தெரிஞ்சுக்கலாமா? – பாகம் 1
உலகின் நீளமான மயானம் (longest cemetry) எது தெரியுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான் நீளமான மயானம் என்றும் கருதப்படுகிறது. கட்டப்பட்டு 16௦0 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், நில நடுக்கம், கடும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், போர்ப் படையெடுப்புகள், பீரங்கித் தாக்குதல்கள் என அனைத்தையும் தாங்கி இன்றும் கம்பீரத்துடன், பெருமையுடன் நிற்கிறது இந்தச் சுவர்.
இன்று சீனா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த நாட்டை மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கியவர் க்வின் ஷி ஹுவாங் எனும் பேரரசர். 220ஆம் ஆண்டில் இவர் மன்னராக முடி சூடிக் கொண்டபின், தானே என்றும் அந்த நாட்டை ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதிரிகள் யாரும், குறிப்பாக வட பகுதியில் இருந்த மங்கோலியர்கள் தன்னை வீழ்த்திவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாப்புக்காகச் சுவர் ஒன்றை எழுப்ப நினைத்தார்.
அதற்கு முன் பல துண்டுகளாக உடைந்து கிடந்த சீன நிலப்பகுதியில் குறு மன்னர்கள் தங்கள் எல்லைகளைக் குறிக்க இது போன்ற சுவர்களை எழுப்பியிருந்தனர். இவற்றில் வட பகுதியை நோக்கியிருந்த சுவர்களை இணைத்து, 3000 மைல் (10000 லீ) நீளமுள்ள பெருஞ்சுவரை எழுப்ப முனைந்தார் க்வின் ஷி ஹுவாங். ஹுவாங் வம்சம் வீழ்ந்த பிறகு, வே வம்சம், டான் வம்சம், யுவான் வம்சம் எனப் பலர் ஆட்சி புரிந்த
போது, இச்சுவர் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக அமைந்தது. எனினும் இவர்கள் சுவர் மீது பெரும் அக்கறை செலுத்தவில்லை.
இவர்களைத் தொடர்ந்து, 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த மிங் வம்சத்தினரால் சுவர் கட்டுமானப் பணி தொடர்ந்தது. தற்போதுள்ள சீனப் பெருஞ்சுவரைக் கட்டி முடித்தவர்கள் இவர்களே
கிழக்கே ஷான்ஹாயில் தொடங்கி மலைகள், காடுகள், பள்ளத்தாக்குகளைக் கடந்து மேற்கு நோக்கி சென்று தெற்கே மங்கோலியா வரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர். இதன் உண்மையான நீளத்தைக் கண்டறிய சீன அரசாங்கம் புதியதொரு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது.
அண்மையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் இப்பெருஞ்சுவர் சுண்ணாம்பு, அரிசிக் கஞ்சி, தாவரச் சாறுகள் கலந்து கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பிணைத்து இறுக்கும் தன்மை தான், சீனப் பெருஞ்சுவர் சிதையாமல் வலுவோடு இருப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிடு
கிறார்கள். மேலும் செங்கல்கள் புழக்கத்தில் இல்லாத காலங்களில் பாறைகளையும், மரக் கிளைகளையும், களிமண், சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கட்டியுள்ளனர்.
பல நூற்றாண்டுகள் தொடர்ந்த இச்சுவரின் நிர்மாணப் பணியில் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் மாண்டதாகவும். அவர்களின் உடல்கள், பெருஞ்சுவருக்குள்ளேயே புதைக்கப்பட்டதால் இது உலகின் நீளமான மயானம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சீனப் பெருஞ்சுவர் – சில குறிப்புகள்
- சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. அகலம் குறைந்த பட்சமாக சில இடங்களில் 15 அடியாகவும், அதிகபட்சமாக 20 அடியாகவும் உள்ளது.
- இதனை ஒற்றை நீளச் சுவராகக் குறிப்பிட முடியாது. சுவரின் தோராய நீளம் சுமார் 5500 மைல்கள் எனச் சொல்லப்பட்டாலும், சில இடங்களில் இரட்டை இணைச் சுவராகவும், கோட்டைகளாகவும், கண்காணிப்பு அரணாகவும், கொத்தளங்களாகவும் அமைந்துள்ள பகுதிகளின் மொத்த நீளம் 13000 மைல்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள்.
- கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், யுனெஸ்கோ நிறுவனத்தால் ‘உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது,
- மனிதனால் உருவாக்கப்பட்டவைகளில் விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம் சீனப்பெருஞ்சுவர்.
- தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் ‘சைமைடாயு’, ‘ஜியான்கு’ மற்றும் ‘மடியான்யு’ போன்ற பகுதிகளில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
- குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சற்றேறக்குறைய 1,000,000 க்கும் அதிகமானோர் இச்சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
- சில இடங்களில் போர்ச் சமயங்களில் சுடப்பட்டு பாய்ந்த குண்டுகளை இன்றும் காண முடிகிறது.
- சீனாவில் நிகழ்ந்து வரும் தொழிற்துறை, ஜனத்தொகை மாற்றங்களால் கான்சு, நிங்சியா போன்ற மாகாணங்களிலுள்ள சுவர்கள் இன்னும் 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிடக்கூடிய வாய்ப்புள்ளது.
– சுமி
Tags: தெரிஞ்சுக்கலாமா