும் எண்ண ஓட்டங்கள் அற்புதமானவை. இயற்கைக்குத்தான் எவ்வளவு திறமை? பூமிப் பந்து உருளுவதற்கு ஒப்ப, உலகின் பல பகுதிகளையும் பல்வேறு சீதோஷண நிலையில் வைத்திருக்கும் இயற்கையின் சக்தி அசாத்தியம். இதனை இயற்கை என்று அழைப்பவரும் உண்டு, கடவுளென்று வழிபடுபவரும் உண்டு.
பகலினில் ஒளிரும் கதிரவனையும், பாங்காய் வீசும் காற்றினையும், காலத்தில் பொழியும் மழையையும், காரிருளில் ஒளிர்ந்திடும் நிலவினையும் இன்னும் பல இயற்கையாய் நடந்திடும் நிகழ்வுகளையும் இறையெனப் போற்றிடுவர் ஆத்திகர்கள். இவற்றை மேலிருந்து ஒருவன் அனுப்பி வைக்கிறான், நடத்தி வைக்கிறான் என்றெல்லாம் நம்புபவரும் உண்டு. இவையெல்லாம் தானே இயங்குகின்றன, இதற்கும் கடவுளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பவரும் உண்டும். இன்னும் சொல்லப்போனால், அந்த இரண்டாமவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒன்றே இல்லை. இவ்விருவர்களைப் பற்றியல்ல இப்போதைய பிரச்சனை, கடவுளோ இல்லையோ, இந்த இயற்கையின் சீற்றம் மனிதனை இவ்வளவு தொல்லைக்கு உள்ளாக்குவதேன்?
அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மற்றும் ஃப்ளோரிடா மாகாணங்களில் இரு வேறு விதமான இயற்கைச் சீற்றங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். எத்தனை மக்கள் உயிரிழந்தனர்? எத்தனை காயங்கள்? எத்தனை பொருட்சேதங்கள்? எத்தனை பேர் தங்கள் சொந்த ஊர் விட்டு வேறு இடங்களுக்குத் தங்களின் சொந்த நாட்டிலேயே அகதிகளைப்போல குடிபெயர நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணந்தான் என்ன? பருவநிலை மாற்றங்கள், க்ளோபல் வார்மிங்க் போன்ற விஷயங்களையும் தாண்டி ஏதேனுமொரு தத்துவார்த்தமான காரணங்கள் இருக்கக்கூடுமோ? அவை என்னவென்று அறிந்து கொள்ள இன்னும் நமக்கு ஞானம் பிறக்கவில்லையோ?
இருக்கலாம். அந்த ஞானம் பிறப்பதற்காகக் காத்திருக்கும் வேளையில், நம்மால் செய்ய முடிந்ததுதான் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய முயற்சிக்கலாம்; அப்படி நன்மை செய்ய முடியாத பட்சத்தில் தீமையாவது செய்யாமல் இருப்பதில் உறுதியாக இருக்கலாம். நம் போன்ற சாதாராணமானவர்கள் பெரும்பாலும் பிறருக்குச் செயலால் தீமை செய்வதில்லை. ஆனால், சில சந்தர்ப்பங்களில் அறியாமையின் காரணமாக நினைப்பாலும் அல்லவை செய்து விடுகிறோம். பொறாமைப்படுவதால், கோபப்படுவதால், பிறரை எள்ளி நகையாடுவதால், ஏதேனும் அவர் மனம் புண்படும்படிப் பேசிவிடுவதால் எனச் சிறு சிறு விஷயங்களில் நாம் செய்யும் தவறுகளைக் கட்டுப்படுத்தினாலே இயற்கை தன்னிலை விட்டு இறங்கி வந்து நம்மீது பரிவு காட்டுமாம், வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார்.
இது சரியா இல்லையா என்று விவாதம் நடத்துவதை விட்டுவிட்டு, அல்லதைக் களைய முயற்சிக்கலாமே. எப்படி இருந்தாலும் அவை தவிர்க்கப்பட வேண்டியவைதானே?
நன்றி,
ஆசிரியர்.
தலையங்கம் மிக அருமை