திரைப்படத் திறனாய்வு – வன யுத்தம்
பனிப்பூக்களில் திரைப்படத் திறனாய்வுகள் குறிஞ்சி நிலப் படங்களாகவே எழுதுவது (இதற்கு முன்பு கும்கி) ஒரு சாதாரண நிகழ்வே, எல்லோரும் காட்டுவாசிகள் எண்ணி விடாதீர்கள்!
”குப்பி” என்றொரு படத்தை எடுத்த ரமேஷ் என்பவர் இந்தப் படத்தின் இயக்குநர், சாண்டல்வுட்டை (அதாங்க கன்னடச் சினிமாத்துறையின் பெயர்) சார்ந்தவர். குப்பி படத்தில் விடுதலைப்புலிகள் என்று சொல்லப்படும் சிவராசன்/தானு பெங்களூருவில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட கதையைப் படமாக்கினார்.
”வனயுத்தம்”, “குப்பி” இரண்டுக்கும் பல ஒற்றுமைகள், 1. காவல்துறையின் பார்வையில் இருந்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது. 2. இரண்டிலுமே வீழ்த்தப்பட்டோர் உயிருடன் இல்லை, தங்கள் வாதத்தை எடுத்துரைக்க!
உயிருடன் உள்ள வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அவர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின்படி அவர் தொடர்பான அனைத்துப் பகுதிகளும் படத்திலிருந்து நீக்கப்பட்டதுடன், அவருக்கு நட்டஈடும் வழங்கப்பட உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
ராபின்குட் கதையைப் பல நூற்றாண்டுகளாகக் கதைகளாகவும், நாடகமாகவும், திரைப்படமாகவும் சொல்லியிருக்கிறார்கள், அவர் காட்டில் இருப்பார், வில்வித்தையில் வல்லவர், செல்வந்தரிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்குபவர், பெண்களை மதிப்பவர் என்றெல்லாம் காண்பிக்கப்படும் அவற்றை ஒத்து நோக்கும் போது நடுநிலையாகக் கதையைச் சொல்வதற்குப் படைப்புத் திறனும் வேண்டும் கொஞ்சம் தைரியமும் வேண்டும், வனயுத்தத்தில் அது மிகக்குறைவு.
வீரப்பன் என்பவன் எதனால் காவல்துறையை எதிர்த்தான், சந்தன மரத்தை விற்ற பணத்திலும், ஆட்களைக் கடத்தி சம்பாதித்தாகக் கூறப்படும் பணத்தையும் என்ன செய்தான் என்பதையும் படத்தில் சொல்லியிருக்க வேண்டும். வனப்பகுதி மக்கள் அவனைக் காட்டிக் கொடுக்காமல் ஆதரித்ததும் படத்தில் மறைக்கப் பட்டுள்ளது. செருப்பில்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் அலைந்த வீரப்பனிடம் கைப்பற்றப் பட்டது என்ன?
இயக்குநர் சாமர்த்தியசாலி எள்ளளவும் அரசாங்கத்தையோ காவல்துறையையோ பழி சொல்லாமல் படம் எடுத்திருக்கிறார். வனப்பகுதி மக்களிடம் பல்லாண்டுகளாக நிகழ்த்திய வன்கொடுமைகளையா அவர் காட்டப்போகிறார்?
அர்ஜுன் விஜயகுமாராக வருகிறார், அவரைப் போன்று தோற்றமளிக்க மீசையின் அடர்த்தியை மட்டும் குறைத்துக் காண்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான், வேறொன்றும் சொல்லிக்கொள்வது போல் இல்லை. வீரப்பனாக கிசோர் கனக்கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார் மனிதர், அதே மீசை, கட்டுக்கோப்பான உடல்வாகுடன் அருமையான நடிப்பு. பல காணொளிகளில் நக்கீரன் கோபால் காட்டிய மாதிரியே நடித்திருக்கிறார்.
பூலான் தேவி கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவே ஆனதை மனதில் கொண்டு, வீரப்பனை சரணடையாமல் இருக்க அவனைக் கொல்வதற்கு மட்டுமே காவல்துறை திட்டம் வகுக்கிறது. படத்திலும் கொலை செய்ய மட்டுமே திட்டம் வகுக்கிறார்கள், கடைசியாக நாலைந்து பேருடன் மட்டுமே இருக்கிறான், இருக்கும் இடமும் தெளிவாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் வழியாகத் தெரிகிறது, பெரும் படையே வைத்திருந்த STF அதற்கு முயற்சியே செய்ய வில்லை.
வீரப்பனைப் பற்றிய காவல்துறையின் டைரி குறிப்பு என்று பெயரிட்டிருக்கலாம், பொருத்தமாக இருந்திருக்கும். பாடல்கள் இல்லாமல் ஆவணப்படமாக எடுக்க முனைந்திருப்பதாகத் தெரிகிறது, ஆதலால் மேற்கூறிய பெயர் சரியாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.
வீரப்பனுக்கு பிறகாவது வன வளத்தை முற்றிலும் அரசாங்கம் காப்பற்றட்டும், முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளத்தை குலைக்காமல் இருந்தால் நாட்டுக்கும் உலகுக்கும் நல்லதே.
மா.சிவானந்தம்