\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கல்லூரி நுழைவுத் தேர்வுகள்

அமெரிக்காவில் கல்லூரி வாசலை மிதிக்கவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தொக்கி நிற்கும் கேள்வி ‘சாட்’டா அல்லது ‘ஆக்டா’ என்பது தான். பல வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரித் தேர்வு முறைகள் அவரவர்  சேரவிருக்கும் கல்லூரியைப் பொறுத்து வேறுபட்டு வந்தது. கிழக்கு, மேற்கு விரிகுடாப் பகுதிகளில் இருந்த கல்லூரிகள் சாட் தேர்வையும், மத்திய மேற்குப் பகுதியில் இருக்கும் கல்லூரிகள் ஆக்ட் தேர்வையும் ஏற்றுக் கொண்டன.

ஆனால் சமீப காலங்களில் சாட் மற்றும் ஆக்ட் தேர்வு மதிப்பெண்கள் பெரும்பாலும் அனைத்துக் கல்லூரிகளாலும்  எந்த வேறுபாடுமின்றி சமமாக  ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மாணவர்கள் தங்களது திறன், தாங்கள் கல்லூரியில் படிக்கவிருக்கும் பாடம் ஆகியவற்றைப் பொறுத்து சாட் (SAT) அல்லது ஆக்ட் (ACT) இரண்டில் எந்தவொரு நுழைவுத் தேர்வையும் எழுதலாம்.

SAT – Scholastic Assessment Test (சாட் – கல்வி மதிப்பீட்டுத் தேர்வு)

சாட் நுழைவுத் தேர்வு  வாசித்தல், எழுதுதல் மற்றும் மொழித்திறன், கணிதம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் கணிதப் பகுதி கால்குலேட்டர் பயன்படுத்தி விடை தரக்கூடியவை, கால்குலேட்டர் பயன்படுத்தக் கூடாதவை எனும் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டது. மொத்த மதிப்பெண் 1600.

வாசித்தல் – இந்தப் பகுதியில் ஐந்து பத்திகளை வாசித்து அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அனைத்துமே புறநிலை வகை (Objective type) வினாக்கள். பத்திகள் வரலாறு, அறிவியல், சமூகப் பாடங்களிலிருந்து தரப்படும். சுமார் 62 கேள்விகளைக் கொண்டது வாசித்தல் பகுதி.

மொழி எழுதுதல் – இப்பகுதி 44 வினாக்களைக் கொண்டது. பத்திகளைப் படித்து அதில் திருத்தங்கள் செய்வது, அல்லது அவற்றை மேம்படுத்தி எழுதுவது, மாற்றுச் சொற்களைப் பயன்படுத்துவது போன்ற திறன்களை மதிப்பிடும் பகுதி இது. இதன் பத்திகள் சமூக ஆய்வுகள், அறிவியல் பாடங்களிலிருந்து தரப்படுகின்றன.

கணிதம் : இப்பிரிவு 58 கேள்விகளுடைய இரண்டு பகுதிகளைக் கொண்டது. கணிப்பான் (Calculator) பயன்படுத்தக்கூடிய பகுதி 38 கேள்விகள்; கணிப்பானின்றி செய்ய வேண்டியவை 20 கேள்விகள். இவற்றில் 45 பல் விருப்ப (Multiple choice) வினாக்கள். 13 சரியான கட்டங்களைத் தேர்வு செய்யும் (Grid-in) வினாக்கள்.

இவற்றைத் தவிர விருப்பத் தேர்வாக (optional) கட்டுரையும் எழுதலாம்.

ACT – American College Testing (ஆக்ட் – அமெரிக்கக் கல்லூரித் தேர்வு)

ஆக்ட் நுழைவுத் தேர்வு  வாசித்தல், ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 36 மதிப்பெண்களுக்கு மதிப்பிடப்பட்டு, பின்னர் இவற்றின் சராசரி கணக்கிடப்படும்.

ஆங்கிலம் – 45 மணித்துளிகள் கால அளவைக் கொண்ட இப்பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். ஐந்து பத்திகள் அடங்கிய இத்தேர்வில், மாற்றுச் சொற்கள், இலக்கணப் புரிதல், வாக்கிய அமைப்பின் முக்கியத்துவம் போன்றவை அறியப்படும்.

கணிதம் – 60 மணித்துளிகளில் 60 வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். இயற்கணிதம் (Algebra),  வடிவவியல் கணிதம் (Geometry), முக்கோணவியல் (Trignometry) ஆகிய உட்பகுதிகளைக் கொண்ட கணிதப் பகுதியில் சில வகையான கணிப்பான்கள் அனுமதிக்கப்படும்.

வாசித்தல் – 35 மணித்துளிகளில் 40 வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். மூன்று பத்திகளை வாசித்து அதனைத் தொடர்ந்து வரும் கேள்விகளுக்குச்

சரியான விடைகளைத் தெரிவு செய்யவேண்டும். பத்திகளின் உள்ளார்ந்த, தருக்கக் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் திறன் இப்பிரிவில் அளவிடப்படுகிறது.

அறிவியல் – 35 மணித்துளிகள் 40 வினாக்கள். தரவுகளைப் புரிந்து கொள்ளுதல், அவற்றை ஆராய்ந்து அலசுதல், அவற்றின் எதிர்விளைவுகளை ஆராய்தல் என்ற வகையில் ஏழு பத்திகள் கொண்ட இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சிற்சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

சாட் தேர்வைப் போலவே விருப்பத் தேர்வாக (optional) கட்டுரையும் எழுதலாம். இரண்டிலும் கட்டுரைக்கான மதிப்பெண் தனியாகத் தரப்படும். கல்லூரிகள் இம்மதிப்பெண்களை உபரியாகக் கருதுகிறார்களே தவிர இவை மாணவர் தெரிவு முடிவில் பெரிய மாற்றங்களைத் தருவதில்லை. எனினும் மாணவர் சேர விரும்பும் படிப்புக்கு இக்கட்டுரைகள் உதவக்கூடும்.

  • சாட் தேர்வின் மொத்த காலநேரம், 3 மணி 50 நிமிடங்கள். ஆக்ட் தேர்வின் மொத்த கால நேரம் 3 மணி 35 நிமிடங்கள். கட்டுரைப் பகுதிக்குத்   தனியாக 40 மணித்துளிகள் தரப்படுகின்றன.
  • இந்த இரண்டு தேர்வுகளிலும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் (Negative marks) குறைக்கப்படாது.
  • இத்தேர்வுகளைப் பலமுறை எடுக்கலாம். நீங்கள் விரும்பும் அதிக பட்ச மதிப்பெண்ணை மட்டும் விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு அனுப்பலாம்.
  • ஆக்ட் தேர்வு ஆண்டுக்கு 5 முறை நடைபெறுகிறது. சாட் தேர்வு ஆண்டுக்கு 6 முறை நடைபெறுகிறது.
  • சாட் தேர்வுக்கும் (2017 – $52.50), ஆக்ட ($46) தேர்வுக்கும் கட்டணங்களில் பெரிய வித்தியாசமில்லை. கட்டுரைத் தேர்வுக்குக் கூடுதலாகக்  கட்டணம் ($6 முதல் $1௦ வரை) செலுத்தவேண்டியிருக்கும்.
  • இரண்டு தேர்வுகளிலும் வினா கேட்கப்படும் வரிசைகள் மாறுபடும். சாட் தேர்வில் வினாக்கள் வரிசைக்கிரமமாகக் கேட்கப்பட்டு வருகின்றன. ஆக்ட் தேர்வில் இவைச் சமவாய்ப்பு (random) முறையில் இருப்பதால் பத்திகளை மேலும் கீழுமாகப் பல முறை படிக்க வேண்டி வரலாம்.
  • ஆக்ட் தேர்வில் கணிதப் பகுதிக்கு, சாட் தேர்வை விடப் பல வாய்பாடுகளை மனனம் செய்ய வேண்டியிருக்கலாம்.
  • சாட் தேர்வில் பெரிய அளவில் அறிவியல் பகுதி இல்லை. அறிவியல் நாட்டம் கொண்டவர்களுக்கு ஆக்ட் எளிதாக இருக்கக்கூடும்.

இரண்டு தேர்வுகளுக்கும் பாட வித்தியாசங்கள், கால அளவு, கேட்கப்படும் கேள்விகள் அளவில் வித்தியாசங்கள் இருந்தாலும் அவற்றின் சிக்கல்தன்மையைப் பொறுத்த அளவில் (complexity) இரண்டும் ஏறக்குறைய ஒரே நிலையிலுள்ளவை. சில கல்லூரிகள், சில படிப்புகள் இவற்றில் ஒன்றிற்கு முன்னுரிமை தர நேரிடலாம். உங்களது படிப்பும், கல்லூரியும் இவற்றில் எதற்கு முன்னுரிமை தருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய நுழைவுத் தேர்வுகள் இன்றி உயர்பள்ளியில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டே அனுமதிக்கும் சில கல்லூரிகளும் உள்ளன. இதற்கு உயர்பள்ளியில் மிகச் சிறந்த மதிப்பெண் எடுப்பது மிகவும் அவசியம். தவிர மிகப் பொதுவான கல்லூரிப் பட்டங்களுக்கு மட்டுமே இவ்விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இவ்வகை நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைப் பொறுத்தே கல்லூரி உதவித் தொகைகள் (scholarship) வழங்கப்படுகின்றன. நுழைவுத் தேர்வு எழுதாவிட்டால் உதவித்தொகை கிடைப்பது அரிதாகிவிடும்.

எந்தத் தேர்வைப் பின்பற்றினாலும், அதற்கான பயிற்சியை இயன்ற வரையில் முன்கூட்டியே தொடங்கி விடுவது பெரிதும் உதவும். தினமும் அரை மணி நேரம் இத்தேர்வுகளுக்கான பயிற்சியை மேற்கொள்வது நலமளிக்கும். இப்பயிற்சிகளின் பொழுது காலக்கெடு வைத்துக் கொண்டு செய்வது சிறந்த முறையாகும்.

பயிற்சியாக இரண்டு தேர்வுகளையும் எடுத்துப் பார்ப்பது, உங்களின் புரிதலைத் தெளிவுபடுத்தக் கூடும். உங்கள் நண்பர், உறவினர் எவரேனும் இத்தேர்வுகளை எடுத்திருந்தால் அவர்களுடன் கலந்து பேசுவது உங்களது சந்தேகங்களுக்கு விடையளிக்கக் கூடும்.

உங்களது தெரிவு எதுவாக இருந்தாலும், அதில் சிறப்பாக வெற்றிபெற எங்களது வாழ்த்துகள்.

   ரவிக்குமார்

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad