மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்
இயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், சோளம் போன்றவற்றுக்கும், அந்தோசயனைஸ் (Anthocyanins) என்பது சிகப்பு வண்ணத்தை ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றுக்கும் கொடுக்கும் இயற்கை ரசாயன வஸ்துகள்.
சூரிய ஒளி குறைந்து, இரவின் நீளம் அதிகரிக்கும் போது, இலைகளில் நடக்கும் உணவு உற்பத்தி குறைந்து, க்ளோரொஃபில் குறைந்து, பிற நிறங்கள் தென்படத் தொடங்குகின்றன. சிறிது காலத்தில் அந்த இலைகள் சருகாகி மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்துவிடும். இப்படி அந்த இலைகள் அதனுடைய பயணத்தில் நிகழ்த்தும் வர்ணஜாலங்கள், மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துபவைகளாக உள்ளன.
குளிரின் தாக்கம் அதிகமிருக்கும் வட மாகாணங்களில் தான், இந்த நேச்சர் மேஜிக்கைக் காணும் வாய்ப்பு அதிகமிருக்கும். மின்னசோட்டாவில் இதனைத் தரிசிப்பதற்குப் பல இடங்கள் உள்ளன.
எந்தச் சமயத்தில், எந்த இடத்திற்குச் சென்றால், எம்மாதிரியான நிறங்களைக் காணலாம் என்பதற்கு மின்னசோட்டாவின் இயற்கை வளத்துறையின் இணையத்தளம் பெரும் உதவி புரியும்.
https://dnr.state.mn.us/fall_colors/index.html
என்ன நிறத்தைப் பார்க்க ஆசைப்படுகிறோம், எவ்வளவு தொலைவு செல்லத் தயாராக இருக்கிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதையெல்லாம் பொறுத்து நமது வண்ணம் காண் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்.
மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்
மின்னசோட்டா ஆர்போரிட்டம் (Minnesota Arboretum)
ட்வின் சிட்டீஸில் இருப்பவர்கள், ரொம்பவும் அலையத் தேவையில்லாமல், நேரே ஆர்போரிட்டம் சென்று விடலாம். ஊருக்குள்ளே இருக்கும் நந்தவனம் இது. எக்காலத்தில் சென்றாலும் நன்றாக இருக்கும். இலையுதிர் காலத்தில் பார்க்க ஆசைப்படும் வகையிலான வண்ணமிகு மரங்கள் பலவற்றை இந்த ஆயிரம் ஏக்கர் மெகா தோட்டத்தில் காணலாம். ஒரு நாளில் பார்த்துவிட்டு வரலாம் என்றிருப்பவர்களுக்குச் சரியான இடம் இது.
நார்த் ஷோர் ட்ரைவ் (North shore drive)
லேக் சுப்பீரியர் கரையோரம் இருக்கும் அனைத்து இடங்களும் இந்தச் சமயத்தில் பார்க்க அம்சமாக இருக்கும். லட்சன் மலை, டெட்டகொட்சே, கிராண்ட் மரைஸ், கன்ஃப்ளின்ட் ட்ரெயில் என வண்ணங்களான இடங்கள் பல உள்ளன. எப்போதுமே அழகாக இருக்கும் இந்தப் பிரமாண்ட ஏரிக்கரையோரம், இந்தக் காலத்தில் வண்ணமயமாக உச்சக்கட்டப் பேரழகோடு இருக்கும். ஒரு வாரயிறுதியைக் கலர்ஃபுல்லாகக் கழிக்கும் எண்ணமுள்ளோர், வண்டியை இங்கு விடலாம்.
மில் லாக்ஸ் லேக் (Mille Lacs Lake)
மின்னசோட்டாவின் உள்ளே இருப்பதில் இரண்டாவது மிகப்பெரிய ஏரி இது. மின்னியாபொலிஸில் இருந்து வடக்கே செல்லும் 169, நேரே சென்று முட்டுவது இந்த ஏரியில் தான். மீன் பிடித்தலுக்குப் பேர் போன இந்த ஏரியின் பக்கம், இலையுதிர் பருவத்தில், மக்கள் வண்ணமிகு அழகு இயற்கைச் சூழலுக்காகவும் சென்று தங்குவார்கள். இந்த ஏரியைச் சுற்றி சுமார் 75 மைல்களுக்குக் காண இடங்கள் உண்டு.
செயின்ட் கிராய் (St. Croix River Way)
மின்னசோட்டா விஸ்கான்சின் எல்லையைப் பிரித்தவாறு ஓடி வரும் செயின்ட் கிராய் ஆற்றின் கரையோரம் செல்லும் சாலையின் இரு பக்கமும் வண்ணச் சிதறலுடனான மரங்களைக் காண்பது ஒரு சுகம் என்றால், இந்த ஆற்றில் படகில் சென்று கொண்டே இரு பக்கக் கரையோரம் இருக்கும் வண்ண மலைத்தொடர்களைக் காண்பது மற்றொரு சுகம். கயாக்கும் ஓட்டத் தெரிந்து விட்டால், வேறென்ன வேண்டும்? வண்ணங்கள் ஆற்றுத் தண்ணீரில் பிரதிபலித்து டபிள் டமாகா சந்தோஷத்தை அளிக்கும்.
க்ரேட் ரிவர் ப்ளஃப்ஸ் (Great River Bluffs State Park)
இலையுதிர் வண்ண மாற்றம் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. முதலில் வட மினசோட்டாவில் தொடங்கி, பிறகு தெற்கே மாறும். அதனால், செப்டம்பர் மாத இறுதியில் வண்ணங்கள் பார்க்க நினைத்தால், வடப்பக்கம் உள்ள இடங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடங்கலாம். அப்படிச் செப்டம்பரை மிஸ் செய்பவர்கள், பிறகு தெற்கே சென்று வண்ணங்களை விரட்டிப் பிடிக்கலாம். க்ரேட் ரிவர் ப்ளஃப்ஸ் பார்க், தெற்கே வினோனாவில் உள்ளது. மிஸ்ஸிஸிப்பி ஆற்றின் அழகையும், வண்ணமிகு மலைத்தொடரையும் ஒரு சேர இங்கு சென்றாலும் ரசிக்கலாம்.
இது தவிர, ஃபோர்ட் ஸ்னெல்லிங் பூங்கா, பெமிட்ஜி, ஐடாஸ்கா பூங்காக்கள், அயர்ன் ரேஞ்ச் சுற்று வட்டாரம், ட்வின் சிட்டீஸ் உள்ளே இருக்கும் பல்வேறு ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என எல்லாமே இந்தச் சமயத்தில் அழகாக இருக்கும். இயற்கை ரசனை மிக்கவர்கள் மிஸ் செய்யக் கூடாத ஊரும், நேரமும் இது.
- சரவணகுமரன்
Tags: Arboretum, fall colors, Lake Superior, North shore drive, St. Croix River way